புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி. பதவியிலிருந்து தகுதி இழப்பு செய்யப்பட்ட வழக்கில், நீதித்துறையின் சுதந்திரம், ஜனநாயகத்தின் கோட்பாடுகளும் பின்பற்றப்படும் என்ற நம்பிக்கை கொண்டுள்ளதாக ஜெர்மனி அரசு தெரிவித்துள்ளது.
ஜெர்மனி வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் டெல்லியில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது, "இந்திய எதிர்க்கட்சி அரசியல்வாதி ராகுல் காந்தி மீதான குற்ற வழக்கின் தீர்ப்பை நாங்கள் கவனித்தோம். அதன்பின்னர் அவர் தகுதி இழப்பு செய்யப்பட்டதையும் கவனித்தோம். எங்களின் புரிதலுக்கு எட்டியவரை, ராகுல் காந்தி நீதிமன்றத்தைத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய வாய்ப்புள்ளது. அந்த மேல்முறையீட்டு வழக்கு தீர்ப்பு வந்தபின்னரே அவர் மீதான தண்டனை நிலைக்குமா? அவர் தகுதி இழப்பு செய்யப்பட்டதில் ஏதேனும் அடிப்படை இருக்கிறதா என்பதெல்லாம் தெளிவாகும். அந்த வழக்கில் நீதித்துறை சுதந்திரமும், அடிப்படை ஜனநாயகக் கோட்பாடுகளும் பின்பற்றப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்றார்.
ராகுல் காந்தி எம்.பி. பதவியிலிருந்து தகுதி இழப்பு செய்யப்பட்ட வழக்கில், நீதித்துறையின் சுதந்திரம், ஜனநாயகத்தின் கோட்பாடுகளும் பின்பற்றப்படும் என்ற நம்பிக்கை கொண்டுள்ளதாக ஜெர்மனி அரசு தெரிவித்துள்ளது.
Author: செய்திப்பிரிவு