எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில், கீரவாணி இசையில் வெளியான ‘RRR’ படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதினை வென்று இந்தியாவிற்குப் பெருமையைச் சேர்த்திருந்தது. இதற்குப் பலரும் தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வந்தனர். இதனிடையே படத்தின் ஆஸ்கர் புரோமோஷனுக்காக படக்குழு 80 கோடி ரூபாய் வரை செலவு செய்ததாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. இந்நிலையில் இயக்குநர் ராஜமௌலியின் மகன் எஸ்.எஸ்.கார்த்திகேயா இதுகுறித்து விளக்கமளித்துள்ளார்.

யூடியூப் சேனலுக்கு ஒன்றுக்குப் பேட்டி அளித்த அவர், “ஆஸ்கர் விருதுக்குப் பரப்புரை செய்வதற்கு 5 கோடி ரூபாய் வரை செலவு செய்யத் திட்டமிட்டு இருந்தோம். அதில் முதல் கட்டமாக 2 முதல் 3 கோடி வரை செலவு செய்ய முடிவு செய்தோம். ஆனால் படம் நாமினேஷனுக்கும் தேர்வானதால் 8.5 கோடி வரை செலவு செய்தோம். நியூயார்க் நகரில் கூடுதலாகச் சிறப்புக் காட்சிகள் திரையிட வேண்டியிருந்ததால் செலவு கொஞ்சம் அதிகரித்துவிட்டது.
இதுதான் ஆஸ்கருக்கு நாங்கள் செலவு செய்த தொகை. 80 கோடிக்கு ரூபாய் எல்லாம் நாங்கள் செலவு செய்யவில்லை. ‘RRR’ படத்தை இந்திய அரசு ஆஸ்கருக்குப் பரிந்துரைக்காதது எங்களுக்கு வருத்தம்தான். அதனால்தான் தனிப்பட்ட முறையில் நாங்கள் அனுப்பினோம். அதுமட்டுமின்றி விருதைப் பணம் கொடுத்துத்தான் என் தந்தை வாங்கினார் என்றும் கூறுகின்றனர். அதெல்லாம் பொய்! ஆஸ்கர் விருதை அப்படி வாங்க முடியாது என்பது எல்லோருக்கும் தெரியும்” என்று கூறியிருக்கிறார்.
Author: நந்தினி.ரா