எடப்பாடி பழனிசாமிக்கு எல்.முருகன் வாழ்த்து!

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “அதிமுக பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்கும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழக முன்னாள் முதலமைச்சர் அண்ணன் திரு.எடப்பாடி பழனிசாமி அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தேன்” எனப் பதிவிட்டிருக்கிறார்.
நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி அதிமுக-வின் பொதுச்செயலாளராகத் தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார். அவருக்கு அரசியல் கட்சியினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “இன்று அதிமுக-வின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றிருக்கும் தமிழக முன்னாள் முதல்வர் அண்ணன் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு, வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரைத் தொலைபேசி வழியாகத் தொடர்புகொண்டு எனது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டேன்” எனப் பதிவிட்டிருக்கிறார்.
சேலம் மாவட்டம், எடப்பாடியிலிருந்து அதிமுக-வில் அடிப்படை உறுப்பினராகத் தன்னுடைய அரசியல் பயணத்தைத் தொடங்கிய கே.பழனிசாமி, இன்று அந்தக் கட்சியின் உச்சபட்ச பதவியை அடைந்திருக்கிறார். அவரின் அரசியல் கிராப் குறித்து முழுமையாகத் தெரிந்துகொள்ள கீழுள்ள லிங்க்கைக் க்ளிக் செய்யவும்…
“எடப்பாடியை பா.ஜ.க தேர்வுசெய்திருக்கிறது!” – திருமாவளவன்

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய திருமாவளவன் எம்.பி, “எடப்பாடி பழனிசாமியா அல்லது ஓ.பன்னீர்செல்வமா என்றால், பா.ஜ.க எடப்பாடி பழனிசாமியைத் தேர்வுசெய்திருக்கிறது. சட்டபூர்வமாக எடப்பாடி வென்றிருந்தாலும் பா.ஜ.க., சங்பரிவாரங்களின் ஆதரவு பின்னணியில் இருக்கிறது. சமூகநீதிக்கு நேரெதிராக இருக்கும் பா.ஜ.க-வை எடப்பாடி பழனிசாமி தூக்கிச் சுமப்பது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு கருத்தியல் அடிப்படையில் செய்யும் மாபெரும் துரோகம். சமூகநீதிக்கான ஓர் இயக்கமாக அ.தி.மு.க-வை வழிநடத்த எடப்பாடி முன்வர வேண்டும்” என்றார்.
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 6.1-ஆகப் பதிவு

ஜப்பானின் ஹொக்கைடோ பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பதாக ஜப்பான் புவியியல் மையம் தெரிவித்திருக்கிறது. ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் 6.1-ஆகப் பதிவாகியிருக்கிறது. நிலநடுக்கத்தால் ஹொக்கைடோ பகுதியிலுள்ள வீடுகள், கட்டடங்கள் அசைந்ததால் மக்கள் அச்சமடைந்திருக்கின்றனர்.
குற்றவாளிகளின் பற்களைப் பிடுங்கிய குற்றச்சாட்டு; மனித உரிமை ஆணையம் அதிரடி உத்தரவு!

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் சரகத்தில் குற்றச் செயல்களில் பிடிபட்டவர்களின் பற்களைப் பிடுங்கி கொடூர தண்டனை கொடுத்ததற்காக ஐ.பி.எஸ் அதிகாரி பல்பீர் சிங் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில், பல்பீர் சிங் மீதான புகார் தொடர்பாக விசாரித்து ஆறு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு, தமிழக மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.
அரசு ஒதுக்கிய வீட்டை காலி செய்வதாக அறிவித்த ராகுல்
மோடி என்ற பெயர் குறித்து அவதூறாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில், சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி தனது எம்.பி பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அது தொடர்பான அரசியல் பரபரப்பாகச் சென்றுகொண்டிருக்கும் நிலையில், மக்களவைச் செயலர் ராகுல் காந்திக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அதன்படி, `எம்.பி-க்களுக்காக ஒதுக்கப்பட்ட வீட்டில் தங்கியிருக்கும் ராகுல் காந்தி அதை காலிசெய்ய வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் மக்களவைச் செயலருக்கு ராகுல் காந்தி பதில் கடிதம் எழுதியிருக்கிறார். அதில், “மக்களவை உறுப்பினராக கடந்த நான்கு முறை நான் தேர்வுசெய்யப்பட்டேன். மக்களின் ஆணைக்கிணங்க இங்கு தங்கியிருந்து பணிகள் செய்தது என்றும் மகிழ்ச்சியான நினைவுகளாக இருக்கும். உங்கள் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தபடி நிச்சயமாக நான் வீட்டை காலி செய்துவிடுவேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
`அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஆனார் எடப்பாடி பழனிசாமி’
அ.தி.மு.க பொதுக்குழு, பொதுச்செயலாளர் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வெளியான நிலையில், அ.தி.மு.க பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

பின்னர், பொதுச்செயலாளராக புதிய உறுப்பினர் விண்ணப்பம் குறித்த அறிக்கையில் கையெழுத்திட்டார் எடப்பாடி பழனிசாமி.
வெளியான தீர்ப்பு… எடப்பாடி வீட்டின் முன்பு கொண்டாட்டம்!
எடப்பாடிக்கு கிரீன் சிக்னல்…. அ.தி.மு.க அலுவலகத்தில் உற்சாகம்!
ஓ.பி.எஸ் மனு தள்ளுபடி… எடப்பாடி தரப்பு கொண்டாட்டம்!
அ.தி.மு.க பொதுச்செயலாளர் தேர்தலுக்குத் தடை விதிக்கக் கோரியும் பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை நீதிபதி குமரேஷ் பாபு தலைமையிலான அமர்வு விசாரித்துவந்த நிலையில் இன்று அதன் தீர்ப்பு வெளியாகியிருக்கிறது.

அதன்படி, “பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும்” என அறிவித்த நீதிமன்றம் பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்தது. எடப்பாடிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்திருப்பதால், அவரின் ஆதரவாளர்கள் உற்சாகம் அடைந்திருக்கின்றனர். மேலும், அ.தி.மு.க பொதுச்செயலாளர் தேர்தல் முடிவு வெளியிடுவதில் இருந்த தடையும் நீங்கியதால், விரைவில் பொதுச்செயலாளராக எடப்பாடி அறிவிக்கப்படுவார் என்றும் தெரிகிறது.

அ.தி.மு.க பொதுச்செயலாளராக தேர்வான எடப்பாடி பழனிசாமி
அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைக்கு எடப்பாடி மரியாதை… தொண்டர்கள் கொண்டாட்டம்










ராஜஸ்தானில் மருத்துவர்கள் போராட்டம்!
ராஜஸ்தானில் கடந்த வாரம் சுகாதார உரிமை (ஆர்டிஹெச்) மசோதா நிறைவேற்றப்பட்டது. அதில், `அனைத்து பொது சுகாதார நிறுவனங்களிலும் ஆலோசனை, மருந்துகள், நோயறிதல், அவசரகால போக்குவரத்து, அவசர சிகிச்சை உள்ளிட்ட இலவச சுகாதார சேவைகள் வழங்கப்படும். மேலும், இப்போது உருவாக்கப்படும் விதிகளில் குறிப்பிடப்பட்டிருக்கிற நிபந்தனைகளுக்கு உட்பட்டு தனியார் மருத்துவமனைகளும் இலவச சிகிச்சை வழங்க வேண்டும்’ எனவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்த மசோதாவுக்கு எதிராக மருத்துவர்கள் மாபெரும் போராட்டத்தை நடத்தினர். ஆனாலும், ராஜஸ்தான் சுகாதார அமைச்சர் பர்சாதி லால் மீனா, “மசோதாவில் ஏதேனும் சிக்கல் இருந்தால், நாங்கள் விவாதம் நடத்தத் தயாராக இருக்கிறோம். ஆனால் எப்படியிருந்தாலும், நாங்கள் மசோதாவைத் திரும்பப் பெற மாட்டோம்” என்று உறுதியாகத் தெரிவித்திருக்கிறார்.
அ.தி.மு.க வழக்கில் இன்று தீர்ப்பு..!
அ.தி.மு.க பொதுச்செயலாளர் தேர்தலுக்குத் தடைவிதிக்கக் கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை நீதிபதி குமரேஷ் பாபு தலைமையிலான அமர்வு விசாரித்துவருகிறது. இந்த வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் எடப்பாடி பழனிசாமி தரப்பும் தங்கள் வாதங்களை முன்வைத்தனர். கடந்த 22-ம் தேதி அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், எழுத்துபூர்வ வாதங்களைத் தாக்கல் செய்ய நீதிமன்றம் அவகாசம் அளித்தது.

கடந்த சில நாள்களுக்கு முன்பு எழுத்துபூர்வ வாதமும் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படவிருக்கிறது. இன்று காலை 10:30 மணியளவில் இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகவிருக்கும் நிலையில், அ.தி.மு.க-வில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
Author: ஜூனியர் விகடன் டீம்