நாட்டில் அதிகரித்துவரும் ஆன்லைன் மோசடிகளுக்கு யாரும் தப்புவதில்லை. அதுவும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை அதிகரித்த பிறகு ஆன்லைன் மோசடிகள் அதிகரித்திருக்கின்றன. ஹரியானா மாநிலம், குருகிராம் செக்டர் 43-ல் வசிப்பவர் சங்கமித்ரா (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது).
இவருக்கு கடந்த 3-ம் தேதி ஒருவர் போன் செய்து, `உங்களுக்கு வந்த கூரியரில் சட்டவிரோதப் பொருள்கள் இருப்பதாகக் கூறி சுங்கவரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து கொண்டனர்’ என்று தெரிவித்தார். அதோடு, `உங்களை மும்பை போலீஸார் தொடர்புகொள்வார்கள்’ என்றும் கூறினார். சிறிது நேரத்தில் இரண்டு பேர் அந்தப் பெண்ணை போனில் அழைத்தனர். அவர்களில் ஒருவர் தன்னை மும்பை போலீஸ் துணை கமிஷனர் பால்சிங் ராஜ்புத் என்று தெரிவித்தார்.

மற்றொருவர் தான் இன்ஸ்பெக்டர் அஜய் பன்சால் என்றும் மும்பை குற்றப்பிரிவில் பணியாற்றுவதாகவும் தெரிவித்தார். இருவரும் குருகிராம் பெண்ணிடம், `மும்பையிலுள்ள உங்களது மூன்று வங்கிக் கணக்குகளில் ஏராளமான சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனைகள் நடந்திருக்கின்றன’ எனத் தெரிவித்தனர். உடனே அந்தப் பெண் `எனக்கு மும்பையில் வங்கிக் கணக்கே கிடையாது’ என்று தெரிவித்தார். ஆனால் அவர்கள், `உங்கள்மீது பண மோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்தனர். அதோடு குருகிராம் வந்து கைதுசெய்வோம் என்றும் மிரட்டினர்.
பண மோசடி வழக்கிலிருந்து அவரது பெயரை விடுவிக்க முதலில் ரூ.4,99,999 அனுப்பும்படி கேட்டுக்கொண்டனர். அந்தப் பெண்ணும் அவர்கள் கேட்ட தொகையை அனுப்பிவைத்தார். அடுத்தடுத்து இரண்டு பேரும் பல்வேறு காரணங்களைக் கூறி அந்தப் பெண்ணை பணம் அனுப்பச் சொல்லி மிரட்டினர். அந்தப் பெண்ணும் மிரட்டலுக்கு பயந்து ஆறு பரிவர்த்தனைகள் மூலம் 20,37,194 ரூபாயை அனுப்பிவைத்தார்.

அதுவும் இவை அனைத்தும் ஒரே நாளில் நடந்தன. அப்படியிருந்தும் தொடர்ந்து பணம் கேட்டுக்கொண்டே இருந்ததால் அவர்கள் தன்னை மோசடி செய்வதை அறிந்து இது குறித்து குருகிராம் போலீஸில் அந்தப் பெண் புகார் செய்தார். குருகிராம் குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இது குறித்து உதவி போலீஸ் கமிஷனர் திவான், “பாதிக்கப்பட்ட பெண்ணின் வங்கிக் கணக்கிலிருந்து எந்த வங்கிக் கணக்குக்கு பணம் சென்றிருக்கிறது என்பது குறித்து விசாரித்துவருகிறோம். கடந்த ஒரு வாரத்தில் இது போன்று மூன்று புகார்கள் வந்திருக்கின்றன. மும்பை போலீஸார்போல் நடித்து மோசடி செய்திருக்கிறார்கள்” என்றார்.
Author: மு.ஐயம்பெருமாள்