வறட்சியால் ஒரே ஆண்டில் 43,000 உயிரிழப்புகள், பாதிக்கும் மேல் குழந்தைகள்; சோமாலியாவில் அதிர்ச்சி!

16

சோமாலியாவில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இந்த வறட்சியினால் 2022-ம் ஆண்டில் மட்டும் அங்கு 43,000 உயிரிழப்புகள் பதிவாகி உள்ளதாக, அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. 

Death (Representational Image)

இதே போன்ற கடும் வறட்சி, 2017 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் சோமாலியாவில் நிலவியது. அந்த சமயத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகளை ஒப்பிடுகையில், 2022ல் அதிக இறப்புகள் என்று கூறப்படுகிறது.

கணக்கிடப்பட்ட 43,000 உயிரிழப்புகளில் பாதி, 5 வயதிற்கும் கீழே உள்ள குழந்தைகள். இந்த ஆண்டின் முதல் ஆறு மாதத்தில், மேலும் 34,000 இறப்புகள் வரை நிகழும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 

2022-ம் ஆண்டில் சோமாலியாவில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த அறிக்கையை, அந்த நாட்டின் மத்திய சுகாதார அமைச்சகம், யுனிசெஃப் மற்றும் உலக சுகாதார அமைப்புடன் இணைந்து வெளியிட்டது. இந்த அறிக்கையை `London School of Hygiene & Tropical Medicine and Imperial College’-ல் உள்ள ஆராய்ச்சியாளர்கள் தொகுத்துள்ளனர். 

இதுகுறித்து சோமாலியாவின் சுகாதார அமைச்சர் டாக்டர் அலி ஹட்ஜி ஆடம் அபுபக்கர் கூறுகையில், “வறட்சியின் போதும் இதுவரையில் பஞ்சம் தவிர்க்கப்பட்டிருக்கிறது என்பது நம்பிக்கை அளிக்கிறது. சோமாலியாவில் நீடித்து வரும் உணவு நெருக்கடி மற்றும் பொதுச் சுகாதார பாதிப்பு குறித்து நாங்கள் தொடர்ந்து கவலைப்படுகிறோம்.

health

அதே நேரத்தில் தற்போது நாங்கள் தொடர்ந்து வரும் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து நடவடிக்கைகள் மற்றும் உயிர்களைக் காப்பாற்றுவதற்கான மனிதாபிமான வெளிப்பாடு, எளிதில் பாதிக்கப்படுபவர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை தொடர்வதன் மூலம், பஞ்சத்திற்கான அபாயத்தை என்றென்றும் பின்னுக்குத் தள்ள முடியும் என்பதில் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம். 

இது நடக்கவில்லை எனில், எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள் இந்த நெருக்கடியின் விலையாக தங்களது உயிரைச் செலுத்த நேரிடும்.

எனவே அனைவருக்குமான சுகாதார அமைப்பை உருவாக்க, எங்களுக்கு உதவும் நன்கொடையாளர்கள் மற்றும் பார்ட்னர்கள் தொடர்ந்து ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்’’ எனத் தெரிவித்துள்ளார். 

 

Author: இ.நிவேதா

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.