மோடி பெயர் குறித்து சர்ச்சைக் கருத்து: `ராகுல் காந்தி குற்றவாளி; 2 ஆண்டுகள் சிறை’ – சூரத் நீதிமன்றம்

14

கடந்த மக்களவைத் தேர்தலின்போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரசாரம் செய்யும்போது பிரதமர் மோடியைக் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். 2019-ம் ஆண்டு கர்நாடகா மாநிலம் கோலார் என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகையில், “எப்படி அனைத்துத் திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் வருகிறது?’ என்று கூறியிருந்தார். ராகுல் காந்தியின் இந்தப் பேச்சு, `ஒட்டுமொத்த மோடி சமுதாய மக்களையும் அவமதிக்கும் வகையில் இருக்கிறது’ என்று கூறி ராகுல் காந்தி மீது குஜராத் பா.ஜ.க எம்.எல்.ஏ.புருனேஷ் மோடி அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

மோடி – ராகுல்

இந்த வழக்கு சூரத் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கில், 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ராகுல் காந்தி கோர்ட்டில் ஆஜராகி வாக்குமூலம் கொடுத்தார். இதில், தான் தவறு செய்யவில்லை என்று தெரிவித்திருந்தார். இந்த வழக்கு விசாரணை கடந்த வாரம் முடிவடைந்தது. இதில் மார்ச் 23-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, ராகுல் காந்தி இன்று காலையில் கோர்ட்டில் ஆஜராக வந்திருந்தார். அவரைக் கட்சித்தலைவர்கள் வரவேற்றனர். சூரத் முழுக்க ராகுல் காந்திக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. நீதிபதி வர்மா இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கினார். ராகுல் காந்தி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டிருப்பதாகவும், இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படுவதாகவும் நீதிபதி வர்மா தெரிவித்தார்.

ராகுல் காந்தி

அதோடு தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய 30 நாள்கள் ஜாமீன் வழங்கப்படுவதாகத் தெரிவித்தார். இந்தத் தீர்ப்பு குறித்து ராகுல் காந்தியின் வழக்கறிஞர் கிரித் பன்வாலா கூறுகையில், “உண்மைக்குச் சோதனை வந்திருக்கிறது. ராகுல் காந்திக்கு எதிராக இதுபோல் பல அவதூறு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. அனைத்து வழக்குகளிலிருந்தும் ராகுல் காந்தி வெளியில் வருவார்” என்று தெரிவித்தார். நாடு முழுவதும் காங்கிரஸ்காரர்கள் இந்தத் தீர்ப்ப்புக்கு எதிராக போராட்டம் நடத்திவருகின்றனர்.

இந்த வழக்கில் ராகுல் காந்தி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கிரித் பன்வாலா, ராகுல் காந்தி தனது பிரசாரத்தில் பிரதமர் மோடியைக் குறிவைத்துப் பேசியதாகவும், அவர்தான் வழக்கு போட வேண்டும் என்று வாதிட்டார். ராகுல் காந்தி ஜோடோ யாத்திரையின்போது தெரிவித்த கருத்துகளுக்கு விளக்கம் கேட்க இரண்டு நாள்களுக்கு முன்பு டெல்லி போலீஸார் ராகுல் காந்தி இல்லத்துக்குச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Author: மு.ஐயம்பெருமாள்

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.