"ஏம்ப்பா எனக்கு இந்த பேர வச்ச?" இந்த கேள்வியை இன்றும் தன் அப்பாவிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார். அவரின் பெயரைக் கேட்கும் பலரும் ஒரு நிமிடம் அதிசயித்து, புருவங்களை உயர்த்துகிறார்கள். தாங்கள் ஏதோ தவறாகக் கேட்டு விட்டது போன்று மீண்டும் அவரிடம் "உங்க பெயர் என்ன?" என்று கேட்டு, நாம் சரியாகத்தான் கேட்டோமா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தன் பெயர் எந்த காரணத்துக்காக அவருக்கு வைக்கப்பட்டதோ, அந்த காரணங்களையெல்லாம், தன் கடின உழைப்பாலும், அறிவாலும் தூக்கியெறிந்து முன்னுதாரணமாகியிருக்கிறார். இனி யாருக்கும் அப்படி பெயர் வைக்கக்கூடாது என்பதற்கு வழிகாட்டியிருக்கிறார். அப்படி என்ன பெயர் அவருக்கு?
சென்னை குன்றத்தூரில் உள்ள சென்னை தொழில்நுட்ப நிறுவனம் எனும் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு இசிஇ எனப்படும் மின்னணுவியல் தொடர்பியல் பொறியியல் படிக்கும் 20 வயதான மாணவியின் பெயர் 'வேண்டாம்'. இந்த பெயருக்குப் பின்னால் பாலின சமத்துவமின்மை, பெண் குழந்தைகள் மீதான வெறுப்பும் படர்ந்திருக்கிறது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள சுற்றுப்புற கிரமங்களில், அடுத்தடுத்து பெண் குழந்தைகள் பிறக்கும் குடும்பங்களில் ஒரு பெண்ணுக்கு 'வேண்டாம்' எனப்பெயர் சூட்டினால், அடுத்தது ஆண் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை காலம்காலமாக இருக்கிறது. அப்படித்தான் இவருக்கும் 'வேண்டாம்' என பெயர் வந்தது.
ஒரு பெண்ணுக்கு வேண்டாம் எனப்பெயர் சூட்டினால், அடுத்தது ஆண் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை காலம்காலமாக இருக்கிறது. அப்படித்தான் இவருக்கும் ‘வேண்டாம்’ என பெயர் வந்தது.
நந்தினி வெள்ளைச்சாமி