முதல்வரின் தூக்கத்தை கெடுப்பதில் நம்பர் ஒன்: தொடரும் அமைச்சர் பொன்முடியின் சர்ச்சை பேச்சுகள்!

6

தி.மு.க ஆட்சிக்கு வந்து கடந்த இரண்டு ஆண்டுகளில், பல அமைச்சர்களின் செயல்பாடுகள் கடும் விமர்சனத்துக்கும் கண்டனத்துக்கும் உள்ளாகின. குறிப்பாக, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்களின் சர்ச்சைப் பேச்சுகளுக்கும் செயல்பாடுகளுக்கும் சமூகவலைதளங்களில் கண்டனம் எழுந்தது.

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி

குறிப்பாக, அமைச்சர் பொன்முடியின் பேச்சு. தி.மு.க அரசு நிறைவேற்றிய பேருந்துகளில் கட்டணமில்லாமல் பெண்கள் பயணம் செய்யலாம் என்கிற திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்தத் திட்டத்தால், பெண்கள் தங்கள் வருமானத்தில் கணிசமான தொகையை ஒவ்வொரு மாதமும் சேமிக்கிறார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் பெருமையாகச் சொல்லிவரும் நிலையில், தி.மு.க அரசின் திட்டத்தால் பெண்கள் ஓசியில் பயணம் செய்கிறார்கள் என்றும், ‘ஓசி பஸ்’ என்றும் அமைச்சர் பொன்முடி ஒரு கூட்டத்தில் பேசினார். அவரது பேச்சு கடும் விமர்சனத்துக்கு உள்ளானது

அதேபோல, விழுப்புரம் மாவட்டத்தில் நியாயவிலைக் கடை கட்டடத் திறப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி பேசினார். அப்போது, “பெண்களுக்கு திராவிட மாடல் முக்கியத்துவம் கொடுக்கிறது” என்று கூறிய பொன்முடி, ஒன்றியக் குழு தலைவரைப் பார்த்து, “ஏம்மா…நீ எஸ்.சி தானே…” என்று மேடையிலே சாதியை குறித்து பேசினார். அதுவும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதற்கு முன்பாக, அமைச்சர் ராஜகண்ணப்பன் பி.டி.ஓ ஒருவரை சாதியைச் சொல்லித் திட்டினார் என்று குற்றச்சாட்டு எழுந்தது. அதனால், போக்குவரத்துறை அமைச்சராக இருந்த அவர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றப்பட்டார். அமைச்சர் எ.வ.வேலு, `நிலம் இல்லாதவன்கூட, ஒரு பச்சைத் துண்டைப் போட்டுக்கொண்டு நிலத்தை எடுக்கக் கூடாது என்கிறான்’ என்று விவசாயிகளைக் கொச்சைப்படுத்தும் விதமாகப் பேசினார். காவல்துறை அதிகாரி ஒருவரைப் புகழ்ந்து பேசுவதாக நினைத்து, ‘அவரின் திறமை என்னவென்றால், ஒருவரைக் குற்றவாளியாக ஆக்கவும் முடியும்… குற்றவாளிப் பட்டியலிலிருந்து நீக்கவும் முடியும்’ என்று கூறி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தார் அமைச்சர் நேரு. 

ஸ்டாலின்

தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தன்னைச் சந்திக்க வந்த குறவர் பழங்குடியின மக்களின் பிரதிநிதிகளையும், தென்காசி (தனி) நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ்குமாரையும் மரியாதைக் குறைவாக நடத்தியதாகச் சர்ச்சை எழுந்தது. அமைச்சர்களின் விரும்பத்தகாத இத்தகைய பேச்சுகளாலும் செயல்களாலும், தி.மு.க அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் உணர்ந்தார். ஆகவேதான், தூக்கத்தை இழந்து தவிப்பதாக கட்சியினர் மத்தியில் வேதனையை வெளிப்படுத்தினார் முதல்வர் ஸ்டாலின்.

தி.மு.க பொதுக்குழு கூட்டம் கடந்த ஆண்டு அக்டோபர் 9-ம் தேதி சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “மழையே பெய்யவில்லை என்றாலும் என்னைத்தான் குறை சொல்வார்கள். மழை அதிகமாகப் பெய்தாலும் என்னைத்தான் குறை சொல்வார்கள். ஒரு பக்கம் திமுக தலைவர்… இன்னொரு பக்கம் தமிழ்நாடு முதலமைச்சர். மத்தளத்திற்கு இரண்டு பக்கங்களும் அடி என்பதைப்போல் இருக்கிறது என்னுடைய நிலைமை.

என்னைத் துன்புறுத்துவதுபோல் மூத்த அமைச்சர்கள், நிர்வாகிகள் செயல்படக்கூடாது. நாள்தோறும் கட்சிக்காரர்கள் யாரும் புது பிரச்னையை உருவாக்கியிருக்கக் கூடாது என்ற நினைப்போடுதான் கண் விழிக்கிறேன். இது சில நேரங்களில் தூங்கவிடாமலும் செய்கிறது” என்று வேதனைப்பட்டார். மேலும், “பாத்ரூம், பெட்ரூமை தவிர மற்ற இடங்கள் பொது இடங்கள் என ஆகிவிட்டன. எல்லா இடங்களிலும் நம்மைக் கண்காணிக்கிறார்கள். பொதுவெளியில் அமைச்சர்களும், கட்சியினரும் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும்” என்று முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

மூத்த அமைச்சர்களின் பேச்சுக்கள் என்னைத் தூங்கவிடாமல் செய்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் வேதனையுடன் பேசியபோது, அந்த மேடையில் அமர்ந்திருந்த பொன்முடி, முதல்வரின் பேச்சை சிரித்தவாறு கேட்டுக்கொண்டிருந்தார் என்ற விமர்சனமும் அப்போது எழுந்தது.

கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

முதல்வரின் பேச்சுக்குப் பிறகு, ஏடாகூடமாகப் பேசி மாட்டிக்கொண்டுவிடக் கூடாது என்பதில் பொன்முடி உள்ளிட்ட அமைச்சர்கள் கொஞ்சம் கவனமாகவே இருந்தார்கள். இந்த நிலையில் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் அமைச்சர் பொன்முடி. திருக்கோவிலூரில் கடந்த வாரம் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டார். அதில் பேசிய பொன்முடி, “நாங்கள் ஆட்சிக்கு வந்து 22 மாதங்கள் ஆகின்றன. நகரங்களிலும் கிராமங்களிலும் பல பணிகள் நடைபெற்றுவருகின்றன. நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு மூலமாக நகர்ப்புற வளர்ச்சிக்காக பல பணிகளை முதல்வர் ஸ்டாலின் செய்துகொண்டிருக்கிறார். அது சென்னையாக இருந்தாலும்… விழுப்புரமாக இருந்தாலும்… திருக்கோவிலூராக இருந்தாலும்…” என்று பொன்முடி பேசினார்.

பொன்முடி பேசிக்கொண்டிருந்தபோது, கூட்டத்தில் இருந்த ஒரு பெண் நிறைய குறைகள் இருப்பதாகக் கூறினார். அதனால் எரிச்சலடைந்த அமைச்சர் பொன்முடி, “என்னது குறையா… கொஞ்சம் வாயை மூடிக்கிட்டு இரு” என்று கோபப்பட்டார். பிறகு, “உன் வூட்டுக்காரர் வந்திருக்காரா?” என்று பொன்முடி கேட்டார். அதற்கு, “அவர் போயிட்டார் (இறந்துவிட்டார்)” என்று அந்தப் பெண் பதில் சொல்ல… “போயிட்டாரா… பாவம்… நல்லவேளை…” என்று சிரித்தார் பொன்முடி. அமைச்சர் பொன்முடியின் இந்தப் பேச்சு சமூகவலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டது. இதன் மூலம் மீண்டும் அவர் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறார்.

பொன்முடி

பொதுமக்களில் ஒருவர் குறைகள் இருப்பதாகச் சொன்னால், அதைப் பொறுமையாகக் கேட்கும் பக்குவமும் முதிர்ச்சியும் மக்கள் பிரதிநிதிகளுக்கு இருக்க வேண்டும். அதுவும் அனுபவம் வாய்ந்த மூத்த அமைச்சரான பொன்முடிக்கு அந்தப் பக்குவம் இன்னும் அதிகமாக இருக்க வேண்டும். ஆனால், பொதுமக்களின் விமர்சனங்களைப் பற்றி கவலைப்படாமல், முதல்வரின் உணர்வையும் வேண்டுகோளையும் பொருட்படுத்தாமல், நான் இப்படித்தான் நடந்துகொள்வேன் என்கிற போக்கில் ஒரு மூத்த அமைச்சர் நடந்துகொள்வது மிகவும் வருத்தத்துக்குரிய என்று வேதனைப்படுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

 

Author: ஆ.பழனியப்பன்

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.