மும்பை அருகில் உள்ள விரார் மலைப்பகுதிக்கு காதல் ஜோடியினர் நடைபயிற்சிக்காக சென்றனர். அவர்கள் மலையில் ஏறி ஒதுக்குப்புறமான ஒரு இடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். இருவருக்கும் 20 வயது இருக்கும். அப் போது அங்கு வந்த இரண்டு பேர் காதல் ஜோடியை போட்டோ எடுத்துக்கொண்டு, அதனை சோஷியல் மீடியாவில் வெளியிடப்போவதாக மிரட்டி பணம் கேட்டனர். ஆனால் அந்தப் பெண்ணுடன் வந்தவரிடம் போதிய பணம் இல்லை. எனவே அவர் தன் நண்பருக்கு போன் செய்து பணம் அனுப்பும்படி கேட்டுக்கொண்டார்.
பணம் வந்த பிறகும் இருவரும் அப்படியே செல்லாமல் அந்தப் பெண்ணை தொடக்கூடாத இடத்தில் தொட்டனர். இதனால் கோபமடைந்த அந்தப் பெண்ணின் காதலன் அருகில் கிடந்த காலி பீர் பாட்டிலை எடுத்து அதனை இருவரில் ஒருவன் தலையில் ஓங்கி அடித்தார். உடனே இரண்டு பேரும் சேர்ந்து காதலனை மடக்கிப்பிடித்தனர். அவரின் ஆடைகளை அவிழ்த்துவிட்டு அருகிலிருந்த மரத்தில் கட்டி வைத்தனர். பின்னர் அவருடன் வந்த பெண்ணை அருகில் இருக்கும் இடத்துக்கு கடத்திச் சென்றனர்.

மரத்தில் கட்டி வைக்கப்பட்டு இருந்தவர் போராடி தன் கட்டை அவிழ்த்துக்கொண்டு நிர்வாணமாகவே அருகில் தன் காதலியை தேடிப்பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை. இதனால் அப்பகுதி வழியாக வந்த சிலரிடம் போன் செய்ய உதவும்படி கேட்டார். ஆனால் அவர் நிர்வாணமாக இருந்ததால் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கருதி யாரும் உதவ முன் வரவில்லை. ஆனால் ஒருவர் மட்டும் உண்மையை உணர்ந்து அவருக்கு தன் போனை கொடுத்து போலீஸாரிடம் பேசக்கொடுத்தார். உடனே சம்பவ இடத்துக்கு போலீஸார் விரைந்து வந்து அவருக்கு மாற்று உடை கொடுத்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இது குறித்து ராஜேந்திர காம்ப்ளே, “அந்தப் பெண்ணுடன் வந்த வாலிபர் எங்களிடம் என்ன நடந்தது என்று சொன்னவுடன் பெண்ணை தேட ஆரம்பித்தோம்.
அந்தப் பெண்ணின் போன் ஆப் செய்யப்பட்டிருந்தது. அவர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. ஆனால் பாதிக்கப்பட்ட வாலிபர் குற்றவாளிகளில் ஒருவரின் தலையில் பீர் பாட்டிலால் அடித்ததில் காயமடைந்திருந்தார். எனவே தலையில் காயத்துடன் யாராவது வந்தால் உடனே தகவல் கொடுக்கும்படி வாட்ஸ் ஆப் மூலம் தகவல் கொடுத்தோம். உடனே ஒரு கிளினிக் டாக்டர் அது போன்ற காயத்துடன் ஒருவர் சிகிச்சைக்காக வந்திருப்பதாக தெரிவித்தார். அந்த நபரின் புகைப்படத்தை அனுப்ப சொல்லி குற்றவாளி அவர் தான் என்பதை உறுதி செய்து கொண்டு விரைந்து சென்று இரண்டு பேரையும் கைது செய்தோம் என்றார். அவர்களது பெயர் தீரஜ் ராஜே (25) மற்றும் லட்சுமண் ஷிண்டே (22) என்று தெரிய வந்தது.
பள்ளிப்படிப்பை பாதியில் கைவிட்டுவிட்ட இரண்டு பேரும் வீரார் கிழக்கு பகுதியில் வசித்து வந்தனர். போலீஸ் தனிப்படை அந்தப் பெண்ணை தேடி அவரின் வீட்டுக்குச் சென்றனர். அங்கு அந்தப் பெண் இருந்தார்.
அவரை சமாதானப்படுத்தி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று புகார் செய்யும்படி கேட்டுக்கொண்டனர். அந்தப் பெண் போலீஸாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், இரண்டு பேரும் ஒதுக்குப்புறமான இடத்துக்கு கடத்திச்சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். என் மொபைல் போனை பறித்துக் கொண்டு என் பேக்கை தீ வைத்து எரித்துவிட்டு ,என்னை காட்டுக்குள் விட்டு சென்றுவிட்டனர்.

அதோடு என்னுடைய நண்பரை கட்டி வைத்திருக்கும் இடத்துக்கு செல்லாமல் அதிர்ச்சியில் அப்படியே வீட்டுக்கு வந்துவிட்டேன்’ என்று தெரிவித்திருக்கிறார். மிரட்டி பணம் பறித்தல், பாலியல் வன்கொடுமை ஆகிய பிரிவுகளில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர். குற்றம் நடந்து இரண்டு மணி நேரத்தில் குற்றவாளிகள் இரண்டு பேரும் கைதுசெய்யப்பட்டனர்” என்று தெரிவித்திருக்கிறார்.
Author: மு.ஐயம்பெருமாள்