சென்னை: "நாடாளுமன்றத்தின் முதன்மை எண்ணிக்கை பெற்றுள்ள எதிர்கட்சியுமான காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவரை தகுதி நீக்கம் செய்திருப்பது அசாதாரண நடவடிக்கையாகும். பாசிச வகைப்பட்ட தாக்குதலின் தீவிர வடிவமாகும். இனி நாட்டில் எவரும் பிரதமரின் நடவடிக்கையை விமர்சித்து பேச முடியாது என்ற சர்வாதிகார அடக்குமுறையின் அறிவிப்பாகும்" என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நரேந்திர மோடி குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்த கருத்துக்களுக்கு எதிராக சூரத் நீதிமன்றம் விசாரித்து வந்த அவதூறு வழக்கில், அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியுள்ளது. மேலும் தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்ய 30 நாட்கள் கால அவகாசம் வழங்கி, பிணையும் தந்துள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் தண்டனை செயலுக்கு வராது என நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒன்றிய அரசின் செகரட்டரி ஜெனரல், ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவி தகுதி இழந்ததாக கூறி, நாடாளுமன்ற உறுப்பினர் உரிமையை பறித்து உத்தரவிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தின் முதன்மை எண்ணிக்கை பெற்றுள்ள எதிர்கட்சியுமான காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவரை தகுதி நீக்கம் செய்திருப்பது அசாதாரண நடவடிக்கையாகும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Author: செய்திப்பிரிவு