ஐபிஎல் வரலாற்றில் ஒருமுறைக்கு மேல் கோப்பையை வென்ற மூன்றே அணிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸும் ஒன்று.
2012, 2014 சீசன்களில் கம்பீரின் உத்திகள் உந்தித்தள்ள சாம்பியனாக மகுடம் சூட்டியிருந்தது கேகேஆர். அங்கிருந்து கோப்பைதான் கிட்டவில்லையே தவிர, ஹாட்ரிக் ப்ளே ஆஃப் வாய்ப்புகள், மார்கனின் தலைமையில் 2021-ல் ரன்னர் அப் என அவ்வப்போது உயரங்களை எட்டிக் கொண்டேதான் இருந்தது. இன்னும் சொல்லப் போனால் 2014 – 2021 காலகட்டங்களில் ஒருமுறைகூட புள்ளிப் பட்டியலில் ஐந்தாவது இடத்திற்குக் கீழே கேகேஆர் இறங்கியதே இல்லை. 2014/15-ல் 10 போட்டிகளில் தொடர்ச்சியாக வென்ற கேகேஆரின் சாதனை எட்டாண்டுகள் ஆகியும் இன்னமும் முறிக்கப்படாமலேதான் இருக்கிறது.
கடந்த சீசனிலோ புதிய கேப்டன், புதிய அணி என ஒருங்கமைப்பில் ஏற்பட்ட குளறுபடிகள் உள்ளிட்ட பல நெருக்கடிகளால் ஏழாவது இடத்தில் முடித்திருந்தது. காயத்தின் காரணமாக இம்முறை ஸ்ரேயாஸ் கேப்டனாக அணியை வழிநடத்த முடியாது என்பதே அணியின் இதயத்துடிப்பை நிறுத்தும் முதல் தாக்குதலாக உருவெடுக்க, அதிலிருந்து மீளுவதற்குள்ளாகவே ஃபெர்கூசனும் காயமடைய அடுத்த பேரிடியாக அது இறங்கியுள்ளது.
, ! #AmiKKR #KKR #TATAIPL2023 pic.twitter.com/CZH26cOlTM
— KolkataKnightRiders (@KKRiders) March 27, 2023
இந்த அடிகளை எல்லாம் சமாளிக்குமளவிற்கும் மற்ற அணிகளை அஞ்சி நடுங்கச் செய்யுமளவிற்கும் கேகேஆரின் படைபலமும் ராணாவின் தலைமையும் இருக்கிறதா அல்லது இருக்கும் இடம்தெரியாமல் பட்டியலின் இறுதி அணியாகத்தான் முடிக்கப்போகிறதா?
பலங்கள்:
கேகேஆரின் வலிமையான தளங்களில் ஒன்று வேகப்பந்து மற்றும் சுழல்பந்துவீச்சு என இருவகையிலான ஆல்ரவுண்டர்களையுமே கைவசம் வைத்திருப்பதுதான்.

பல காலமாக அவர்களது அச்சாணியாக கேகேஆரின் தேரினை முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கும் ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன் மட்டுமல்ல, இம்முறை டிரேடிங்கின் வாயிலாக இணைந்திருக்கும் ஷ்ர்துல் தாக்கூர், இருப்பதிலேயே அதிகத்தொகை கொடுத்து ஏலத்தில் வாங்கப்பட்ட ஷகீப் அல் ஹாசன், ஓரிரு ஓவர்கள் வேரியேஷன்களால் பிணைக்கப்பட்ட சீம் பௌலிங்கைக் கொண்டு வரும் வெங்கடேஷ் என ஆகச்சிறந்த ஆல்ரவுண்டர்களால் அணி நிரப்பப்பட்டு இருக்கிறது.
கிட்டத்தட்ட இவர்கள் எல்லோருமே பிளேயிங் லெவனில் இடம்பெறக்கூடியவர்கள் என்பதால் பந்துவீச்சு, பேட்டிங் என ஏதோ ஒன்றில் அன்றைய நாளை அவர்கள் தங்களுடையதாக்க சாத்தியக்கூறுகளும் நிகழ்தகவுகளும் மிக அதிகம். அதிலும் ஆல்ரவுண்டர்களால் நிரம்பிய கேகேஆர் போன்ற ஒரு அணிக்கு இம்பேக்ட் ப்ளேயர் விதிகூட வெல்வதற்கான வழிதான்.
கடந்தமுறை புதுப்பந்தில் உமேஷ் மாயம் நிகழ்த்தி பெரும்பாலான பவர் பிளே ஓவர்களை விக்கெட் வாடை பார்க்க வழிவகுத்தார். இம்முறை அவரோடு சவுத்தியோ அல்லது காயத்திலிருந்து மீண்ட பின் ஃபெர்கூசனோ துணை நிற்கையில் தொடக்கத்திலேயே போட்டியின் பிடி கேகேஆரிடம் சிக்கும்.

கடந்தமுறை நரைன் 14 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியது சற்றே குறைவாக மதிப்பிடப்படலாம். ஆனால் எல்லாப் போட்டிகளிலும் முழுதாக நான்கு ஓவர்களையுமே வீசியும்கூட அவர் 5.57 என்ற எக்கானமியோடு ரன்களை கட்டவிழ விடாமல் கட்டுப்படுத்தினார். இதுவே அவர் ஏற்படுத்தும் தாக்கத்தைச் சொல்லும். நரைனோடு தற்சமயம் ஷகீப் அல் ஹாசனும் இணைந்திருப்பது பேட்ஸ்மேன்களுக்கு இரு சுழல்கத்திகளை ஒரே சமயத்தில் நேர்கொள்வது போன்றதே. சுழலுக்கு நேசக்கரம் நீட்டாக் களத்திலோ, பேட்டிங் நீளத்தைக் கூட்டும் எண்ணத்திலோ ஒருவேளை ஷகீப்புக்கு பதிலாக லிட்டன் தாஸ் அல்லது ரஹ்மனுல்லா குர்பாஸிடம் அணி நகர்ந்தாலும் நரைனுக்கு தோள் கொடுத்து வருண் ஓரளவேனும் அணியைத் தாங்கிப் பிடிப்பார்.
ஊகித்து அறிய முடியாதவாராகவே எப்போதும் பவனி வரும் தாக்கூர் எல்லாப் போட்டிகளிலும் இல்லையெனிலும் ஒருசில போட்டிகளில் ஆபத்பாந்தவராக உருவெடுக்கக் கூடியவர். அதேபோல் காலம்காலமாக ரசல் செய்து வந்த ஃபினிஷிங் பாத்திரத்தை பங்கிட ரிங்கு சிங்கும் வல்லவராக இருப்பது இறுதி ஓவர்களை அணியை அஞ்சாது அணுக வைக்கும்.
பலவீனங்கள்:
“Super Star in Making” – ஸ்ரேயாஸைப் பற்றி கடந்தமுறை தொடர் தொடங்குவதற்கு முன்னதாக அவர்களுக்குள் உரசல்கள் உயிர்பெறுவதற்கு முன்பாக பயிற்சியாளராக மெக்கல்லம் கூறிய வார்த்தைகள்தான் இவை.

ஸ்ரேயாஸுடன் தங்களது நீண்ட நெடிய எதிர்காலத்தைத் திட்டமிட்டே ஸ்ரேயாஸை கேகேஆர் கேப்டன் ஆக்கியது. அவரும் கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் தனது 100 விழுக்காட்டினையும் அளித்திருந்தார். கேப்டனாக அவரது பதறாத அமைதியான அணுகுமுறைகளும், களத்தில் அவரது செயல்பாடுகளும் பலராலும் பாராட்டப்பட்டது.
காயத்தால் ஸ்ரேயாஸ் ஆடமுடியாத நிலை தற்போது ஏற்பட்டது அணிக்கு கடுமையான பாதிப்பை உண்டாக்கியுள்ளது. அவருக்கு பதிலாக யாரை கேப்டனாகத் தேர்ந்தெடுப்பது என்பதுவே கேகேஆருக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது. அபுதாபி நைட் ரைடர்ஸ் கேப்டனாக விளையாடிய அனுபவமுள்ள நரைனிடம் கேப்டன்ஷியைத் தந்து தங்களது Multiverse-ஐ உருவாக்குவார்களா அல்லது ரசல், ராணா ஆகிய இருவர் ஒருவரைத் தேர்ந்தெடுப்பார்களா என்ற குழப்பம் நீடிக்க ராணாவினைக் கேப்டனாக்கி விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். அவரால் ஸ்ரேயாஸ் அளவுக்கு தாக்கத்தை உண்டாக்க முடியுமா என்பதுதான் “யார் கேப்டன்?” என்பதற்குக் கிடைத்த விடை எழுப்பியுள்ள இன்னொரு கேள்வி. கேப்டனாகக்கூட அவரது இடத்தை ஓரளவு ராணா நிரப்பலாம். ஆனால் வேகத்தை குறிப்பாக சுழலை எளிதாக சமாளித்து தருணத்திற்குத் தகுந்தாற்போல் தன்னைத் தகவமைத்துக் கொண்டு ஆட்டத்தினை தன்பக்கம் திருப்பும் ஒரு திறன்மிக்க பேட்ஸ்மேனாக அவருக்கு சமமான இன்னொருவர் கிடைப்பது கடினமே.
ஓப்பனிங் காம்பினேஷனை மாற்றிக் கொண்டே இருப்பது கேகேஆருக்குப் புதிதல்ல. கடந்தமுறையும் `ஒருநாள் ஓப்பனர்’ என்ற ரீதியில் ஓப்பனர்களை மாற்றிக் கொண்டே இருந்தனர். நரைன் கூட இறக்கப்பட்டார். ஆனால் எதுவும் கைகூடவில்லை. அவர்களது படுதோல்விகளின் ஆதிப்புள்ளியே அதுதான்.

சராசரி பவர்பிளே ரன்ரேட் 7-ஐ கூட எட்டாததும் இதனால்தான். இந்த சீசனிலும் கேகேஆரின் ஓப்பனிங் சூடேறாமல், பழுதான என்ஜினால் மெதுவாக நகரும் கார் போலவே இயங்குமாயின் கடந்த சீசனில் விட்டதை இந்த சீசனிலும் பிடிக்க முடியாது. வெங்கடேஷ் மட்டுமல்ல ஆடிய சொற்ப போட்டிகளிலும் 110 ஸ்ட்ரைக்ரேட்டைக் கொண்டுள்ள ஜெகதீசனும்கூட அதிரடி தொடக்கத்தை தருவது அசாத்தியமானதே. ராணா நம்பத்தகுந்தவர்தான் என்றாலும் குர்பாஸ் அல்லது லிட்டன் தாஸுக்கான ஒரு இடத்தை டாப் ஆர்டரில் அணி உருவாக்காவிட்டால் மொத்தப் பளுவும் மிடில் ஆர்டர் மற்றும் லோயர் மிடில் ஆர்டரின் மீது விழுந்து பாரம் தாங்காமல் அதுவும் சரிந்து விழ வாய்ப்புண்டு.
கேகேஆரின் டெத் பௌலிங்கும் ரன் கட்டுப்பாட்டுக்கான உத்தரவாதத்தினை தரவல்லதல்ல. ரசல் வீசுவார்தான் என்றாலும் அவரை மட்டுமே நம்பியில்லாமல் இன்னொரு முனையில் இருந்தும் ரன்கசிவைத் தடுப்பதுவும் விக்கெட்டுகளை இக்கட்டான இறுதித் தருணங்களில் எடுத்துத்தருவதும் அவசியமானது. அதை கேகேஆரின் மற்ற பௌலர்களால் நிகழ்த்த முடியாமல் போனால் சேதாரம் அசாதரணமானதாக நிகழும்.
கடந்த தொடரில் ப்ளேயிங் லெவனில் பல்லாங்குழி ஆடியது கேகேஆர். கம்மின்ஸை வெளியே அமர வைத்ததோடு வீரர்களை செட்டில் ஆகவிடாமல் அடிக்கடி மாற்றிக் கொண்டே இருந்தனர். இதுபோன்ற தவறான முடிவுகள்தான் அவர்களுக்கு பெரும் பின்னடைவைத் தந்தது. இதுகுறித்த கேள்விக்கு ஸ்ரேயாஸ் நிர்வாகத் தலையீடுகளைக் காரணமாக குறிப்பிட்டிருந்தார். இது இந்தாண்டும் தொடருமேயானால் முன்அனுபவமற்ற புதிய கேப்டன் புதிய பயிற்சியாளர் என ஏற்கனவே அசௌகரியங்களை சந்திக்கும் அணி நிலைகுலைந்து குடை சாயவே நேரிடும்.
அதேபோல் அயல்நாட்டு வீரர்கள், விக்கெட்கீப்பர்கள் விஷயத்தில் மிகக் கச்சிதமாக மாற்று வீரர்களை ஆயத்தப்படுத்தி வைத்திருக்கும் கேகேஆர் இந்திய பேட்ஸ்மேன்களுக்கான மாற்று வீரர்களை சரியாக அமைக்கவில்லை. மந்தீப் சிங் மட்டுமே சற்றே நம்பிக்கை அளிக்கிறார். மற்றபடி பெஞ்சில் உள்ள இந்திய பௌலர்கள்கூட அனுபவமற்றவர்களே. இது மாற்றுச் சக்கரம் இல்லாமல் காரில் நெடுந்தூரம் பயணிப்பதற்கு ஒப்பானது. அணி சந்திக்க உள்ள கடுமையான சவால்களில் இதுவும் ஒன்று.

ஆகமொத்தம் கேகேஆர் விஷயத்தில் ஆஃப் ஃபீல்டு கணிப்புகள் நடத்தும் பலங்களுக்கும் பலவீனங்களுக்குமான பந்தயத்தில் பலவீனங்களே முன்னிலை வகிக்கின்றன. இருப்பினும் கணக்கில் எதிர்குறிகளின் பெருக்கம் நேர்குறியாவதைப் போல், பலவீனங்களேகூட சமயத்தில் பலங்களாக மாறலாம்.
களத்தில் அதுவும் டி20-ல் அவை மாற்றி எழுதப்படுவதற்கான சந்தர்ப்பங்கள் முடிவிலியாக நீளும். அது சரியாக நடந்தேறினால் கேகேஆருக்கு மூன்றாவது மகுடம்கூட சூட்டப்படலாம்.
Author: அய்யப்பன்