‘றெக்க கட்டி பறக்குதடி அண்ணாமலை சைக்கிள்…’ 90களில் றெக்கைக் கட்டிப் பறந்தது அண்ணாமலையின் பால் சைக்கிள் மட்டுமல்ல, பலரது வாடகை சைக்கிள்களும் தான்! வாடகை சைக்கிள் தொழிலும் றெக்கைக் கட்டிப் பறந்த காலம் அது! சிறு வணிகத்துக்கும், சிறுதூரப் போக்குவரத்துக்கும் வாடகை சைக்கிள்கள் பேருதவியாய் இருந்தன. பலரது நகரும் காதல் சின்னமாகக் கூட வாடகை சைக்கிள்கள் இருந்துள்ளன!
90’ஸ் காலகட்டத்தை ரீவைண்ட் செய்து பார்த்தால், வாடகை சைக்கிள் கடையின் அமைப்பு, பலரது நினைவுகளை இதமாய் தீண்டிச் செல்லும். ‘இங்கு சைக்கிள் வாடகைக்கு விடப்படும்’ என்று பல்பத்தின் உதவியுடன் சிலேட்டில் எழுதி வைக்கப்பட்ட சைக்கிள் கடை முகப்புகளைப் பரவலாக அப்போது பார்க்கலாம். இன்றைய காலத்தில் சுங்கச் சாவடிகளில் தின வாடகை, மாத வாடகை செலுத்திக் கடந்து செல்வதைப் போல, 80, 90களில் மணி நேர வாடகை, தின வாடகை கட்டி சைக்கிள்களை எடுத்துச் செல்வார்கள் பொதுமக்கள். மொத்தத்தில் நம்பிக்கை சார்ந்து நடைபெற்ற முக்கியமான தொழில் அது!
தள்ளியபடியே சென்று பிறகு லாவகமாகக் குரங்கு பெடல் அடித்து அப்படியே ஒரு காலை அந்தப்புறமாக ஸ்டைலாக போட்டு சீட்டில் உட்கார்ந்து நிமிரும் போது கிடைக்கும் சுகம் இருக்கிறதே… அதற்கு இணை வேறெதுவும் கிடையாது.
Authour: டாக்டர் வி.விக்ரம்குமார்