உகாண்டாவின் நேற்று நாடாளுமன்றக் கூட்டம் நடந்தது. அதில் `LGBTQ+’ என அடையாளமிடப்படுவதைக் குற்றமாக்கும் மசோதாவைக் கொண்டுவருவதற்குத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் மூலம், இனி உகாண்டாவில், தன்பாலின ஈர்ப்பை ஊக்குவிப்பதையும், தன்பாலின உறவில் ஈடுபடுவதையும் இந்த மசோதா தடைசெய்கிறது. மீறுபவர்களுக்கு ஆயுள் தண்டனை முதல் மரண தண்டனை வரை வழங்கவும் இந்த மசோதா வழிவகை செய்கிறது.
மேலும் குறிப்பாக, 18 வயதுக்குட்பட்டவர்களுடன் தன்பாலின உறவில் ஈடுபடுவதும், குற்றவாளி ஹெச்.ஐ.வி பாசிட்டிவ்வாக இருந்தால் அது, அதிகபட்ச தண்டனைக்குரிய குற்றமாகவும் கருதப்படுகிறது.
இந்த மசோதாவை இயற்றிய உகாண்டா அமைச்சர் டேவிட் பஹாட்டி (David Bahati), மசோதா மீதான விவாதத்தின்போது உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “30-க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க நாடுகள் ஏற்கெனவே தன்பாலின உறவுகளைத் தடைசெய்திருக்கின்றன. தன்பாலின ஈர்ப்பாளர்களை `LGBTQ+ சமூகம்’ என அடையாளப்படுத்துவதைக் குற்றமாக்கும் சட்டம் உகாண்டா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
LGBTQ+ என அடையாளப்படுத்துவது கிழக்கு ஆப்பிரிக்க நாட்டின் பழைமையான மத பாரம்பர்ய மதிப்புகளை அச்சுறுத்துகிறது. எங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கான மசோதாவை நான் ஆதரிக்கிறேன். இது நம்முடைய தேசத்தின் இறையாண்மை பற்றியது. எனவே, யாரும் எங்களை அச்சுறுத்தவோ, மிரட்டவோ கூடாது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
தற்போது இந்தச் சட்ட மசோதா ஜனாதிபதி யோவேரி முசெவேனிக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. உகாண்டா ஜனாதிபதி நீண்டகாலமாக LGBTQ+ குழுவை எதிர்த்தவர். 2013-ல் LGBTQ+ எதிர்ப்பு சட்டத்தில் கையெழுத்திட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, உகாண்டாவின் இந்தச் சட்டத்துக்கு மேற்கத்திய நாடுகள் கண்டனம் தெரிவித்துவருகின்றன.
Author: VM மன்சூர் கைரி