மோடி குறித்து சர்ச்சை கருத்து ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை: சூரத் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

6

சூரத்: பிரதமர் மோடி குறித்து சர்ச்சை கருத்து கூறியதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு எதிரான அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு கூறியுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலின்போது கர்நாடக மாநிலம், கோலாரில் நடந்த தேர்தல் பிரசார பேரணியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்றார். அந்த கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, அனைத்து திருடர்களும் எப்படி மோடி என்ற குடும்ப பெயரை வைத்துள்ளனர்? என்று பேசியதாக தெரிகிறது. ராகுலின் இந்த கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாஜவினர் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இதனிடையே குஜராத்தின் சூரத்தை சேர்ந்த பாஜ எம்எல்ஏவும் குஜராத் முன்னாள் அமைச்சருமான புர்னேஷ் மோடி, நீதிமன்றத்தில் ராகுலுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார். ஒட்டு மொத்த மோடி சமூகத்தையும் ராகுல் அவமதித்துவிட்டதாக குற்றம்சாட்டியிருந்தார். சூரத் நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கின் விசாரணை கடந்த 17ம் தேதி முடிவடைந்தது. வழக்கின் தீர்ப்பை 23ம் தேதி அறிவிப்பதாக நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதற்காக ராகுல்காந்தி நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தார். தீர்ப்பை வாசித்த தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் எச்எச் வர்மா, அவதூறு வழக்கில் இந்திய தண்டனை சட்டம் பிரிவு எண் 499 மற்றும் 500ன் கீழ் ராகுல் காந்தி குற்றவாளி என தீர்ப்பளித்ததோடு அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும் அவருக்கு ஜாமீன் வழங்கியதுடன், தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு அனுமதிக்கும் வகையில் தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்தும் உத்தரவிட்டார். நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து வழக்கறிஞர்களுடன் ராகுல்காந்தி ஆலோசனை நடத்தினார். இதன் அடிப்படையில் உடனடியாக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய காங்கிரசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.லண்டனில் ஜனநாயகம் குறித்து ராகுல் பேசிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தை ஆளும் பாஜ ஒரு பக்கம் முடக்கி வரும் நிலையில், அவதூறு வழக்கில் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி எம்பிக்கள், எம்எல்ஏக்கள் 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறை தண்டனை பெற்றால் குற்றம் நிரூபிக்கப்பட்ட நாளில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். தண்டனை காலத்திற்கு பின் மேலும் 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்பதால் இந்த தண்டனை அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.* ‘உண்மை என் கடவுள்’அவதூறு வழக்கில் தண்டனை அறிவிக்கப்பட்ட நிலையில் ராகுல்காந்தி தனது டிவிட்டர் பதிவில், ‘எனது மதம் உண்மை மற்றும் அகிம்சையை அடிப்படையாக கொண்டது. உண்மையே எனது கடவுள், அகிம்சை அதனை பெறுவதற்கான வழிமுறையாகும்- மகாத்மா காந்தி” என்று குறிப்பிட்டுள்ளார். இன்னொரு டிவிட்டில் சுதந்திர போராட்ட தியாகிகள் பகத்சிங், சுக்தேவ், ராஜ்குரு ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தியுள்ள ராகுல்,’ உண்மையையும் துணிச்சலையும் கொண்டு நாட்டிற்காக அச்சமின்றிப் போராடுவதை இந்திய அன்னையின் இந்தத் துணிச்சலான புதல்வர்களிடமிருந்து கற்றுக்கொண்டேன்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.* யாரிடமும் பாகுபாடு காட்டவில்லைதண்டனையின் அளவு குறித்த விசாரணையின் போது, ​​ராகுல்காந்தியிடம் தண்டனை குறித்து கேட்கப்பட்டபோது, ‘​​​​பொதுமக்களின் நலன் கருதி எனது கடமையின்படி பேசினேன். எனக்கு யாரிடமும், எந்த பாகுபாடும் இல்லை. எனது நாட்டு மக்கள் அனைவரையும் நேசிக்கிறேன். அனைவரையும் அன்பாக கருதுகிறேன்’ என்றார். ராகுல்காந்தியின் வக்கீல் கூறுகையில்,’ ராகுல்காந்திக்கு யாரையும் அவமதிக்கும் நோக்கம் இல்லை. அவரது பேச்சால் புகார்தாரர் எந்த விதமான வலியையும் இழப்பையும் சந்திக்கவில்லை’ என்றார். ஆனால் அரசு தரப்பு வக்கீல் கூறும்போது,’ குற்றம் சாட்டப்பட்டவரின் நடத்தையை நீதிமன்றம் பரிசீலிப்பது முக்கியம். அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும், அவரது குற்றத்திற்கு குறைவான தண்டனை வழங்கினால் சமூகத்திற்கு தவறான செய்தி தரப்படும்’ என்று தெரிவித்தார்.* நடந்தது என்ன?2019ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி அன்று கர்நாடகாவின் கோலாரில் நடந்த காங்கிரஸ் பேரணியில் கலந்து கொண்ட ராகுல்காந்தி பேசும் போது, ‘‘எல்லா திருடர்களும் எப்படி மோடி என்ற பொதுவான குடும்பப்பெயராக வைத்திருக்கிறார்கள்?” என்று அவர் பேசியதாக தெரிகிறது. ராகுல் காந்தியின் கருத்து ஒட்டுமொத்த மோடி சமூகத்தையும் இழிவுபடுத்துவதாகக் கூறி பாஜ எம்எல்ஏவும், குஜராத் முன்னாள் அமைச்சருமான பூர்ணேஷ் மோடி அளித்த புகாரின் பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சூரத் நீதிமன்றத்தில் இருதரப்பு வாதங்களின் விசாரணை கடந்த வாரம் முடிவடைந்து, மார்ச் 23ம் தேதி தீர்ப்பு அறிவிக்கப்படும் என்று ராகுல்காந்தியின் வக்கீல் கிரிட் பன்வாலா கூறினார். இந்த வழக்கில் ராகுல் காந்தி கடைசியாக 2021 அக்டோபரில் தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்ய சூரத் நீதிமன்றத்தில் ஆஜரானார். நேற்று குற்றவியல் அவதூறு தொடர்பான இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 499 மற்றும் 500ன் கீழ் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.* எம்பி பதவி பறிப்பா? 8 ஆண்டு தேர்தலில் நிற்க தடையா? அடுத்து என்ன நடக்கும்?ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்ததை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்ய ராகுல்காந்தி திட்டமிட்டுள்ளார். அவரது தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வசதியாக 30 நாட்கள் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நீதிமன்றத்தின் உத்தரவால் ராகுல்காந்தியின் எம்பி பதவி பறிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 பிரிவு 8(3)ன்படி ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் எந்தக் குற்றத்திற்காகவும் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டால் அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் சூரத் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், மக்களவை செயலகம் ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்து அவரது வயநாடு தொகுதியை காலியாக அறிவிக்க முடியும். இதையடுத்து அந்த இடத்திற்கான இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவிக்கும். உயர் நீதிமன்றத்தால் தண்டனை நிறுத்தி வைக்கப்படாவிட்டால் இந்த சூழ்நிலை நடைமுறைக்கு வரும். அப்போது எம்பி பதவி மட்டுமல்ல அடுத்த 8 ஆண்டுகளுக்கு ராகுல் காந்தி தேர்தலில் போட்டியிட முடியாது. உயர் நீதிமன்றம் ராகுல்காந்தியின் கோரிக்கையை ஏற்காவிட்டால் அவர் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்வார். இந்த நடைமுறைகள் எல்லாம் 3 மாதத்திற்குள் முடிக்காவிட்டால் ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்படும்.பாஜ தலைவர்கள் கருத்து* துஷ்பிரயோகம் செய்ய சுதந்திரம் வேண்டுமா?பாஜவை சேர்ந்த முன்னாள் சட்ட அமைச்சரான ரவி சங்கர் பிரசாத் கூறுகையில், ‘‘நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான காங்கிரஸ் கட்சியின் கருத்துக்கள் நீதித்துறையின் மீது அதற்கு நம்பிக்கை இல்லை என்பதை காட்டுகின்றது. நீதித்துறையை கூட பாக்கெட்டில் வைத்து கொள்ள வேண்டுமா? மக்களை துஷ்பிரயோகம் செய்வதற்கு ராகுலுக்கு முழு சுதந்திரம் இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறதா? நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறது. அது செயலாற்றும்” என்றார். * ராகுலால் காங். பாதிப்புஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ கூறுகையில்,‘‘ராகுல்காந்தி என்ன கூறினாலும் அது தீங்கிழைக்கிறது. அது காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமின்றி மற்றவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. அது நாட்டிற்கு நல்லதல்ல. ராகுலின் செயல்பாடு கட்சியை பாதிக்கும் என்று காங்கிரஸ் எம்பிக்கள் சிலர் என்னிடம் கூறினார்கள்.காங்கிரஸ் கட்சி மூழ்கி வருகின்றது” என்றார். * தீர்ப்பை வரவேற்கிறோம்மும்பையில் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, ‘‘அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு தண்டனை வழங்கப்பட்டதை வரவேற்கிறோம். இதேபோன்று வீர சவார்க்கர் குறித்து அவதூறு பேசியது மற்றும் வெளிநாட்டில் நாட்டை அவமதித்தது உள்ளிட்டவற்றுக்காகவும் அவர் மீது வழக்கு பதியப்பட வேண்டும்” என்றார்.தலைவர்கள் கருத்து * ராகுலுக்கு கெஜ்ரிவால் ஆதரவுடெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்: பாஜ அல்லாத தலைவர்கள் மற்றும் கட்சிகள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை ஒழித்துகட்டுவதற்கு சதி நடக்கிறது. எங்களுக்கு காங்கிரசுடன் கருத்து வேறுபாடு இருக்கிறது. ஆனால் ராகுல்காந்தியை இவ்வாறு அவதூறு வழக்கில் சிக்க வைப்பது சரியல்ல. கேள்வி கேட்பது பொதுமக்கள் மற்றும் எதிர்கட்சிகளின் வேலையாகும். நாங்கள் நீதிமன்றத்தை மதிக்கிறோம். ஆனால் முடிவை ஏற்கவில்லை. * சர்வாதிகாரிக்கு எதிரான குரல்காங்கிரஸ் கட்சியின் டிவிட்டர் பதிவு: ராகுல் காந்தி ஒரு சர்வாதிகாரிக்கு எதிராக குரல் எழுப்புகிறார் என்பது அனைவருக்கும் தெரியும். தவறு, தவறு என்று  கூறும் தைரியத்தை அவர் காட்டுகின்றார். இந்த துணிச்சலால் சர்வாதிகாரி திகைக்கிறார். இதனால் சில நேரத்தில் அமலாக்கத்துறை, சில நேரம்  காவல்துறை, சில நேரம் வழக்குகள் மூலமாகவும், சில நேரம் தண்டனை மூலமாகவும் ராகுலை மிரட்டுவதற்கு முயற்சிக்கிறார். போராடி வெல்வோம். * குரலை உயர்த்தினால் தண்டிக்கப்படுவீர்காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்: இது தான் புதிய இந்தியா, அநீதிக்கு எதிராக குரல் எழுப்பினால், அமலாக்கத்துறை, சிபிஐ, போலீஸ், எப்ஐஆர் மூலமாக தண்டிக்கப்படுவீர்கள். ராகுல்காந்தியும் உண்மையை பேசியதற்காகவும், சர்வாதிகாரிக்கு எதிராக குரல் எழுப்பியதற்காகவும்  தண்டிக்கப்பட்டுள்ளார்.* பாஜ அல்லாத தலைவர்களுக்கு எதிரான சதிஜார்கண்ட்  முதல்வர் ஹேமந்த் சோரன்: நீதித்துறை மீது முழு நம்பிக்கை இருந்தாலும்  அவதூறு வழக்கில் ராகுல்காந்தியை தண்டிக்கும் முடிவில் எனக்கு உடன்பாடு  இல்லை. பாஜ அல்லாத தலைவர்கள் சதிகளுக்கு ஆளாகிறார்கள். இது நாட்டின்  ஜனநாயகம் மற்றும் அரசியல் மீதான கவலையளிக்கும் விஷயமாகும். தந்திரத்திற்கு  முன் ஜனநாயகத்திற்கு எந்த மதிப்பும் இல்லை.* எனது சகோதரர்  பயப்பட மாட்டார்பிரியங்கா காந்தி: எனது சகோதரர் ஒருபோதும் பயந்தது கிடையாது. பயப்படமாட்டார். அவர் உண்மையை பேசி வாழ்பவர். அவர் தொடர்ந்து உண்மையை மட்டுமே பேசுவார். இந்த நாட்டு மக்களின் குரலாக ஒலித்துக்கொண்டே இருப்பார். பயந்த அதிகாரத்தின் ஒட்டுமொத்த சக்தியும் ராகுல் காந்தியின் குரலை நசுக்க முயற்சிக்கிறது. * மேல்முறையீடு செய்வோம்காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே: இந்த வழக்கில் மேல்முறையீடு செய்வோம். உங்களது ஒரு விரலை மற்றவர்களுக்கு எதிராக நீட்டினால் மீதமுள்ள நான்கு விரல்களும் உங்களை நோக்கி இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். * காங். எம்எல்ஏக்கள் அமளிஅவதூறு வழக்கில் ராகுலுக்கு தண்டனை அறிவிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஜார்கண்ட் சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து பாஜ ஆட்சிக்கு எதிராக முழக்கமிட்டனர். அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜவும் கூச்சலிட்டதால் அவையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது. * சரியான தீர்ப்பு வரும்ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்: இன்று நீதித்துறை மீது அழுத்தம் உள்ளது. தேர்தல் ஆணையம், அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ போன்ற முதன்மை அமைப்புக்கள் மீது அழுத்தம் உள்ளது. அவற்றின் நம்பகதன்மை தவறாக பயன்படுத்தப்படுகின்றது. அத்தகைய சூழலின்போது இத்தகைய தீர்ப்புகள் வருகின்றது. நீதித்துறை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. வரும் காலத்தில் சரியான தீர்ப்பு வரும்.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.