வழிகாட்டும் முதல்வர்

6

தமிழ்நாடு அரசின் 2023-24ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில் நேற்று தாக்கல் செய்தார். அதில், செப்டம்பர் 15ம் தேதி முதல் மகளிருக்கு ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மதுரையில் ரூ.8,500 கோடி செலவிலும், கோவையில் ரூ.9 ஆயிரம் கோடி செலவிலும் மெட்ரோ ரயில் அமைக்கப்படும். கோவையில் செம்மொழிப்பூங்கா, சென்னையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை ரூ.621 கோடி செலவில் நான்கு வழி மேம்பாலம் உள்ளிட்ட பல்வேறு வரவேற்கத்தக்க அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.முக்கியமாக, வருவாய் மற்றும் நிதி பற்றாக்குறை ஒன்றிய அரசை விட கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. இது முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை பண்புக்கும், திறன்மிக்க நிதி மேலாண்மைக்கும் மிகச்சிறந்த சான்றாகும். மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.30 ஆயிரம் கோடி அளவிற்கு வங்கி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, ரூ.4,236 கோடி மதிப்புள்ள 4,491 ஏக்கர் கோயில் சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன. மகளிர் முன்னேற்றத்திற்காக எண்ணற்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மகளிருக்கு நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம், நாடு கடந்தும் வரவேற்பு பெற்றதை மறக்க முடியாது. தற்போதைய பட்ஜெட்டில் குடும்பத் தலைவிகளுக்கு, உரிமை தொகை ரூ.1000 வழங்கப்படும் என்ற அறிவிப்பு, மிகப் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பேருந்தில் கட்டணமில்லா பயணம் மூலம் மாதம் குறிப்பிட்ட தொகையை மகளிர் மிச்சப்படுத்த முடிந்தது. தங்கள் குடும்பச் செலவுகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளமுடிந்தது. அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டமும், இல்லத்தரசிகளின் செலவு மற்றும் நேரத்தை குறைக்கிறது என்பது மட்டுமல்ல, இத்திட்டத்தால் அரசு பள்ளிகளில் மாணவர்களின் வருகையும் அதிகரித்து வருகிறது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். இப்படி மகளிர் முன்னேற்றத்திற்காக அறிவிக்கப்படும் அடுத்தடுத்த திட்டங்களால் தமிழ்நாடு அரசை, பெண்கள் மட்டுமின்றி அனைத்துத் தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.இப்போதே போக்குவரத்து நெரிசல் என்பது சவாலான பிரச்னையாக உள்ளது. போக்குவரத்து நெரிசல் என்பது எதிர்காலத்தில் மிகப்பெரும் சிக்கலாக உருமாறும் நிலையைக் கருத்தில் கொண்டு மதுரை மற்றும் கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடும் நிதி நெருக்கடி உள்ள நிலையிலும் கொடுத்த வாக்குறுதிகளை முதல்வர் நிறைவேற்றி வருகிறார். மீனவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.389 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காலநிலை விழிப்புணர்வு கூட்டம், மரக்காணத்தில் பறவைகள் மையம் என அனைத்து துறைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. நாட்டிற்கே தமிழ்நாடு பட்ஜெட் வழிகாட்டியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் சொல்லாத பல வாக்குறுதிகள் அடுத்தடுத்து  நிறைவேற்றப்பட்டு வருகின்றன. சொன்னதை செய்பவர் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் என மக்கள் புகழாரம் சூட்டியுள்ளனர். முதல்வராக பதவியேற்ற ஒரு மாதத்தில் அவர் கூறுகையில், ‘‘நம்பர் 1 முதல்வர் என பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக நான் உழைக்கவில்லை. தமிழ்நாடு நம்பர் 1 மாநிலமாக மாற வேண்டும் என்பதற்காக உழைக்கிறேன். அதில் தான் எனக்கு மகிழ்ச்சி’’ என்று தெரிவித்தார். இந்த நிதிநிலை அறிக்கை, அவரது அந்த உழைப்பையும், வாக்கையும் மெய்ப்பித்திருக்கிறது.

Author : Dinakaran

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.