நானும் கணவரும் முதுமையில் வாழும் தம்பதி. எங்களுக்கு ஒரு மகள், இரண்டு மகள்கள். மகள்தான் மூத்தவர். ஆட்டிசம் பாதிப்புக்கு உள்ளானவர். கணவர், நான் இருவருமே அரசுப் பணியில் இருந்ததால், வசதிக்கு ஒன்றும் குறைவில்லை. எனவே, பள்ளி, சிகிச்சை என எங்கள் மகளுக்கு சௌகர்யமான சூழலிலேயே அவளை வளர்த்தோம். மகன்கள் இருவருக்கும் திருமணம் முடித்தோம். தனிக்குடித்தனம் சென்றார்கள். நான், கணவர், மகள் எங்கள் வீட்டிலேயே வசித்து வருகிறோம்.

எங்கள் மகன்கள் இருவரும், தன் அக்கா மீது அதிக பாசமாக இருந்தனர். ஆனால், எல்லாம் அவர்கள் திருமணம் வரைதான். திருமணத்துக்குப் பிறகு, அவர்கள் மனைவிகளுக்கு எங்கள் மகளைப் பிடிக்கவில்லை, மேலும் என் மகளை என் மகன்கள் இருவரும் மிகவும் பாசமாகப் பார்த்துக்கொண்டது அதைவிடப் பிடிக்கவில்லை. எனவே, கொஞ்சம் கொஞ்சமாக அவளை விட்டு என் மகன்களை விலகவைத்தனர். அவர்களுக்குக் குழந்தை பிறந்தபோது, என் மகள் மீதான விலக்கம் அவர்கள் இருவரது குடும்பத்துக்கும் இன்னும் அதிகமானது.
என் மகன்கள் மாறிப்போனது பற்றியோ, அவர்கள் குடும்பம் என் மகளை ஒதுக்குவது பற்றியோ எனக்கும் என் கணவருக்கும் அதிர்ச்சி இல்லை. இவையெல்லாம் நாங்கள் எதிர்பார்த்ததுதான். என்றாலும், மகன்களின் இந்த நடவடிக்கை மாறுதல் குறித்த வருத்தம் இருந்ததுதான். ஒரு கட்டத்தில் இருவரும் எங்களிடம் வந்து, ‘நாம அக்காவை இல்லத்துல சேர்த்துடலாம்’ என்று சொன்னபோது, அதுவரை பொறுமையாக இருந்த நானும் கணவரும் அவர்களைத் திட்டி அனுப்பிவிட்டோம். ’எங்கள் ஆயுள்வரை எங்கள் மகளை நாங்கள் நன்றாகப் பார்த்துக்கொள்வோம், யாருடைய ஆலோசனையும் தேவையில்லை’ என்று கோபப்பட்டோம்.

ஆனால், வயதாக ஆக, எனக்கும் என் கணவருக்கும் மகள் குறித்த கவலைகள் வளர்ந்துகொண்டே வருகின்றன. எங்களுக்குப் பின் எங்கள் மகளை யார் பார்த்துக்கொள்வார்கள், பாதுகாப்புத் தருவார்கள் என்ற கேள்வி தினம் தினம் இப்போது எங்களை துக்கத்தில் ஆழ்த்துகிறது. எங்கள் மகளுக்கு, முடிந்தவரை சுயசார்புடன் வாழப் பழகிக்கொடுத்திருக்கிறோம். சாப்பிடுவது, குளிப்பது, தன் பொருட்களை தானே எடுத்துவைப்பது என அடிப்படை பழக்கங்களை எல்லாம் வழக்கப்படுத்தி இருக்கிறோம். ஆனால், அதைத் தாண்டி எதுவும் தெரியாது. குறிப்பாக, அவ்வப்போது நோய்வாய்ப்படும்போது ஒரு குழந்தையின் கவனம்தான் அவளுக்குக் கொடுக்கப்பட வேண்டியிருக்கிறது.
எங்களிடம் நிறைய பணம் உள்ளது. எனவே என் மகன்களிடம், ஒருவேளை நானும் கணவரும் இல்லாமல் போய்விட்டால், அவர்கள் இருவரில் யாராவது ஒருவரது வீட்டில் ஓர் அறையில் என் மகளை தங்கிக்கொள்ள மட்டும் அனுமதித்தால் போதும், அவளை தினமும் ஒரு ஹோம் நர்ஸ் உடனிருந்து கவனித்துக்கொள்ள ஏற்பாடு செய்துகொள்ளலாம், அந்த ஹோம் நர்ஸுக்கான தொகையையும், எங்கள் மகளின் ஆயுள்கால பராமரிப்புக்கும் தேவைப்படும் தொகையையும் நாங்கள் அவர்களிடம் கொடுத்துவிடுகிறோம் என்று பேசினோம். ஆனால் இருவருமே அதற்கு சம்மதிக்கவில்லை. அவர்கள் மனைவிகள் சம்மதிக்க அனுமத்கவில்லை. இது நாங்கள் எதிர்பார்த்த பதில்தான் என்பதால் அதிக ஏமாற்றம் இல்லை. மேற்கொண்டு அவர்கள், ‘பொண்ணை பத்தியே நினைச்சுட்டு இருக்காதீங்க. முதல்ல எங்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரிச்சுக் கொடுங்க’ என்று கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

இப்போது, மனநலம் குன்றியவர்களுக்கான பராமரிப்பு இல்லங்கள் பற்றி விசாரிக்க ஆரம்பித்திருக்கிறோம். நாங்கள் உயிருடம் இருக்கும்போதே, எங்களுக்குப் பின் எங்கள் மகள் அங்கு தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்துமுடித்துவிட நினைக்கிறோம். ஆனால், அங்கு மகளுக்கு பாதுகாப்பு இருக்குமா? பராமரிப்பு கனிவுடன் இருக்குமா? இன்று நல்லதாகத் தெரியும் இல்லங்கள் நாளையும் அப்படியே தொடருமா? ஒருவேளை நாளை அந்த இல்லத்தில் ஒரு பிரச்னை என்றால், என் பெண்ணின் கதி என்ன? இதையெல்லாம் நினைத்து முதுமையில் நிம்மதியைத் தொலைத்துத் தவிக்கிறோம். மகளுக்கு, எங்களுக்கு வழி என்ன?
Author: அவள் விகடன் டீம்