“கிழக்கிலிருந்து மேற்கு வரையிலும், வடக்கிலிருந்து தெற்கு வரையிலும் பா.ஜ.க ஆட்சி நடைபெறுகிறது. ஆகவே, பா.ஜ.க மட்டுமே `பான் இந்தியா’ கட்சி” என்று பெருமிதத்துடன் பேசியிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. பா.ஜ.க-வின் புதிய அலுவலகம் தலைநகர் டெல்லியில் மார்ச் 28-ம் தேதியன்று திறக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரதமர் மோடி பேசினார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, “1984-ம் ஆண்டின் இருண்ட காலத்தை இந்தியா ஒருபோதும் மறக்காது. அந்தக் காலகட்டத்தில் நாங்கள் முற்றிலுமாக அழிந்தோம். ஆனாலும், மனஉளைச்சலுக்கு ஆளாகவில்லை. அதற்காக மற்றவர்களைக் குறைகூறவில்லை. வெறும் இரண்டே இரண்டு மக்களவைத் தொகுதியைத்தான் அப்போது வென்றோம். இந்த இரண்டு தொகுதிகளுடன் தொடங்கிய எங்களின் பயணம், 303 தொகுதிகளை எட்டியிருக்கிறது. கிழக்கிலிருந்து மேற்கு வரையிலும், வடக்கிலிருந்து தெற்கு வரையிலும் பா.ஜ.க மட்டுமே `பான் இந்தியா’ கட்சியாக இருக்கிறது” என்றார்.
அந்த நிகழ்ச்சியில், பா.ஜ.க ஆட்சியின் பெருமைகள் பற்றி மோடி அதிகமாகப் பேசினார். அப்போது, “தொலைக்காட்சிகளிலோ, செய்தித்தாள்களிலோ, ட்விட்டரிலோ, யூடியூப் சேனல்களிலிருந்தோ வந்த கட்சியல்ல பா.ஜ.க. இது, முற்றிலும் தொண்டர்களின் உழைப்பால் உருவான கட்சி” என்றார் மோடி. ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்ட விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரளுவதைக் குறிப்பிட்டுப் பேசிய மோடி, “ஊழல், ஒரே மேடையில் ஒன்று கூடுகிறது” என்று விமர்சித்தார். ஆனால், அதானி குழுமத்தின் மோசடி குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பிவரும் கேள்விகள் குறித்து ஒரு வார்த்தைகூட பிரதமர் மோடியிடமிருந்து வரவில்லை.

தற்போது, தனித்தும் கூட்டணியாகவும் 16 மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சியில் இருக்கிறது. வடக்கிலிருந்து தெற்கு வரை பா.ஜ.க-வின் ஆட்சி நடைபெறுவதாக மோடி குறிப்பிடுகிறார். வட மாநிலங்களில் பலம் வாய்ந்த கட்சியாக பா.ஜ.க இருக்கிறது. ஆனால் தெற்கே, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய ஐந்து மாநிலங்களில், கர்நாடகாவில் மட்டுமே பா.ஜ.க ஆட்சி நடைபெறுகிறது.
காங்கிரஸ் கட்சி, ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்துவந்த கர்நாடகாவில், முதன் முறையாக 2007-ம் ஆண்டு பா.ஜ.க ஆட்சிக்கு வந்தது. பி.எஸ்.எடியூரப்பா முதல்வரானார். பிறகு, 2013-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. சித்தராமையா முதல்வரானார். தற்போது, பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்றுவருகிறது.
கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் மே 10-ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. கர்நாடகா தேர்தலையொட்டி கடந்த சில மாதங்களாக பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் கர்நாடகாவுக்கு அடிக்கடி சென்றுவருகிறார்கள். சமீபத்தில் கர்நாடகாவின் தாவணகெரேவில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மோடி, ‘மத்தியிலும் மாநிலத்திலும் இருக்கும் இரட்டை இன்ஜின் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள மக்கள் முடிவுசெய்துவிட்டார்கள்’ என்று குறிப்பிட்டார். ஆனால், மக்கள் மனதில் என்ன இருக்கிறது என்பது மே 13-ம் தேதிக்குப் பிறகுதான் தெரியவரும்.

நடைபெறவிருக்கும் தேர்தலில் வெற்றிபெற்று கர்நாடகாவை பா.ஜ.க தக்கவைத்துக்கொண்டால்தான், மோடி சொல்கிற ‘பான் இந்தியா’ கட்சியாக பா.ஜ.க இருக்கும். ஆனால், முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா அதிருப்தியில் இருக்கிறார் என்றும், உட்கட்சிப்பூசலால் பா.ஜ.க-வுக்குப் பின்னடைவு ஏற்படும் என்றும் செய்திகள் கூறுகின்றன. மேலும், பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ.க அரசுமீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதனால், காங்கிரஸுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக அரசியல் நிபுணர்கள் கணிக்கிறார்கள்.
பா.ஜ.க-வுக்கு எதிரான சவால்களை முறியடிப்பதற்கான வியூகங்களை கர்நாடக பா.ஜ.க-வினருக்கு வகுத்துக்கொடுத்திருக்கிறார் அமித் ஷா. அந்த வியூகங்கள் வெற்றிபெறுமானால் பா.ஜ.க-வுக்கு அதிக இடங்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அதே நேரம், முன்னாள் முதல்வர் குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் கணிசமான தொகுதிகளைப் பெற்று, தொங்கு சட்டமன்றம் உருவாகலாம். அப்படியொரு சூழல் ஏற்பட்டால், மீண்டும் முதல்வராகும் வாய்ப்பு கிடைக்கும் என்ற நினைப்பில் குமாரசாமி இருக்கிறார் என்கிறார்கள். எனவே, கர்நாடகத்தில் பா.ஜ.க வென்று, மோடியின் ‘பான் இந்தியா பா.ஜ.க’ கனவு நனவாவதற்கு குறைந்த அளவிலே வாய்ப்புகள் இருப்பதாகச் சொல்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
Author: ஆ.பழனியப்பன்