ஶ்ரீதர் வேம்புவின் மீது அவருடைய மனைவி பிரமிளா ஶ்ரீனிவாசன் பரபரப்பு குற்றச்சாட்டுகளை அமெரிக்காவில் முன்வைக்க, அதற்கு ஶ்ரீதர் வேம்பு பதில் சொல்ல, அவர்களது தனிப் பட்ட வாழ்க்கை இப்போது பலரும் பேசும் விஷயமாக மாறியிருக்கிறது.
“29 ஆண்டுகால திருமண வாழ்க்கையை உதறிவிட்டு, ஆட்டிஸம் பாதித்த மகனையும் கைவிட்டுவிட்டார். ஜோஹோ நிறுவனத்தில் அவர் வசம் இருந்த பங்குகளை, அறிவுசார் சொத்துகளை எங்களுடைய ஒப்புதல் இல்லாமல் அவருடைய குடும்ப உறுப்பினர்களுக்கு மாற்றிவிட்டார்…” என்று ஶ்ரீதரின் மனைவி பிரமிளா புகார் அடுக்க, அதற்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானர் ஶ்ரீதர் வேம்பு. ட்விட்டரில் அவர் சொன்னதாவது…

“என் தனிப்பட்ட வாழ்க்கை, பிசினஸ் வாழ்க்கைக்கு முற்றிலும் மாறாக, மிகவும் சோகம் நிறைந்ததாக இருந்திருக்கிறது. ஆட்டிஸம் எங்கள் வாழ்க்கையை அழித்து, என்னைத் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு மன அழுத்தத்தை உண்டாக்கியது. நானும் என் மனைவி பிரமிளாவும் 15 ஆண்டுகளாக இந்த ஆட்டிஸத்துடன் போராடி வருகிறோம். 24 வயதாகும் எங்கள் மகனுக்கு எடுத்துக்கொண்ட சிகிச்சைகள் பெரிதாகப் பலன் அளிக்கவில்லை. அதனால் இந்தியாவில் கிராமத்தில் அன்பான மக்களுடன் இருந்தால், அவன் நலம் மேம்படும் என்ற நோக்கத்தில் இந்தியாவுக்குத் திரும்பினேன். ஆனால், நான் மகனை சரிசெய்வதிலிருந்து பின்வாங்குவதாக என் மனைவி பிரமிளா தவறாகப் புரிந்து கொண்டார். அதனால் எங்களுடைய திருமண வாழ்க்கையும் உடைந்தது” என்று சொல்லியிருக்கிறார் ஶ்ரீதர்.
இவர்களுடைய மணமுறிவு விவகாரம் ஜோஹோ நிறுவனத்தின் பங்கு மற்றும் சொத்துகள் சார்ந்து புதிய கேள்விகளையும் எழுப்பியுள்ளது. ஶ்ரீதரின் மனைவி பிரமிளா, “எனக்குத் தெரியாமல் ஶ்ரீதர் வேம்பு அவருடைய பங்குகளை அவருடைய சகோதரி ராதா வேம்புக்கும், சகோதரர் சேகர் வேம்புவுக்கும் மாற்றியுள்ளார்” என புகார் கூறியிருக்கிறார். இதன்படி, ஜோஹோ நிறுவனத்தின் பங்கு விவரங்களைப் பார்த்தால், ராதா வேம்புவிடம் 47.8% பங்குகளும், சேகர் வேம்புவிடம் 35.2% பங்குகளும், ஶ்ரீதர் வேம்பு வசம் 5% பங்குகளும் உள்ளன.
மதிப்பின் அடிப்படையில் பார்த்தால், ராதா வசம் 2.2 பில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளும், சேகர் வசம் 1.6 பில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளும், ஶ்ரீதர் வசம் 225 மில்லியன் டாலர் பங்குகளும் இருக்கின்றன. ஜோஹோ நிறுவனத்தின் பிரதான நிறுவனர் மற்றும் சி.இ.ஓ-வாக இருக்கும் ஶ்ரீதர் வேம்புவின் வசமிருக்கும் பங்குகள் குறைவாகவும், நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பில் மட்டுமே இருக்கும் சகோதரி, சகோதரர் வசமிருக்கும் பங்குகள் பெரும்பான்மையாகவும் இருப்பதுதான் இப்போது பிரச்னைக்குக் காரணம். மனைவியுடனான திருமண முறிவுப் பிரச்னைக்கு முன்னரே பங்குகளை ஶ்ரீதர் வேம்பு மாற்றியிருப்பதாகக் கூறப்படுகிறது.

ஏனெனில், இவர்களுடைய திருமண முறிவு வழக்கு கலிபோர்னியா நீதிமன்றத்தில் உள்ளது. அங்குள்ள சட்டப்படி, திருமண முறிவு நடந்தால், மனைவிக்கு 50% சொத்துகளைப் பகிர வேண்டும். இதன் காரணமாகவே அவர் தனது பங்குகளைக் குடும்ப உறுப்பினர்களுக்கு மாற்றியிருக்கலாம் என்கிறார்கள்.
ஆனால் ஶ்ரீதர் வேம்புவோ இதை முற்றிலும் மறுக்கிறார். “சந்தேகத்துக்கு இடமில்லாமல் இதைக் கூறுகிறேன். நான் என் நிறுவனப் பங்குகளை யாருக்கும் மாற்றவில்லை. மேலும், நான் மனைவியையும் மகனையும் நிதி ஆதரவு தராமல் கைவிட்டு விட்டேன் என்று சொல்வது முற்றிலும் கற்பனையான குற்றச்சாட்டு.

என்னுடைய கடந்த மூன்று ஆண்டு கால அமெரிக்க சம்பளம் மனைவியிடம்தான் இருக்கிறது. அங்குள்ள வீட்டையும் அவரிடம்தான் கொடுத்திருக்கிறேன். அவருடைய அறக்கட்டளைக்கும் ஜோஹோ ஆதரவளித்து வருகிறது. தொடர்ந்து என் ஆதரவு அவர்களுக்கு இருக்கும். இப்போதுள்ள எல்லாப் பிரச்னைக்கும் காரணம் என் சித்தப்பா ராம். அவர்தான் என் மனைவியிடம் இல்லாத பொல்லாத பொய்களைக் கூறி எனக்கு எதிராகச் செயல்பட வைக்கிறார்” என்று சொல்லியிருக்கிறார்.
ஶ்ரீதர் வேம்புவுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல், அவருடைய தனிப்பட்ட பிரச்னை ஆகும். அவருக்கு ஏற்பட்டுள்ள இந்த சிக்கலில் இருந்து அவர் எப்படி மீண்டும் வருவார் என்பதைப் பொறுத்தே ஜோஹோ நிறுவனத்தின் எதிர்காலம் இருக்கிறது!
Author: ஜெ.சரவணன்