மேற்கு வங்கத்தில் ஆம்புலன்ஸில் செல்ல பணம் இல்லாததால் குழந்தை சடலத்துடன் பேருந்தில் பயணித்த தந்தை: அறிக்கை தாக்கல் செய்ய முதல்வர் மம்தா உத்தரவு

20

கொல்கத்தா: ஆம்புலன்ஸில் செல்ல பணம் இல்லாததால் மேற்கு வங்கத்தை சேர்ந்த ஒருவர், தனது 5 மாத குழந்தையின் சடலத்துடன் பேருந்தில் பயணம் செய்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் உத்தர் தினாஜ்பூர் மாவட்டம் தங்கிபாரா கிராமத்தைச் சேர்ந்தவர் தேவ் சர்மா. இவரது 2 மகன்களுக்கும் கடந்த 7-ம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இரு குழந்தைகளும் சிலிகுரியில் உள்ள வடக்கு வங்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் குணமடைந்த ஒரு குழந்தையுடன் தேவ் சர்மாவின் மனைவி சொந்த ஊர் திரும்பினார். மற்றொரு 5 மாத குழந்தையை தேவ் சர்மா மருத்துவமனையில் இருந்து பார்த்துக் கொண்டார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு அந்தக் குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்தது. அந்தக் குழந்தையின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் டிரைவரை தேவ் சர்மா அணுகினார். அவர் ரூ.8,000 கேட்டதாக கூறப்படுகிறது. குழந்தையின் சிகிச்சைக்காக ஏற்கெனவே வைத்திருந்த ரூ.16,000 செலவாகிவிட்டதால், தேவ் சர்மாவிடம் ஆம்புலன்ஸ் டிரைவருக்கு கொடுக்க பணம் இல்லை. இதனால் தேவ் சர்மா தனது குழந்தையின் சடலத்தை ஒரு பையில் மறைத்து வைத்து, சிலிகுரியில் இருந்து ராய்கஞ்ச் பகுதிக்கு தனியார் பேருந்து ஒன்றில் புறப்பட்டுச் சென்றார். பின் அங்கிருந்து மற்றொரு பேருந்தில் ஏறி தங்கிபாரா கிராமத்துக்கு வந்தார். குழந்தையின் சடலத்துடன் தேவ் சர்மா பேருந்தில் சுமார் 200 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்துள்ளார். இச்சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாக பரவியது. இதையடுத்து ஆளும் திரிணமூல் காங்கிரஸ் மீது பாஜக குற்றம் சாட்டியது. இந்த வீடியோ வெளியிட்ட பாஜக எம்எல்ஏ சுவேந்து அதிகாரி, ‘முதல்வரின் முன்னேறிய வங்கத்தின் மாதிரியை இது காட்டுகிறது’ என குறிப்பிட்டார். இச்சம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தர் தினாஜ்பூர் துணை தலைமை மருத்துவ அதிகாரிக்கு முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.

ஆம்புலன்ஸில் செல்ல பணம் இல்லாததால் மேற்கு வங்கத்தை சேர்ந்த ஒருவர், தனது 5 மாத குழந்தையின் சடலத்துடன் பேருந்தில் பயணம் செய்துள்ளார்.

Author: செய்திப்பிரிவு

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.