தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் சட்ட மசோதாவை கடந்த
ஆண்டு அக்.19ம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழ்நாடு அரசு
நிறைவேற்றியது. ஆன்லைன் சூதாட்டங்களுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் அவசர
சட்டத்துக்கு ஏற்கனவே ஆளுநர் ஒப்புதல் அளித்திருந்தார். இதனைத்தொடர்ந்து,
இந்த அவசர சட்டத்தை சட்டமாக்குவதற்கான சட்ட மசோதாவைத்தான் தமிழ்நாடு அரசு,
சட்டப்பேரவையில் தாக்கல் செய்திருந்தது. இந்த சட்ட மசோதா ஆளுநரின்
ஒப்புதல்கோரி அனுப்பப்பட்டது. இந்த சட்ட மசோதா ஆளுநரிடம் கடந்த 4 மாதங்களாக
பரிசீலனையில் இருந்தது. இது கிடப்பில் போடப்பட்ட காரணத்தால், கடந்த சில
மாதங்களில், சூதாட்டத்தால் லட்சக்கணக்கில் பணத்தை இழந்த 12 பேர்,
மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இந்நிலையில், இரண்டாவது
முறையாக இச்சட்ட மசோதாவில் சில விளக்கங்களை கேட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி
கடந்த 6ம்தேதி தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளார். ஏற்கனவே
ஆளுநர் கேட்ட விளக்கங்களுக்கு தமிழ்நாடு அரசு, உரிய பதில் அளித்த நிலையில்,
மசோதாவை திருப்பி அனுப்பியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனால், தமிழ்நாடு அரசு மீண்டும் இந்த சட்ட மசோதாவை சட்டப்பேரவையில்
நிறைவேற்றி ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்க உள்ளது. தமிழ்நாடு அரசின்
2023-24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் பேரவையில் வரும் 20ம்தேதியும், அடுத்த
நாள் வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுகின்றன. இக்கூட்டத்தொடரில்
மீண்டும் ஆன்லைன் சூதாட்ட தடைசட்ட மசோதா நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி
வைக்கப்பட உள்ளது. ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான சட்டத்தை இயற்ற,
தமிழ்நாடு அரசுக்கு அதிகாரமில்லை எனக்கூறி, ஆளுநர் மசோதாவை திருப்பி
அனுப்பியுள்ளார். மசோதா மீண்டும் நிறைவேற்றப்படும்போது, ஆளுநர் எழுப்பிய
அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“இந்த விவகாரத்தில் நீதிமன்றத்திற்கு செல்லவேண்டிய அவசியமில்லை,
ஏனென்றால், ஆன்லைன் சூதாட்ட விவகாரத்தில் சட்டம் இயற்ற நீதிமன்றம் ஏற்கனவே
அதிகாரம் கொடுத்துள்ளது. உயர்நீதிமன்ற வழிகாட்டுதல் படியே
ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்து பரிந்துரைகள்
பெறப்பட்டன. நிபுணர் குழு அளித்த பரிந்துரைகளின்படியே இந்த மசோதா
நிறைவேற்றப்பட்டுள்ளது’’ என தமிழ்நாடு அரசின் சட்ட அமைச்சர் ரகுபதி தெளிவாக
விளக்கம் அளித்துள்ளார். ஒன்றிய அரசின் அதிகாரங்கள் பட்டியலில் உள்ள 34வது
பிரிவின் கீழ்தான் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆளுநர்
குறிப்பிட்டதுபோல் 33வது பிரிவின் கீழ் மசோதா நிறைவேற்றப்படவில்லை.
சூதாட்டத்தில் மூழ்கி, பலர் பணத்தை இழப்பது மட்டுமின்றி, உயிரையும் இழக்க
நேரிடுகிறது. எனவே, மக்களை பாதுகாக்கவே இத்தடை சட்டம் கொண்டு
வரப்படுகிறது. சட்டமன்றத்தில் இந்த மசோதாவை மீண்டும் நிறைவேற்றி
அனுப்பினால், அதை ஆளுநர் நிராகரிக்க முடியாது. ஏற்கனவே தெலங்கானா மாநிலம்
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்துள்ளது. தற்போது தமிழ்நாடு அரசும் இச்சட்ட
மசோதாவை மீண்டும் நிறைவேற்ற உள்ளது. இதை முன்மாதிரியாக கொண்டு, இந்தியா
முழுவதும் மற்ற மாநிலங்களும் ஆன்லைன் சூதாட்டத்தை தடைசெய்ய, தமிழ்நாடு அரசு
முன்னோட்டமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
Author : Dinakaran