“பிக்பாஸ் சீசன் 6 வீட்டுக்குள்ள வந்தவங்க எல்லாரும் அவங்களுக்கு கொடுத்த டாஸ்க்கை வின் பண்ணினாங்களா இல்லையான்னு எனக்கு தெரியாது. ஆனா, நான் எனக்கு கொடுத்த டாஸ்க்கை வின் பண்ணிட்டேன்னு தான் நினைக்கிறேன். என்னைப் பொறுத்த அளவில் பிக் பாஸ் சீசனில் 21 பேர் போட்டியாளர்கள். 21 பேருக்குமே தனித்தனி டிசைனர்கள். அந்த 21 பேரில் நான் மட்டும் வெளியே தெரிந்திருக்கிறேன் என்றால் அந்த மனசுதான் சார் கடவுள். ஒருத்தர் செய்யும் வேலைக்கு பணம் கொடுத்துவிடலாம். நாமும் அந்தப் பணத்தை வாங்கி கொள்ளலாம். ஆனால், நாம் செய்த வேலைக்கான உண்மையான மனம் திறந்த பாராட்டுகள் கிடைப்பதுதான் இங்கு பெரிய விஷயம். அது எனக்கு கிடைத்தது. அதுதான் என் மகிழ்ச்சி. அதனைத்தான் நான் எனக்கான சரியான சம்பளமாக பார்க்கிறேன். இந்த உலகில் சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒரு சின்ன பாராட்டுக்குத்தான் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்” என்கிறார் சென்னையைச் சேர்ந்த காஸ்ட்யூம் டிசைனர் சிந்து.
"சென்னை பெருநகரின் அண்ணா நகர் மெயின் பகுதியில் எனக்கு ஒரு டிசைன் ஸ்டூடியோ. 15 ஊழியர்களுடன் எனது நிறுவனத்தை முன்னெடுத்து நடத்திக் கொண்டிருக்கிறேன். இந்த வளர்ச்சியை நான் உற்றுநோக்கிப் பார்த்தால், அன்றைய நிலைமை, அன்றிருந்த சூழலில் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, என்னால் நினைத்துப் பார்க்கமுடியாத வளர்ச்சியாகத்தான் இதனைக் கருதுகிறேன். இது என்னைப் பொறுத்தவரையில் மிகப்பெரிய விஷயம். இந்த சமூகம் சரியான உழைப்பை எல்லா நேரங்களிலும் அங்கீகாரம் பண்ணத்தான் செய்கிறது. உதாசீனம் செய்தவர்களில் இருந்து விலகிச் சென்றவர்கள் வரை இன்று என் வளர்ச்சியைக் கண்டு வியந்து வாய்விட்டே சொல்லவும் செய்துவிட்டார்கள். இந்த வளர்ச்சிக்குப் பின், அந்த இருள் சூழ்ந்திருந்த பழைய நிலைமையை மறுபடியும் நினைத்துக்கூட பார்க்க நான் தயாராக இல்லை" என்று தன்னம்பிக்கை துளிரும் பேச்சில் மிளிர்கிறார் சிந்து.
பிக்பாஸ் சீசன் 6 வீட்டுக்குள்ள வந்தவங்க எல்லாரும் அவங்களுக்கு கொடுத்த டாஸ்க்கை வின் பண்ணினாங்களா இல்லையான்னு எனக்கு தெரியாது.
Authour: ஜி.காந்தி ராஜா