`மேக் இன் இந்தியா’ திட்டத்தின் மூலம் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு, பல்வேறு மாநிலங்களில் இயக்கப்பட்டுவருகிறது `வந்தே பாரத் ரயில்’. பிரதமர் மோடியால் கொடியசைத்து தொடங்கிவைக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்கள், டெல்லி, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், தமிழ்நாடு உட்பட 17 மாநிலங்களில் இயங்கிவருகின்றன.

2022 நவம்பரில் சென்னையிலிருந்து மைசூருக்கு வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக, மாடுகள் மோதி வந்தே பாரத் ரயில் சேதம், வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு போன்ற செய்திகள் வெளிவந்தன. இந்த நிலையில், சென்னை டு மைசூர் சென்ற வந்தே பாரத் ரயிலின் ஜன்னல் கண்ணாடியை உடைத்ததாக, தமிழ்நாட்டின் திருமாஞ்சோலையைச் சேர்ந்த குபேந்திரன் (21) எனும் இளைஞர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.
இது குறித்து வெளியான தகவலின்படி, நேற்று சென்னையிலிருந்து மைசூர் நோக்கி சென்றுகொண்டிருந்த வந்தே பாரத் ரயில், புதூர் அருகே சென்றுகொண்டிருக்கையில் ஜன்னல் கண்ணாடி உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்த ஊழியர்கள், இது பற்றி போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். உடனடியாக இதில் நடவடிக்கை எடுத்த போலீஸார், ரயில் தண்டவாளம் அருகே மது அருந்திக்கொண்டிருந்த குபேந்திரன் என்பவரைக் கைதுசெய்தனர்.

விசாரணையில் குபேந்திரனும், ரயில்மீது கல்வீசியதை ஒப்புக்கொண்டார். அதைத் தொடர்ந்து, அடுத்தகட்ட விசாரணை நடைபெற்றுவருகிறது. பின்னர் வந்தே பாரத் ரயில்கள்மீது கல் வீசுதல் போன்ற சமூக விரோதச் செயல்களில் ஈடுபட வேண்டாம் என பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்த தெற்கு மத்திய ரயில்வே, இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர்களுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று கூறியது.
2019 முதல் இயங்கிவரும் வந்தே பாரத் ரயில்கள், தெலங்கானா, பீகார், உத்தரப்பிரதேசம், சத்தீஸ்கர், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இது போன்ற தாக்குதலுக்குள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது.
Author: சி. அர்ச்சுணன்