மிரட்டிய அலைகள்; விரட்டிய தொற்று; வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட கோவிட்-ஒரு ரீவைண்டு! #3YearsOfLockdown

17

கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம், 24-ம் தேதியை, அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது. கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் 21 நாள்கள் ஊரடங்கு என்று இந்திய பிரதமர் பொதுமக்களிடம் பேசியதை அடுத்து, பல்வேறு சம்பவங்கள் அந்த மாதத்தில்தான் நடந்தன. லாக்டௌன், க்வாரன்டீன் போன்ற புதுப்புது நிகழ்வுகளால் மக்கள் பதற்றமும் பீதியும் அடைந்தனர்.

இந்தியாவின் முதல் கோவிட் 19 தொற்று!

மார்ச் 25-ம் தேதி நாடு முழுவதும் பொது ஊரடங்கு தொடங்கினாலும், முதன்முதலில் ஜனவரி 30-ம் தேதி இந்தியாவின் முதல் கோவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டது. கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவிக்கு கோவிட் 19 தொற்று கண்டறியப்பட்டது. இவர், சீனாவின் வூஹான் நகரத்தில் இருந்து இந்தியாவுக்கு வந்த மருத்துவ மாணவி ஆவார்.

சீனாவில் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே, வூஹான் நகரத்தில் கோவிட் நோய்த்தொற்று பரவ ஆரம்பித்தது. சீனா முழுவதும் நோய்த்தொற்று அதிகரிக்கத் தொடங்கியதும், அங்கிருந்த பிறநாட்டவர்கள் வெளியேறுவது பெரும் சவாலாக மாறியது. அப்படிப்பட்ட சூழலில்தான் மத்திய அரசின் உதவியோடு பல்வேறு இந்திய மாணவர்கள் நாடு திரும்பினர்.

நாடு முழுவதும் ஊரடங்கு!

2020-ம் ஆண்டு ஜனவரி 17-ம் தேதி தொடங்கி சீனாவில் இருந்து வந்த அனைத்துப் பயணிகளுக்கும் கோவிட் 19 சோதனை மேற்கொள்ளப்பட்டது. மார்ச் 4-ம் தேதி முதல், அனைத்து நாடுகளைச் சேர்ந்த பயணிகளும் பரிசோதிக்கப்பட்டனர். உச்சகட்டமாக மார்ச் 22-ம் தேதி முதல், வெளிநாட்டு விமானச்சேவையை இந்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.

Lockdown

பிரதமர் நரேந்திர மோடி, மார்ச் 24-ம் தேதி நாட்டு மக்கள் அனைவரிடமும் தொலைக்காட்சி மூலம் பொது உரை நடத்தினார். அதில் மார்ச் 25-ம் தேதி தொடங்கி, 21 நாள்கள் அனைத்து மக்களையும் வீடுகளுக்குள் இருக்குமாறு அறிவுறுத்தினார்.

நோய்த்தொற்றை சமாளிக்க, களத்தில் நின்று பணிபுரியும் முன்களப் பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களான பால், காய்கறிகளை விநியோகிக்கப்பவர்களைத் தவிர அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

பதற்ற மனநிலையில் மக்கள்!

ஊரடங்கு என்று சொன்னதும் பெரும்பாலான மக்களுக்கு நோய்த்தொற்று அச்சத்தைத் தாண்டி, ஊரடங்கு எப்படி இருக்கும், அன்றாட‌த் தேவைகளுக்கான பொருள்கள் சரியாகக் கிடைக்குமா போன்ற பயமே பெரிதாக இருந்தது. அரிசி, பருப்பு போன்ற மளிகைப் பொருள்களை தேவைக்கு வாங்கி வைப்பதாக நினைத்து, மக்கள்கூட்டம் கடை வாசல்களில் அலைமோதத் தொடங்கியது.

பள்ளி, கல்லூரிகளில் தொடங்கி அலுவலகங்கள் வரை அனைத்தும் தற்காலிமாக மூடப்பட்டன. பெருநகரங்களில் மாட்டிக்கொண்ட தொழிலாளர்கள் பலர் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் தவித்தனர். போக்குவரத்து சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டதே இதற்கு முக்கிய காரணமாக இருந்தது. பல தொழிலாளர்கள் தங்கள் சொந்த கிராமங்களுக்கு செல்ல பல கிலோமீட்டர்கள் நடக்கத் தொடங்கினர். இது அப்போது மிகப்பெரிய பேசுபொருளாக மாறியது.

கொரோனா தடுப்பு நடவடிக்கை

ஊரடங்கு தொடங்கிய காலத்தில் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பலருக்கு அது ஒருவகையில் ஓய்வாகத் தெரிந்தது. குடும்பத்துடன் நேரம் செலவிடுவது, நன்றாகச் சமைத்து சாப்பிடுவது என்று பொழுதைக் கழித்தனர். தாயம், கேரம் போன்ற விளையாட்டுகள், வீடுகளுக்குள் முடங்கியவர்களின் பொழுதுபோக்காக மாறின.

ஆனால் நாள்கள் செல்லச்செல்ல, ஊரடங்கின் விளைவை அனைவராலும் உணர முடிந்தது. பணப் புழக்கம் குறைந்தது, பலரும் தொழிலில் நஷ்டத்தை சந்திக்கத் தொடங்கினர். வேலையிழப்பு, ஊதியம் குறைப்பு உள்ளிட்ட சிக்கல்களை பலர் சந்தித்தனர். ஆன்லைன் முறையில் கல்வி தொடர்ந்தாலும் ஊரடங்கு, மாணவர்களின் கல்வியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதேபோல் அடிமட்ட நிலையில் இருந்த மக்களின் வாழ்வாதாரத்தை, ஊரடங்கு புரட்டிப் போட்டது. அவர்களின் வாழ்க்கை அல்லாடத் தொடங்கியது.

திருமணம், துக்க நிகழ்வுகளுக்குச் செல்வதற்குக்கூட கடும் கட்டுப்பாடுகள், அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியே செல்ல இ- பாஸ் போன்ற நடைமுறைகள், மக்களுக்குப் புதிய அனுபவத்தை தந்தன. கபசுரக் குடிநீர், நிலவேம்பு கஷாயம் போன்ற பாரம்பர்ய மருத்துவ முறைகள் பிரபலமாகின.

கொரோனா பாதித்தவர்களுக்கு ஆக்ஸிஜன் பிரச்னை இருந்ததால், மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் சிலிண்டர் தேவை அதிகரித்தது. மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிய, படுக்கை கிடைப்பதே அரிதானது. தலையில் தொடங்கி, கால் மூடிய கவச உடைகளில் மருத்துவர்கள் வலம் வந்ததையும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க, பொது இடங்களில் வரையப்பட்ட வட்டங்களையும் மறந்துவிட முடியுமா?

கொரோனா மரணங்கள்

பின்னர் வந்த நாள்களில் கொரோனாவின் தாக்கம் குறையத் தொடங்கியதும், ஊரடங்கு கெடுபிடிகள் கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்த்தப்பட்டன. எனினும் மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப நீண்ட காலம் தேவைப்பட்டது. முகக்கவசம் அணிந்து கொண்டு வெளியே செல்வது தான் நியூ நார்மலாக மாறியது.

நோய்தொற்றின் மூன்று அலைகள்!

இந்தியாவில் கோவிட் 19 தொற்றின் முதல் அலை 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் உச்சத்தை அடைந்தது. அந்தச் சமயத்தில் சராசரியாக ஒரு நாளைக்கு 412 பேர் நோய்தொற்றால் மரணமடைந்தனர். மூன்று அலைகளிலும் மிகவும் வீரியமான இரண்டாம் அலை 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கியது. இந்த அலையின் தாக்கம் 60 நாள்கள் வரை அதிகமாக இருந்தது. கிட்டத்தட்ட 1.6 கோடி பேர் நோய்தொற்றால் பாதிக்கப்பட்டதோடு 1.7 லட்சம் பேர் டெல்டா அலையால் மரணமடைந்தனர்.

ஆக்சிஜன் பற்றாக்குறை

நாடு முழுவதும் பல இடங்களில் மருத்துவமனைகளில் படுக்கை பற்றாக்குறை, இரண்டாம் அலை சமயத்தில் நிகழ்ந்தது. இது தவிர ஆக்ஸிஜன் சிலிண்டர் போதிய அளவில் இல்லாமல் போனதும் பலர் உயிரிழக்கக் காரணமானக மாறியது. இறந்தவர்களின் பிணங்களை‌ அடக்கம் செய்ய போதுமான இடுகாடுகள் இல்லாமல் தற்காலிக இடுகாடுகள் உருவாக்கப்பட்ட துயர சம்பவங்களும் நடந்தன.

இரண்டாம் அலை ஏற்பட்ட சமயத்தில் மக்கள் அரசின் மீதான அதிருப்தி மனநிலையை வெளிப்படுத்தினர்‌. போதுமான கட்டுப்பாடுகள் இன்றி அரசியல் கூட்டங்களை நடத்தியதும், கும்பமேளா போன்ற நிகழ்வுகளில் கூடிய கூட்டமும் நோய்ப் பரவலுக்கான முக்கிய காரணமாகச் சொல்லப்பட்டது.

வேரியன்ட் பரவலும் தடுப்பூசிகளும்!

2021-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒமிக்ரான் வேரியன்டால் இந்தியாவில் மூன்றாவது அலை ஏற்பட்டது. ஆனால் இந்த அலையின்போது போதுமான படுக்கை வசதிகளும், ஆக்ஸிஜன் சிலிண்டர்களும் கைவசம் இருந்ததால் தொற்றை சமாளிப்பது கொஞ்சம் எளிதாக இருந்தது. இது தவிர பலர் தடுப்பூசி செலுத்தி இருந்ததும் நோய்த்தொற்றின் பரவலைக் குறைத்தது.

ஒமிக்ரான்

இந்தியாவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனிகா நிறுவனங்களோடு இணைந்து தடுப்பூசி உருவாக்கும் பணியை 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தொடங்கியது. அதன் விளைவாக 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1.1 கோடி டோசேஜ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்பட்டன. ஹைதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் தடுப்பூசியை உற்பத்தி செய்து அதற்கான அவசரகால ஒப்புதலை 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் மத்திய மருந்து கட்டுப்பாட்டு நிறுவனத்திடம் பெற்றது.

தடுப்பூசி முகாம்கள்!

இந்தியாவில் 2021-ம் ஆண்டு ஜனவரி 16-ம் தேதி முதல், தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. முதலில் முன்களப் பணியாளர்களுக்கும் வயதானவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட்டது. தடுப்பூசி செலுத்தி கொள்ள ஆரம்ப காலத்தில் சிலர் பயந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக தடுப்பூசி செலுத்திக் கொள்வோர் எண்ணிக்கை அதிகமானது.

கோவிஷீல்டு – கோவாக்ஸின்

அதன்படி 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 100 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்திய மைல்கல்லை இந்தியா எட்டியது. 2022-ம் ஆண்டு ஜனவரி முதல் பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணியும் தொடங்கியது. இன்றைய‌ நிலவரப்படி இந்தியாவில் 220 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்டது.

இந்தியா தடுப்பூசிகளை மற்ற நாடுகளுக்கு கொடுத்து உதவிய நிகழ்வும் நடைபெற்றது. இதுவரை 90 நாடுகளுக்கு கோவிட் 19 தடுப்பூசி அனுப்பப்பட்டுள்ளது.

தற்போதைய நிலை!

இந்தியாவில் மூன்று அலைகள் ஏற்பட்ட பின் ஒமிக்ரானின் இன்னும் சில திரிபுகள் ஆங்காங்கே கண்டுபிடிக்கப்பட்டாலும் அவற்றால் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் தோன்றவில்லை. இது மக்களிடம் ஏற்பட்டுள்ள எதிர்ப்பாற்றலை உணர்த்துகிறது. நோய்த்தொற்றுக்கு உள்ளாகியும் தடுப்பூசி செலுத்தப்பட்ட காரணத்தாலும் மக்களின் மத்தியில் மந்தை எதிர்ப்பாற்றல் உருவாகி உள்ளதாகக் கூறப்படுகிறது. இதுவே தற்போது எந்த பெரிய பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாப்பதாக அரசு தரப்பில் கூறுகின்றனர்.

முகக்கவசம்

அதே நேரம் கடந்த சில நாள்களாக, தமிழகம், கேரளா உள்பட நாட்டின் சில மாநிலங்களில் கொரோனா தாக்கம் மீண்டும் தலைதூக்கியுள்ளது. எனவே, கொரோனா முழுமையாக கட்டுக்குள் இருப்பதாக நாம் கருதி, அலட்சியமாக இருந்துவிடக்கூடாது.

பொதுவெளியில் முகக்கவசம் அணிவது, கைகளை சோப்பு போட்டுக் கழுவுவது உள்ளிட்ட நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கைகளை மேற்கொண்டு, பாதுகாப்பாக இருப்போம்.

 

Author: செ. சுபஸ்ரீ

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.