மருத்துவமனை உள் நோயாளிகள், கல்லூரி விடுதி மாணவர்களுக்குத் தபால் வாக்குரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் பரிசீலித்துவருகிறது.

இது குறித்து தொடர்ந்து வலியுறுத்தி மனு அனுப்பிவரும் மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொதுக்குழு உறுப்பினருமான செய்யது பாபுவிடம் பேசினோம். “ஒவ்வொரு சட்டமன்றத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தலின்போதும் 100 சதவிகித வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் விளம்பரம் செய்கிறது. இதற்காக பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகிறது. ஆனால், அனைத்தும் பேச்சளவில்தான் இருக்கிறதே தவிர நடைமுறைப்படுத்துவதில்லை.
தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு மட்டும் தபால் வாக்குரிமை வழங்கப்படுகிறது. ஆனால், தேர்தல் நேரத்தில் மருத்துவமனை உள் நோயாளிகள், வெளியூர், வெளி மாநிலங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள், வியாபாரிகள், தனியார் துறை ஊழியர்கள் எனப் பலரும் வாக்களிக்க முடியாமல் பாதிக்கப்படுகிறார்கள். அதனால் 100 சதவிகித வாக்குப்பதிவு என்கிற தேர்தல் ஆணையத்தின் இலக்கு வெற்று கோஷமாகத்தான் இருக்கிறது.

தேர்தலின்போதும், வேட்பாளரின் வெற்றி தோல்வியை ஒரேயொரு வாக்குகூட தீர்மானிக்கும் நிலை ஏற்பட்டிருப்பதைப் பார்க்கிறோம். அதனால் ஆட்சியே மாறுகிறது. அப்படியான சூழலில் அனைத்துத் தரப்பினருக்கும் வாக்குரிமையை உறுதிப்படுத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை.
உதாரணத்துக்கு மதுரை மாவட்ட அரசு மருத்துவமனைகளில் உள் நோயாளிகள் சுமார் பத்தாயிரம் பேர் இருப்பார்கள். அவர்களுக்கு உதவியாளராக ஒரு பத்தாயிரம் பேர் இருப்பார்கள். தனியார் மருத்துவமனைகளில் பல ஆயிரம் நோயாளிகள் இருப்பார்கள். இந்தியா முழுவதுமுள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் 10 கோடிக்கும் மேல் உள் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கல்லூரி விடுதிகளில் 2 கோடிக்கு மேல் மாணவர்கள் தங்கி படித்துவருகிறார்கள். கிட்டத்தட்ட மொத்தம் 12 கோடி வாக்காளர்கள் தங்கள் வாக்கை செலுத்த முடியாத நிலையில் இருக்கிறார்கள். இது குறித்த தரவுகளைப் பெற்று, இவர்கள் அனைவரும் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்ற தபால் வாக்குரிமையை வழங்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர், தமிழ்நாடு தேர்தல் ஆணையருக்குத் தொடர்ந்து மனு அனுப்பிவருகிறேன்.
சமீபத்தில் நடந்த தேர்தல்களில் 80 வயதைக் கடந்தவர்கள், பத்திரிகையாளர்களுக்குத் தபால் வாக்குரிமை வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், என்னுடைய மனுவை தமிழகத் தேர்தல் ஆணையம் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியிருப்பதை எனக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியிருக்கிறார்கள். அதில், என்னுடைய கோரிக்கையை பரிசீலிக்கும்படி இந்திய தேர்தல் ஆணையத்துக்குப் பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கின்றனர். இது மட்டும் சரியாக நடந்தால் நம் நாட்டில் 100 சதவிகித வாக்குப்பதிவு சாத்தியமாகும்” என்றார்.
Author: செ.சல்மான் பாரிஸ்