விறகுக்கு மாறலாமா?

6

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொறுத்து, பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்கின்றன. பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும், காஸ் சிலிண்டர் விலை மாதந்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் முதல் தேதி வந்ததும், சம்பளம் வருகிறதா, இல்லையா என எதிர்பார்ப்பவர்களை விட, காஸ் விலை உயரக்கூடாது என எண்ணுபவர்களே அதிகம். அந்தளவுக்கு கடந்த 3 ஆண்டுகளில் காஸ் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு மே மாதம் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் சராசரியாக ரூ.570க்கு விற்றது. ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக காஸ் சிலிண்டர் விலை கடுமையாக உயர்ந்தது. கடந்த மே மாதம் ரூ.1,015க்கு விற்பனையானது. தொடர்ந்து ஜூலையில் ரூ.1,068.50 ஆக உயர்ந்தது. இடையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதும், சிலிண்டர் விலை குறைக்கப்படவில்லை. கடந்த 7 மாதங்களாக ஒரே விலையில் விற்று வந்தது. அவ்வப்ேபாது வர்த்தக சிலிண்டர் விலை மட்டும் உயர்ந்தவண்ணமிருந்தது.வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை உயராததற்கு, திரிபுரா, நாகலாந்து, மேகாலயா மாநிலங்களில் நடந்த சட்டமன்ற தேர்தலே காரணமென எதிர்க்கட்சியினர், அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். எதிர்பார்த்ததை போலவே 3 மாநிலங்களில் தேர்தல் முடிந்ததும் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலையை நேற்று ரூ.50 உயர்த்தி அதிர்ச்சி வைத்தியம் அளித்திருக்கிறது ஒன்றிய அரசு. இதனால் நாடு முழுவதும் காஸ் சிலிண்டரின் விலை ரூ.1,100ஐ தாண்டியுள்ளது. சேலம், மதுரை உள்பட தமிழகம் மற்றும் பிற மாநில பெருநகரங்களில் டெலிவரி தொகையோடு சேர்த்து ரூ.1,200 வரை காஸ் சிலிண்டருக்காக செலவழிக்க வேண்டிய சூழலில் ஏழை, நடுத்தர வர்க்கத்தினர் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் மாத பட்ஜெட் மேலும் எகிறும் வாய்ப்புகள் உள்ளன.இது ஒருபுறமிருக்க, வர்த்தக சிலிண்டர் விலையும் அதிரடியாக ரூ.351 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ரூ.2 ஆயிரத்திற்குள் விற்கப்பட்ட வர்த்தக சிலிண்டர் விலை அதிகபட்சமாக ரூ.2,370 வரை உயர்ந்துள்ளது. இதனால் டீ, காபி, வடை மற்றும் சிறிய, பெரிய ஓட்டல்களில் உணவுப்பண்டங்களின் விலை மேலும் உயர வாய்ப்புகள் உள்ளது. ஏற்கனவே காஸ் மானியம் தருவதாக கூறி தொகையை பெற்றதும், நம் வங்கிக் கணக்கிற்கு மானியமாக ஒரு தொகை அனுப்பப்பட்டு வந்தது. கொரோனாவுக்கு முன்பு 50 சதவீதமாகவும், கொரோனாவுக்கு பின்பு கிட்டத்தட்ட 90 சதவீதத்துக்கும் அதிகமானோருக்கு காஸ் மானியத்தை நிறுத்தியே விட்டது ஒன்றிய அரசு.ஏற்கனவே பெட்ரோல் விலை ரூ.100ஐ தாண்டியும், டீசல் விலை ரூ.100ஐ நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில், காஸ் சிலிண்டர் விலையையும் அதிரடியாக உயர்த்தியிருப்பது பெரும் அதிர்ச்சியை தருகிறது. இதே நிலை நீடித்தால் நடப்பாண்டிற்குள் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை ரூ.1,500 வரை உயர வாய்ப்பு உள்ளது. இதனால் ஏழை, நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்வாதாரம் மிக கடுமையாக பாதிக்கும். மீண்டும் விறகு அடுப்பை தேடி செல்ல வேண்டிய காலம் வந்தாலும், பெரிதாக ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. எனவே, ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை, குறைப்பதற்கான நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென்பதே மக்களின் பெரும் எதிர்பார்ப்பாகும்.

Author : Dinakaran

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.