தமிழ்நாட்டின் திராவிட மாடல் கொள்கை இந்தியா முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் இந்த வேளையில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் புகழை கெடுக்கும் வகையில் மிகப்பெரிய சதித்திட்டம் நடந்து இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பரவிய வதந்திகள், போலி வீடியோக்கள் இதன் பின்னணியில் உருவானவை தான் என்பது இப்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. மகளிர் நல திட்டம், மகளிர் பாதுகாப்பு, மாணவர்களுக்கு காலை உணவு திட்டம், பெண்களுக்கு இலவச பேருந்து, சாதி, மத பேதம் இல்லாமல் அனைவருக்கும் நல்ல தரமான கல்வி, சுகாதாரம், மருத்துவம் இன்னும் அத்தனை துறைகளிலும் மக்கள் நலன் சார்ந்த அரசாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்த திமுக ஆட்சி செயல்பட்டு வருகிறது. எந்த துறை சார்ந்த குறைகள் என்றாலும் உரிய அமைச்சர்கள் கவனத்திற்கு கொண்டு சென்றுவிட்டால் உடனடியாக தீர்க்கப்பட்டு வருகிறது. அதற்கும் மேல் அத்தனை மாவட்டங்களிலும் முதல்வர் மு.க.ஸ்டாலினே நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகிறார். இன்னும் சொல்லப்போனால் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், எஸ்பிக்கள், துறை மூத்த அதிகாரிகளிடம் பிரச்னைகளை பற்றி ஆய்வு செய்து அதற்கு தீர்வும் வழங்கி வருகிறார். எப்போதும் ஓய்வறியாது மக்களை தேடி, தேடிச் சென்று சந்திப்பதும், அவர்களின் குறைகளை கேட்பதும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழக்கம். இப்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் உயர் அதிகாரிகளை சந்தித்து மக்கள் நலத்திட்டங்களை அமல்படுத்த உழைப்பது அவரது பழக்கமாக மாறிவிட்டது. இதனால் அத்தனை துறைகளிலும் தமிழ்நாடு தனி முத்திரை பதித்து வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழ் பரவி வருகிறது. அத்தனை மாநிலங்களில் உள்ள முக்கிய அரசியல் தலைவர்களும் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நட்பு பாராட்டி வருகிறார்கள். தேசிய தலைவர்கள் அனைவரும் தேடி வருகிறார்கள். குறிப்பாக பா.ஜவுக்கு எதிரான வலுவான எதிர் அணியை உருவாக்கும் பணியில் முதல்வர் மு.க.ஸ்டாலினைத்தான் இந்த நாடே எதிர்பார்த்து காத்து இருக்கிறது. நாடு முழுவதும் புகழ் பெற்று வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியின் மீதும், அவர் மீது நட்பு கொண்டு இருக்கும் வட இந்திய தலைவர்கள் மீதும் பழிபோடும் விதமாகத்தான் வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக வதந்தியையும், அதற்கு துணையாக ஏராளமான போலி வீடியோக்களையும் சமூக வலைத்தளங்களில் பரப்பி விட்டு இருக்கிறார்கள்.இந்த சதியில் உபி மாநில பா.ஜ செய்தித்தொடர்பாளர் பிரசாந்த் குமார் உம்ராவ்விற்கு தொடர்பு இருப்பதையும், இங்கே உள்ள பா.ஜ தலைவர் அண்ணாமலை வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படும் விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கேட்டு இருப்பதையும் பார்க்கும் போது இது திட்டமிட்டு உருவாக்கப்பட்டு இருக்கும் சதியாகத்தான் உணர வேண்டியது இருக்கிறது. இப்போது சதிவலை பின்னியவர்கள் மக்கள் மன்றத்தில் அம்பலப்பட்டு நிற்கிறார்கள். மு.க.ஸ்டாலின் என்றால் உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்று மனம் குளிர பாராட்டியவர் கலைஞர். அப்படிப்பட்ட தனது உழைப்பால் தான் மு.க.ஸ்டாலின் இந்த உயரத்தை எட்டியிருக்கிறார். இந்த 22 மாதத்தில் நல்லாட்சி தந்து தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்றியிருக்கிறார். அவரது ஆட்சிக்கும், அவரது நற்புகழுக்கும் களங்கம் ஏற்படும் வகையில் தான் நாடுதழுவிய அளவில் பா.ஜ பின்னணியில் மாபெரும் சதிவலை பின்னப்பட்டு இருப்பதாக சந்தேகம் எழுகிறது. அதையும் தனது கடும் உழைப்பாலும், நேர்மையான பணியாலும் அவர் வெற்றி கொள்வார் என்பதில் ஐயம் இல்லை.
Author : Dinakaran