டெல்லியில் பூசா நகரில் சர்வதேச சிறுதானியங்கள் மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட பிரதமர் மோடி, நிகழ்ச்சியை தொடங்கி வைத்து, அஞ்சல் தலை ஒன்றையும் சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு 2023-க்கான அதிகாரப்பூர்வ நாணயம் ஒன்றையும் வெளியிட்டார்.

இதன் பிறகு நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், “ சர்வதேச சிறுதானிய மாநாடு போன்ற நிகழ்வுகள் உலகளாவிய நலன்களுக்கு மிகவும் அவசியமானது. சிறுதானியம் இந்தியாவின் அடையாளம். இந்தியாவின் முன்மொழிவுகளுக்குப் பிறகு 2023-ம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவித்திருப்பது நமக்கு கிடைத்த மிக பெரிய கௌரவம்.
சிறுதானிய சந்தைகள் அதிகரிக்கும்போது விவசாயிகளின் வருமானமும் அதிகரிக்கும். சிறுதானியம் உற்பத்தி இந்தியாவின் வளர்ச்சிக்கு துணைப் புரியும் மற்றும் சிறுதானிய விவசாயம் 2.5 கோடி விவசாயிகளுக்கு வரப்பிரசாதம். இதில் இளைஞர்களின் பங்களிப்பும் அதிகரித்து வருகிறது. இந்திய அளவில் 75 லட்சம் விவசாயிகள் ஆன்லைன் மூலம் இணைந்துள்ளனர். சுதந்திரத்துக்கு பிறகு சிறுதானிய விவசாயிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் அரசாக பா.ஜ.க ஆட்சி செயல்படுகிறது.

இன்று, தேசிய உணவு சந்தையில் 5-6 % மட்டுமே சிறுதானியங்கள் உள்ளன. இந்த பங்கை அதிகரிக்க இந்திய விஞ்ஞானிகளும் பண்ணையாளர்களும் விரைந்து செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அதற்கான இலக்குகளை நான் நிர்ணயிக்க வேண்டும். நாம் ஒரு தீர்மானம் எடுக்கும் போது அதை முழுவதுமாக முன்னோக்கி கொண்டு செல்லும் பொறுப்பும் அனைவருக்கும் சமமானது. இந்தியா இந்த பிரசாரத்தை முன்னெடுத்து செல்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று பேசியுள்ளார்.
இந்த மாநாட்டின் குறிக்கோள் மற்றும் பயன்கள் பற்றி நம்மிடம் பேசிய ஹைதராபாத்தில் செயல்படும் இந்திய சிறுதானிய ஆராய்ச்சி மையத்தின் முதன்மை விஞ்ஞானி எம்.இளங்கோவன், “இந்திய சிறுதானிய ஆராய்ச்சி மையம், உலக அளவில் செயல்படும் சிறப்பான மையமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிரதமர் மோடி நேற்று வெளியிட்டார். இந்த மாநாட்டில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் பல ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் கலந்துக்கொண்டனர். சிறுதானிய ஆண்டின் அடையாளமாக தபால் தலையும், அதிகாரப்பூர்வ நாணயமும் வெளியிடப்பட்டது.
இந்தியாவின் பாரம்பரியமான சிறுதானியத்தை உலக அளவில் பிரபலபடுத்தும் நோக்கமாகவே இந்த மாநாடு நடத்தப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கானாவின் (Ghana) ஜனாதிபதி, இந்திய பிரதமருடன் பேசினார். அப்போது தங்கள் நாட்டில் இருந்து 200 ஏக்கர் பரப்பளவை சிறுதானியங்கள் விளைவிப்பதற்கு இந்தியாவுக்கு வழங்குவதாகவும் அந்நாட்டில் சிறுதானிய மதிப்புக் கூட்டல் அமைப்பு நிறுவ உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த மாநாட்டினால், இந்தியாவில் சிறுதானிய விளைச்சல் அதிகமாகும். கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகளுக்கும் நல்ல விலைக் கிடைத்து பலனடைவார்கள். மேலும் நம் பாரம்பரிய உணவான சிறுதானியம் மீண்டும் மக்களிடம் சென்றடையும். அதேபோல் சிறுதானியங்களை கொண்டு பல்வேறு மதிப்புக்கூட்டல் பொருள்கள் தயாரிப்பதால் தொழில் நிறுவனங்களும் வளர்ச்சியடையும். அதுமட்டுமல்லாது மக்களுக்கு சரியான ஊட்டச்சத்து சென்றடைய வேண்டும் என்பதை பிரதானமாக கொண்டே சிறுதானிய மாநாடு மற்றும் அது தொடர்பான பிரசாரங்கள் செய்யப்பட்டு வருகின்றன” என்றார்.
Author: சத்யா கோபாலன்