வேலூர் காகிதப்பட்டறையில், சமூகப் பாதுகாப்புத்துறைக் கட்டுப்பாட்டில் ‘அரசினர் பாதுகாப்பு இல்லம்’ செயல்பட்டுவருகிறது. கொடிய குற்றங்களில் ஈடுபட்ட 42 இளஞ்சிறார்கள், இந்த இல்லத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். இங்குள்ள ‘ஏ’ பிளாக்கில் 28 பேர், ‘பி’ பிளாக்கில் 12 பேர் இருந்தனர். இந்த நிலையில், கடந்த 25-ம் தேதி ‘ஏ’ பிளாக்கிலிருந்த சிறுவன் ஒருவனை சென்னை பாதுகாப்பு இல்லத்துக்கு அதிகாரிகள் மாற்ற முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அந்தச் சிறுவன், பாதுகாப்பு இல்லத்தின் சுவர்மீது ஏறி நின்றுகொண்டு கீழே இறங்காமல் மூன்று மணி நேரம் அடம்பிடித்தான். தகவலறிந்ததும், இளஞ்சிறார் கோர்ட் நீதிபதி பத்மகுமாரி விரைந்துவந்து சமரசம் செய்த பின்னரே சிறுவன் கீழே இறங்கினான். இந்தச் சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், சுவர்மீது ஏறி அட்டகாசம் செய்த சிறுவன் உட்பட ஆறு சிறுவர்கள் கூட்டாகச் சேர்ந்து நேற்று முன்தினம் மாலை, இல்ல ஊழியர்களைக் கடுமையாகத் தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இந்தத் தாக்குதலில், மூன்று ஊழியர்கள் காயமடைந்தனர்.

இது பற்றி தகவலறிந்ததும், வேலூர் சரக டி.ஐ.ஜி முத்துசாமி, எஸ்.பி ராஜேஸ்கண்ணன் தலைமையில் 50-க்கும் அதிகமான போலீஸார் விரைந்துவந்து இல்லத்துக்கு வெளியே தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக, வேலூர் சப்-கலெக்டர் கவிதா தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் இல்லத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். இந்த பதற்றம் தணிவதற்குள் நேற்றைய தினம் ‘ஏ’ பிளாக்கிலிருந்த மற்ற சிறுவர்கள், அங்குள்ள பொருள்களை அடித்து நொறுக்கி அட்டகாசத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மீண்டும் போலீஸார் இல்லத்துக்கு முன்பு குவிக்கப்பட்டனர். தொடர்ந்து, நேற்று மாலை ஆறு மணிக்கு இளஞ்சிறார் கோர்ட் நீதிபதி பத்மகுமாரி, சப்-கலெக்டர் கவிதா ஆகியோர் அரசினர் பாதுகாப்பு இல்லத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து, அங்கு சேதமடைந்த பொருள்களையும் பார்வையிட்ட நீதிபதி, சப்-கலெக்டர் இருவரும், ரகளையில் ஈடுபட்ட சிறுவர்களிடமும் விசாரணை நடத்தினர். அப்போது, ‘‘ஆறு பேர் தப்பியோடிய காரணத்தினால், எங்களை விளையாட அனுமதிக்காமல் அடைத்துவைக்கிறார்கள். அதனால்தான் இது போன்ற சம்பவத்தில் ஈடுபட்டோம்’’ என்று சிறுவர்கள் கூறியிருக்கிறார்கள். இதையடுத்து, இல்லத்தைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது. பொருள்களைச் சேதப்படுத்தியது தொடர்பாக இல்ல கண்காணிப்பாளர் விஜயகுமார் வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், 12 சிறுவர்கள்மீது மூன்று பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. இதற்கிடையே, தப்பியோடிய ஆறு சிறுவர்களைப் பிடிக்கவும் தனிப்படை அமைக்கப்பட்டிருக்கிறது.

காட்பாடி ரயில் நிலையம், தங்கும் விடுதிகள், சோதனைச் சாவடிகள் உட்பட பல்வேறு இடங்களில் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், தேசிய குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து வேலூர் சிறார் இல்ல விவகாரத்தை விசாரிக்கத் தொடங்கியிருக்கிறது. இல்லத்துக்குள் நடைபெறும் சம்பவங்கள் குறித்து மூன்று நாள்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் வேலூர் எஸ்.பி ராஜேஸ்கண்ணனுக்கு குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணைய பதிவாளர் அனுசௌத்ரி நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். இதற்கிடையே, பாதுகாப்பு இல்ல பணியாளர்கள், தங்களுக்குப் பாதுகாப்புக் கேட்டு வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல்பாண்டியனிடம் மனு அளித்திருக்கிறார்கள். அவர்கள் கொடுத்திருக்கும் மனுவில், ‘‘கடந்த ஒருசில மாதங்களாகவே சிறுவர்களின் போக்கில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அவர்கள் எங்களைக் கேவலமான முறையில் பேசி, ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்டுவருகிறார்கள்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். இப்படி, அரசினர் பாதுகாப்பு இல்லத்துக்குள் நிலவும் தொடர் சம்பவங்களால், வேலூரில் பரபரப்பான சூழல் காணப்படுகிறது.
Author: லோகேஸ்வரன்.கோ