டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரை ஐ.சி.சி யின் நடைமுறைகள் அனைத்து நாடுகளுக்கும் ஒப்பானதாக ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறதா? எனும் கேள்வி கிரிக்கெட் சமூகத்திலிருந்தே ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது.
மேற்கிந்திய தீவுகளின் ஆல்ரவுண்டர் ஜேசன் ஹோல்டர் சமீபத்தில், “அந்த பெரிய 3 அணிகள் தவிர்த்து யாருமே டெஸ்ட் கிரிக்கெட்டை அவ்வளவாக ஆடமுடியாதவாறு சூழ்நிலைகள் உருவாகியிருக்கிறது” என வேதனை தெரிவித்திருந்தார். “50 டெஸ்ட் போட்டிகளை எட்டவே எனக்கெல்லாம் இன்னமும் ஏழு ஆண்டுகள் பிடிக்கும்” என ஆதங்கப்பட்டிருக்கிறார் தென்னாப்பிரிக்காவின் ஆன்ரிச் நோர்கியா.

`பிக் 3′ எனப்படும் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்துக்கு மட்டுமே டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான களத்தில் அதிகப் போட்டிகள் ஓரவஞ்சகமாகக் ஐசிசியால் கொடுக்கப்பட்டிருக்க, மற்ற நாடுகளோ குறைந்த போட்டிகளோடு வஞ்சிக்கப்பட்டிருக்கின்றன. ஐசிசியின் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் நிகழ்ச்சி நிரலில், `Leveling the playing field’ என்ற சொற்பதம் ஒட்டுமொத்தமாகப் பொய்த்திருக்கின்றது.
குறிப்பிட்ட அந்த மூன்று அணிகளின் மீதான ஐசிசியின் கரிசனம் எக்காலத்திலும் தொடர்கிறது. கடந்த, நடப்பு மற்றும் வரவிருக்கும் என மூன்று சுற்றுகளிலுமே பிக் 3-க்கு 18 போட்டிகளுக்கு மேல் தரப்பட்டு, மற்ற அணிகளுக்கோ 12 – 14 போட்டிகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. இதிலிருந்துதான் ஐசிசியின் அறமற்ற நெறிமுறை வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. இது தரவரிசைப் பட்டியலை நேரடியாக பாதிக்கிறதா என்பதை அறிய அது மதிப்பீடு செய்யப்படும் முறை குறித்து முதலில் தெளிவுகொள்வோம்.
கடந்த சுற்றில் இரு அணிகள் விளையாடும் ஒவ்வொரு தொடருக்கும் 120 புள்ளிகள் வழங்கப்பட்டன. எத்தனை போட்டிகள் கொண்ட தொடரென்பதைப் பொறுத்து ஒரு போட்டியில் வெல்லும் அணி பெறும் புள்ளிகள் முடிவு செய்யப்படும். இரு போட்டிகள் கொண்ட தொடரெனில் ஒரு போட்டியை வெல்லும் அணிக்கு 60 புள்ளிகளும், மூன்றெனில் ஒரு வெற்றிக்கு 40-ம், நான்கெனில் 30-ம், ஐந்தெனில் 24-ம் தரப்படும். இம்முறையில் ஒரு நியாயமற்ற கணக்கீடு இருப்பதாக சர்ச்சைகள் எழுந்தன.
ஒரு வெற்றிக்கான சன்மானம் நான்கு போட்டிகளைக் கொண்ட தொடரில் 30 புள்ளிகள் எனில், இரு போட்டிகள் கொண்ட தொடரில் இரட்டிப்பாக 60. ஆகவே இருபோட்டிகளைக் கொண்ட தொடர்களை அதிகமாக விளையாடும் அணிகளுக்கு சாதகமாவதற்கான சாத்தியக்கூறுகளுண்டு. 2021-23 சுற்றில் இது மாற்றியமைக்கப்பட்டது.
எல்லா அணிகளும் ஆறு தொடர்களில் ஆடவேண்டும், ஒரு போட்டியை வென்றால் 12 புள்ளிகள், டிராவுக்கு 4, டை ஆனால் 6 என்ற புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இங்கேயும் ஐசிசி நல்லபிள்ளை வேடம் தரித்து நியாயத்தின் காப்பாளராக நாடகம் நடத்தியது.

அணிகள் சமமான எண்ணிக்கையிலான தொடர்களில் ஆடுகின்றனவே ஒழிய போட்டிகளில் ஆடுவதில்லை. அதனால் ஏற்படும் ஏற்றத்தாழ்வை நேர்செய்கிறோம் என்று புள்ளிகளின் அடிப்படையிலின்றி புள்ளிகளுக்கான விழுக்காட்டின் அடிப்படையில் தரப்பட்டியல் தயாரிக்கப்படும் என்றது. தலை சுற்றுகிறதா? எளிதான கணக்கீடுதான். ஒரு உதாரணத்தின் மூலம் தெளிவுபெறுவோம்.
இரு மாணவர்கள் முறையே 500 மதிப்பெண்களுக்கும் 600 மதிப்பெண்களுக்கும் தேர்வெழுதி உள்ளார்கள் எனக் கருதலாம். அதனை ஒப்பிட வேண்டுமென்றால் இருவரது மதிப்பெண்களையும் 100-க்கு மாற்றி சதவிகிதத்தின் அடிப்படையில் அவர்களை வரிசைப்படுத்துவோம் அல்லவா? அதைத்தான் ஐசிசியும் செய்கிறது.
வெற்றிப்புள்ளிகளின் அடிப்படையில் அல்ல எவ்வளவு எடுக்க வேண்டிய இடத்தில் அணிகளால் எவ்வளவு எடுக்க முடிந்திருக்கின்றதென்ற வெற்றி விழுக்காட்டின் அடிப்படையில் தரவரிசைப்பட்டியல் தயாராகிறது. இதைக்கேட்ட மாத்திரத்தில் எல்லாமே சரியாகத்தானே உள்ளது என்பது போன்றதொரு தோற்றப்பிழை உருவாகும். ஆம்! விதிமுறைப்படி சரிதான் சந்தேகமில்லை, ஆனால் தார்மீக அடிப்படையில்தான் ஐசிசி இங்கே தவறிழைக்கிறது.
டெஸ்ட் போட்டிகள் – ஐந்து நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம்கள். ஏற்கனவே பிக் 3-ன் உள்ளூர் கிரிக்கெட் அமைப்புக்கள் பலம் வாய்ந்தவை. ரஞ்சியிலும், கவுண்டியிலும் ஆடியே அவர்கள் ஆட்ட நுணுக்கங்களைக் கற்றறிவார்கள். ஆனால் எஞ்சிய நாடுகள் தங்களைப் பட்டை தீட்டிக்கொண்டு ஆக்கப்பாதையில் முன்னேற வாய்ப்புத்தருவது சர்வதேச டெஸ்ட் போட்டிகள்தான். அங்கே ஐசிசி பாகுபாடு பார்ப்பதுதான் நியாயமற்றதாகிறது. ஆறு தொடர்கள் என கண்ணாம்பூச்சி ஆடினாலும் அதில் ஆஸ்திரேலியாவுக்கு 19 இலங்கைக்கு 12 என்ற இடத்திலேயே ஐசிசியின் சாயம் வெளுக்கிறது.

சரி இதற்கென்ன காரணம் என்ற கேள்வி எழுகிறதா? வேறென்ன, காய்த்த மரம்தான் கல்லடி படுமென்றாலும் காய்க்கின்ற மரத்திற்குத்தானே கனிவும் கவனிப்பும்?! ஐசிசியும் இதைத்தான் செய்கிறது.
2019 – 2023 ஐசிசியின் வருமானத்தை கிரிக்கெட் போர்டுகளுக்கு பகிர்ந்தளிப்பதற்கான திட்ட வரையறையில் பிக் 3-ன் கிரிக்கெட் போர்டுகள் கூட்டாக ஈட்டும் வருமானம் தோராயமாக 672 மில்லியன் டாலர். தரவரிசைப் பட்டியலில் மீதமுள்ள 6 நாடுகளுக்கும் கிடைக்கும் பங்கு தலைக்கு 128 மில்லியன் டாலர் மட்டுமே அதாவது மொத்தமே 768 மில்லியன் டாலர்.
இதைக்கொண்டே முன்னதாக அந்தந்த நாடுகளின் மூலம் ஐசிசி ஈட்டும் வருமானம் எவ்வளவு இருக்குமென்பது புலனாகும்.
இது மட்டுமல்ல. “மூன்று நாட்களில் முடிந்தே போனாலும் இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்டுகள் கொண்டு வரும் வருமானத்தையும் கூட்டத்தையும் பங்களாதேஷ், மேற்கிந்தியத்தீவுகள் போன்ற நாடுகளால் கொண்டுவர முடியுமா? ஒரு பக்கத்தொடராக கடந்த ஆஷஸ் போல சுவாரஸ்யமேயின்றி நகர்ந்தாலும் அதற்கான ஈர்ப்பை அயர்லாந்தும் ஸ்காட்லாந்தும் ஏற்படுத்திவிட முடியுமா?” என தனது கல்லாவை நிரப்புவதில் மட்டுமே ஐசிசி குறியாக உள்ளது. இலங்கையும் தென்னாப்பிரிக்காவும் அடுத்த சுற்றில் ஆட உள்ள ஆறு தொடர்களுமே தலா இருபோட்டிகளை உள்ளடக்கியதுதான். அறத்தின் அடிப்படையில் இது சற்றும் சரியானதல்ல.
இவர்களது நிலையே இதுவென்றால் ஜிம்பாப்வே, ஐயர்லாந்து போன்ற நாடுகளின் நிலைமை என்ன? டெஸ்ட் என்பதே அவர்களுக்கு தொலைதூரத்திலுள்ள தொடுவானம் மட்டுமே. கடந்த ஆறு ஆண்டுகளில் மூன்று டெஸ்ட்களில் மட்டுமே ஆடியுள்ள ஐயர்லாந்து எங்கே சென்று முறையிடும், யாரிடம் புலம்பி அழும்?
இங்கிலாந்து கவுண்டியில் அணிகளின் திறனுக்கேற்றாற் போல் வெவ்வேறு டிவிஷன்களாகப் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படும் வழமை இருக்கிறது. அதேபோல் ரவுண்ட் ராபின் முறையில் இந்த 9 நாடுகளுக்கும் சமமான போட்டிகளைத் தந்து மோதவிடுவதோடு அசோஸியேட் நாடுகளுக்கு இடையேயும் இன்னொரு அடுக்காக டெஸ்ட் போட்டிகளை நடத்தி அதில் வெற்றி பெறும் அணிகளை முந்தைய குழுவிலுள்ள அணிகளோடு அடுத்தமுறை மோதவிடலாம். இது அவர்களுக்குள் உள்ள வேட்கையை உயிர்ப்போடு வைக்கும்.
Bazz Ball ஆடியும் இறுதிப்போட்டி வாய்ப்பைப் பறிகொடுத்த இங்கிலாந்தை மறந்துவிடுவோம். நியூசிலாந்துக்கெதிராக வீசப்பட்ட கடைசிப்பந்தோடு தங்களது கடைசி நம்பிக்கையையும் உடைத்தெறிந்த இலங்கைக்கு இன்னமும் சில போட்டிகள் தரப்பட்டிருந்தால் தரவரிசையில் இன்னும் பல மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும்.
இதனால் பாதிக்கபடுவது அணிகள் மட்டுமல்ல வீரர்களும்தான். 2012-ல் தனது முதல் டெஸ்ட் போட்டியில் ஆடிய இங்கிலாந்தின் ஜோ ரூட் அங்கிருந்து மொத்தம் 129 டெஸ்ட்களிலும் ஆடிவிட்டார், Fabulous 4-ல் தனது பெயரை இணைத்து விட்டார். ஆனால் 2011-ல் தனது அறிமுக டெஸ்டில் ஆடிய க்ரெய்க் பிராத்வேட்டோ மொத்தமே 85 போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார். சமமான வாய்ப்பளிக்கப்படாத இவர்களை ஒரே தரவரிசைப்பட்டியலில் வைப்பது எவ்வாறு முறையாகும்? அயர்லாந்தை சேர்ந்தவர் என்பதை தவிர 3 டெஸ்ட்களில் மட்டுமே ஆடவாய்ப்புக் கிடைத்த பால் ஸ்டிர்லிங் என்ன தவறிழைத்து விட்டார்? வருமானத்துக்கான தேவையை டி20 லீக்குகள் மூலம் சிறிய அணிகளைச் சேர்ந்த வீரர்கள் தீர்த்துக் கொள்கின்றனர். ஆனால்
தங்களது திறமைக்குத் தீனியிட, அதை உலகத்தின் கண்களுக்குப் பார்வையிட இத்தகைய போட்டிகளையும் தரவரிசைப் பட்டியல்களையும்தானே அணிகளும் வீரர்களும் நம்பி இருக்கின்றன?

ஓடுபாதையின் நீளம் ஒரேபோல் 100 மீட்டர்தான் என்றாலும் எல்லா அணிகளின் பாதையின் தன்மைகள் ஒரே போன்றதல்ல என்பதே ஐசிசி கற்கவேண்டிய பாடம். இன்னும் பல நாடுகளில் கிரிக்கெட் பரவி அடுத்த உயரத்தை எட்ட வேண்டுமெனில் அதனை எல்லோருக்குமானதாக்க வேண்டும். சமரசமின்றி சமநிலை தழைத்தோங்குவதே அதற்கான முதல் தேவை.
Author: அய்யப்பன்