வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
அகத்தால் பிரிந்து புறத்தால் நெருங்கி வாழும் அடுக்கக நகர வாழ்வில் வீட்டுக்கு வீடு வாசற்படியும் கோலமும் தென்படுகிறதோ இல்லையோ, வீட்டில் இருக்கும் எல்லோரையும் “சித்தப்பு நல்லாருக்கீங்களா” என்று ஒருமுறையாவது கொரொனா எட்டிப்பார்த்து விசாரித்துவிட்டு போயிருக்கிறது. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்று சொல்வதுபோல், குடும்பத்தோடு கோவிட் பாசிட்டிவ் என்று ரிசல்ட் வந்தபோது சற்று மிரண்டு தான் போயிருந்தோம்.
35 வயதே ஆனவர், மருத்துவமனையில் அட்மிட் ஆன மூன்றே நாளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் இறப்பு போன்ற செய்திகள் நம்பிக்கையை அசைத்து பார்த்து நொடிந்து போகச்செய்தன. பகிர்தலினால் மகிழ்ச்சி ரெட்டிப்பாகும், துக்கம் பாதியாகும் என்ற கூற்றிற்க்கு ஏற்ப அந்த சமயத்தில் திறன்பேசியில் உரையாடி ஆலோசித்த நண்பர்கள் அனைவரும் ‘இந்த நிலையும் கடந்து போகும்’ என்று ஊக்கமளித்து நம்பிக்கை அளித்தனர்.

கோவிட்-இலிருந்து ரிகவரி ஆகி ஒருமாதம் கழித்தும் சிறு தொந்தரவுகள் இருந்ததால் CT பரிந்துரை செய்திருந்தனர். ஸ்கேன் எடுப்பதற்காக மருத்துவர் எழுதிக்கொடுத்ததை கையில் வைத்துக்கொண்டே மருத்துவமனை செல்லலாமா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டிருந்த தருணமது.
சர்ஜிகள், N95 மற்றும் ஒரு பூமர் மாஸ்கையும் யார்ட்லி கிருமிநாசினியையும் துணைக்கு அழைத்துக்கொண்டு மருத்துவமனை சென்றேன். வாயில் மற்றும் மூக்கில் இருந்து வடியும் நீர் திமில் வாயிலாகவா அல்லது ஏதேனும் பொருட்களை தொடுவதினாலா அல்லது சஸ்பென்டட் ஏர் பார்ட்டிக்கல்சா என எதன் மூலம் இந்த நோய் பரவும் என்று இன்று வரை அறுதியிட்டு கூறமுடியாத நிலமையில் மருத்துவமனை வாயிலை மிதிப்பதற்க்கு என் பேஸ்மென்ட் தள்ளாடியாது.
ஸ்கேன் எடுக்கும்பொழுது உண்டான கலக்கங்கள் தனி. சட்டையை கழட்டுங்கள், கண்ணாடியை அகற்றுங்கள், என்ன தொந்தரவு, எந்த இடத்தில், எத்தனை நாள் என்று அந்த மூன்று நிமிடத்தில் ரேபிட் ஃபயர் ரவுண்ட் போன்ற கேள்விக்கணைகள். CT ஸ்கேன் எடுப்பதற்குண்டான ஸ்ட்ரெச்சர் போன்ற பெட்டில் கிடத்தி டுநட் போன்ற ஒரு இயந்திரத்தின் நடுவில் நகர்த்தி வைக்கிறார்கள். சரியாக மண்டை ஓடு படத்திற்கு கீழாக. நுண்கலைக்கல்லூரியில் ஓவியம் வரைவதற்க்கான லைவ் மாடல் போல இரண்டு கைகளையும் தலைக்கு மேல் நீட்டி படுக்கச்சொல்லிவிட்டு டெக்னிசியன் அறையை விட்டுச்செல்லும்போது “மூச்சை இழுத்து பிடிச்சி விடு” மட்டும் கேட்டது. அந்த ‘ங்க’ ஒரு கண்ணாடி அறைக்கு பின்னிருந்து மெலிதாக கேட்டது.

அணுகுண்டு வைத்துவிட்டு வெடிக்கும்முன் ஓடும் குழந்தையை போல ஸ்கேன் ரூமை விட்டு எகிறி குதிக்கிறார்கள். ரேடியேஷனின் வீரியம் அப்படி. ஒரு முறை CT எடுப்பதற்கே 400 மடங்கு எக்ஸ்ரே exposure, புற்று நோய் பாதிப்பு என்று நாம் யோசிக்கும் நேரத்தில், காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை கொரொனா நோயாளிகள் மற்றும் கதிரியக்க இயந்திரத்தை கையாளும் ரேடியாலாஜிஸ்ட்டின் exposure ரேட்டையும் ரிஸ்க் பேக்டரையும் சொல்லி மாள முடியாது. அடுத்த நாள் ஸ்கேன் ரிபோர்ட்டில் நோ அப்நார்மல் பைண்டிங்க்ஸ் என்று வந்திருந்தது.
கொரொனாவிலிருந்து ரிக்கவரி ஆவதும் அதில் தோல்வி அடைவதும் நம் கைகளில் மட்டுமே இருக்கிறது. அறிகுறிகள் தெரிந்த முதல் நாளை மூளையிலோ அல்லது மூலையில் தொங்கும் நாட்காட்டியிலோ ஒரு வட்டமிட்டு குறித்து வைத்துக்கொள்ளுதல் மிக முக்கியம். மேலும் தனிமைபடுத்திக்கொள்ளுதல் என்பது நம்மை IPC 307 இல் குற்றமிழைக்கும் வாய்ப்பை குறைக்கச்செய்கிறது. கொரொனா நோய் பரப்பும் இயந்திரமாக நாம் வெளியில் நடமாடுவது ‘அட்டெம்ப்ட் டு மர்டர்’ வகையறாவில் சேர்த்தி. இதனுடன் மைல்ட், மாடரேட், சிவியர் என்று அரசு வழிகாட்டும் நெறிமுறைகளை, பின்பற்றி தனிமைபடுத்தியிருந்தாலே இந்த தொற்று வீரியமிழந்திருக்கும்.

தேசிய அளவில் கோவிட் பரிசோதனை எண்ணிக்கையில் தமிழ்நாடு முதல் மாநிலமாக இருந்தாலும், அறிகுறிகள் தெரிந்த மக்கள் எல்லோரும் பரிசோதனை செய்யவில்லை என்பது ஒரு சாராரின் அங்கலாய்ப்பு. எல்லோரும் பரிசோதனை செய்யவில்லை என்பதுதான் நிதர்சனம் என்றாலும் அவர்களால் பரிசோதனை செய்துகொண்டு பதினான்கு நாட்கள் தங்களை தனிமைபடுத்திக்கொள்ள இயலாது என்பதும் நிதர்சனமே. காரணம் அரைஜான் வயிறு. மூன்று வேளை உண்ண உணவும், தனித்திருக்க கழிப்பறையுடன் கூடிய உறைவிடமும் எல்லோருக்கும் வாய்த்துவிடவில்லை. அன்றாடம் வேலைக்கு சென்றால் தான் அன்று இரவு தனக்கும் தங்கள் குழந்தைக்கும் சுடுசோறு பொங்க முடியும் என்ற தினக்கூலிகள் இங்கு அதிகம். மக்கள் தொகை அதிகமிருக்கும் நாட்டில் இது ஒரு சாபம். அரவணைக்கும் போது மகிழும் நாம் அடிக்கும் போது அந்த கையை விரும்புவதில்லை. இது பொதுபுத்தி. நிற்க.
என்னதான் ஐவர்மெக்ட்டின், மெதில்பிரேடினிசொலோன் என்று மருந்துகளையும் பணத்தையும் வாரித்தெளித்தாலும், கோவிடிலிருந்து மீண்டு எழச்செய்ய உதவுவது உடலில் இருக்கும் இயற்கையான எதிர்ப்பு சக்தியே.
கோவிட் பாதித்த முதல் நாளிலிருந்து கஷாயம், வைட்டமின் சி, டி மாத்திரைகள், ஆரஞ்சு பழங்கள், புரதத்துக்காக சுண்டல், சூரிய ஒளி படும் அளவில் மூச்சு வாங்காமல் நடை பயிற்சி என்று அன்று பிறந்த புது மனிதன் போல வழக்கத்தை மாற்றிக்கொண்டாலும், இவையெல்லாம் கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்வதற்க்கு சமம்.

பெட்டர் லேட் தென் நெவர் என்பதுபோல் ஒருவகையில் இவற்றை ஏற்றுக்கொண்டாலும், இவையெல்லாம் நம்முடைய அன்றாட வாழ்வில் பிரிக்கமுடியாதவாறு ஒன்றியிருந்த மரபுகளே. உலகமயமாதல், ஃபினான்சியல் இண்டிபெண்டன்ஸ் என்று எதை நோக்கி நாம் ஓடியிருந்தாலும் இவற்றை புறந்தள்ளியிருக்க கூடாது. வாழும் தெய்வம் மருத்துவர் கு.சிவராமன் சொல்வது போல் மிளகு, திப்பிலி, சுக்கு, மஞ்சள் என்று பாரம்பரியத்தின் பக்கம் நாம் கவனத்தை திருப்பும் நேரம் இது.
கோவிட் பாதிப்பின் அதிமுக்கிய விஷயமாக நாங்கள் கன்சல்ட் செய்த டாக்டர் கூறியது ‘Don’t get panic”. படபடப்பின் காரணமாக எதிர்ப்பு சக்தி உற்பத்தியாவது குறைந்துவிடும் என்றும், யோகா தியானம், பிடித்த பாடல்கள் போன்றவற்றை கேட்டு மனதை சமநிலையில் வைக்குமாறு கூறினார். பாசிட்டிவ் ரிசல்ட் என்று தெரிந்த அந்த ஒரு நாள் முழுவதும் வெவ்வேறு சந்தர்பங்களில் அவர் மொபைல் வழியாக விளித்து ஆலோசனைகள் கொடுத்து உதவி செய்துகொண்டே உறுதுணையாயிருந்தார்.
அதற்கு அடுத்த நாள் தான் தெரிந்தது, கோவிட் பெருந்தொற்றின் காரணமாக அவரது பெற்றோரை ஆக்ஸிஜன் பெட் இருக்கும் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிப்பதற்காக முயற்சி செய்துகொண்டிருந்த தருணத்தில்தான் எனக்கும் இன்னும் பலருக்கும் இதுபோல் விளித்து ஆலோசனை கூறிக்கொண்டிருந்தார் என்பது. எப்பேற்பட்ட சேவை அற்பணிப்பு இருந்தால் இது போன்று தன்னலமற்று உதவி செய்ய முடியும் என்பதை அன்று உணர முடிந்தது.

உயிர் பறித்து ஆர்பரிக்கும் இந்த பெருந்தொற்றை எதிர்கொள்ளும் போதெல்லாம் இதுபோன்ற அற்பணிப்புள்ள சேவையுள்ளம் கொண்ட மனிதர்களால் தான் இந்த சமூகம் மீண்டெழுந்து வருகிறது.
மருத்துவமனையை அணுகிய பின் தான், இந்த கொடிய நோயின் கோரப்பிடியில் இருக்கும் நோயாளிகளை காப்பாற்றுவததற்காக தங்கள் உயிரை துச்சமென மதித்து சேவை புரியும் ஒவ்வொரு செவிலியரும் மருத்துவரும் வெள்ளை உடை அணிந்த இறை தூதர்கள் என்பது தெரிகிறது. நம்மைப்போன்றே ஒரு குடும்பம், அதில் வயதான பெற்றோர் மற்றும் குழந்தைகள் அவர்களுக்கும் இருக்கிறார்கள் என்பதை நாம் அகம் அகழ்ந்து பார்க்க வேண்டிய கணம் அது. இந்த சமூகம் அவர்களுக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறது!
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
Author: முத்து சுப்பிரமணியன்