“பா.ஜ.க தலைவர்களுக்கும், எனக்கும் தனிப்பட்ட கருத்து மோதல் எதுவும் கிடையாது”- அண்ணாமலை
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஒருநாள் பயணமாக டெல்லி சென்றிருந்தார். அங்கு அவர், மத்திய அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்தார். இன்று மதுரை திரும்பிய அண்ணாமலை மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் பா.ஜ.க-வை வலுப்படுத்துவதுதான் எங்கள் நோக்கம். ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு பா.ஜ.க வளர வேண்டும். பா.ஜ.க தலைவர்களுக்கும் எனக்கும் தனிப்பட்ட கருத்து மோதல் எதுவும் கிடையாது. பா.ஜ.க வேகமாக வளர வேண்டும் என நாங்கள் சில முன்னெடுப்புகளை எடுத்துவருகிறோம்.

கட்சிகளுக்குள் நிறைய கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும். கட்சியை வலுப்படுத்த நினைக்கும்போது ஒருசில மனஸ்தாபங்கள் வருவது வழக்கம்தான். பா.ஜ.க-வுக்கும், எனக்கும் தனிப்பட்ட எந்தக் கட்சித் தலைவர்கள் மீதும் மோதல் இல்லை. எங்கள் கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை. தேசியத் தலைமை கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்கும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது” என்றார்.
நடிகர் அஜித் குமாரின் தந்தை சுப்ரமணியம் காலமானார்!
நடிகர் அஜித்குமாரின் தந்தை மணி என்கிற சுப்ரமணியம் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 85. கடந்த 4 ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று அதிகாலை உயிரிழந்திருக்கிறார்.
இது தொடர்பாக அஜித் குடும்பத்தின் சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், “எங்களின் தந்தையார் திரு. பி.எஸ்.மணி (85 வயது) அவர்கள் பல நாட்களாக உடல்நலமின்றி படுக்கையில் இருந்துவந்தார். இன்று அதிகாலை தன்னுடைய தூக்கத்தில் உயிர்நீத்தார்.
கடந்த நான்கு ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த எங்கள் தந்தையை அன்போடும், அக்கரையோடும் கவனித்து வந்தும், எங்கள் குடும்பத்துக்கு உறுதுணையாக இருந்த அனைத்து மருத்துவர்களுக்கும் நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம்.

எங்கள் தந்தையார் சுமார் அறுபது ஆண்டு காலமாக எங்கள் தாயின் அன்போடும், அற்பணிப்போடும் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்துவந்தார்.
இந்த துயர நேரத்தில், பலர் எங்கள் தந்தையாரின் இறப்புச் செய்தியைப் பற்றி விசாரிக்கவும், எங்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்வதற்காகவும் எங்களை தொலைபேசியிலோ, கைபேசியிலோ அழைப்பு விடுத்தோ அல்லது குறுந்தகவல் அனுப்பியோ விசாரித்துவருகின்றனர். தற்போதுள்ள சூழலில் எங்களால் உங்கள் அழைப்பை மேற்கொள்வதற்கோ அல்லது பதில் தகவல் அனுப்ப இயலாதமையை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறோம்.
எங்கள் தந்தையாரின் இறுதிச் சடங்குகள் ஒரு குடும்ப நிகழ்வாகவே இருக்க கருதுகிறோம். எனவே, இந்த இறப்பு தகவலை அறிந்த அனைவரும் எங்களுடைய துயரத்தையும், இழப்பையும் புரிந்துகொண்டு, குடும்பத்தினர் துக்கத்தை அனுசரிக்கவும், இறுதிச் சடங்குகளை தனிபட்ட முறையில் செய்யவும் ஒத்துழைக்கும்படி வேண்டிக்கொள்கிறோம். ” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
நவீன் பட்நாயக்கைச் சந்தித்தார் மம்தா பானர்ஜி!
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மூன்று நாள் பயணமாக ஒடிசா மாநிலம் சென்றிருக்கிறார். ஒடிசா மாநிலத்தில் தங்கியிருக்கும் அவர் ஜாகன்நாதர் கோயிலுக்குச் சென்றும் வழிபட்டார். தொடர்ந்து பல்வேறு திட்டப் பணிகளைப் பார்வையிட்ட அவர், நேற்று ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கைச் சந்தித்தார். அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் காங்கிரஸ், பா.ஜ.க அல்லாத கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் உள்ளிட்டோர் ஈடுபட்டிருக்கின்றனர்.

இந்த நிலையில், இந்தச் சந்திப்பு மிக முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது. சுமார் 15 நிமிடம் நீடித்த ஆலோசனைக்குப் பின்னர் இருவரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, `இது முற்றிலும் மரியாதை நிமித்தமான சந்திப்பு. நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றிய எதுவும் பேசவில்லை. கூட்டாட்சி முறையை மேலும் வலுப்படுத்துவது பற்றி மட்டுமே விவாதித்தோம்’ என்று தெரிவித்தனர். மம்தா பானர்ஜி பேசுகையில் `நவீன் பட்நாயக் உயர்ந்த தலைவர். கூட்டாட்சி முறை பற்றிய அவரின் கருத்தை ஆதரிக்கிறேன். மூன்றாவது அணி குறித்து எதுவும் பேசவில்லை’ என்றார்.
Author: ஜூனியர் விகடன் டீம்