நடப்பு நிதியாண்டு (2022-23) இன்னும் எட்டு நாள்களில் முடிவடைய இருக்கிறது. இந்த நிதியாண்டு முடிவடைவதற்குள் நாம் முடிக்க வேண்டிய முக்கிய நிதி தொடர்புடைய விஷயங்களைப் பற்றித் தெரிந்துகொள்வோம்…
1. வங்கிக் கணக்குடன் கேஒய்சி இணைப்பு
வங்கிக் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் தம்மைப் பற்றிய விவரங்களை வங்கிக்கு 2023 மார்ச் 31-ம் தேதிக்குள் தெரியப் படுத்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது. வாடிக்கையாளர்கள் தமது வங்கி இணையதள வசதி மூலமாகவோ, கைபேசி மூலமாகவோ, நேரடியாக வங்கியை தொடர்புகொண்டோ இந்த விவரங்களைக் கொடுக்கலாம்.
ஆதார் கார்டு, பாஸ்போர்ட் போன்ற விவரங்களை கே.ஒய்.சி சான்றாக வழங்கலாம். இந்த மாத இறுதிக்குள் இந்த விவரங்களைக் கொடுக்கத் தவறினால் வங்கி பரிவர்த்தனைகள் செய்வதில் சிக்கல் ஏற்படலாம். அதனால், வங்கிக் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் தமது கேஒய்சி விவரங்கள் வங்கிக்கு தெரியப்படுத்தி விட்டீர்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

2. பான் நம்பருடன் ஆதார் நம்பரை இணைப்பது
தனி நபர்கள் ஒவ்வொருவரும் தனது பான் நம்பருடன் ஆதார் நம்பரை இணைப்பதற்கு மார்ச் 31-ம் தேதியைக் கடைசி நாளாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது. இந்த இறுதித் தேதிக்குள் இணைக்கத் தவறினால் ஆதார் நம்பரை மீண்டும் இணைப்பதற்கு 1,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். இதைச் சுலபமாக வருமான வரித் துறை இணையதள வசதி மூலமாகச் செய்து முடிக்க முடியும். அதனால் ஆதார் நம்பரை இதுவரை இணைக்காமல் இருப்பவர்கள் உடனடியாக வருமான வரி இணைய தளத்தின் மூலம் ஆதார் நம்பரை இணையுங்கள்.
3. ஆயுள் காப்பீட்டு பாலிசிகளுக்கு வருமான வரிவிலக்கு
சென்ற பட்ஜெட்டில் ஆயுள் காப்பீடு திட்டங்களில் (யூலிப் தவிர்த்து) ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய்க்கு மேல் பிரீமியம் செலுத்தினால், ஏப்ரல் 1, 2024-ம் ஆண்டு முதல் அதிலிருந்து கிடைக்கும் வருமானத்துக்கு வரி செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. ஆனால், இந்த வரி விதிப்பு மார்ச் 31 வரை எடுக்கும் பாலிசிகளுக்குப் பொருந்தாது. அதனால் ரிஸ்க் குறைவான ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களில் கூடுதல் தொகை முதலீடு செய்ய விரும்பும் நபர்கள் இந்த நிதியாண்டு இறுதிக்குள் புதிய திட்டங்களில் சேர்ந்தால் வருமான வரி விதிப்பில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

4. வருமான வரிச் சலுகை பெற முதலீடு
வருமான வரிச் சட்டம் 80-சி பிரிவின் கீழ் ஆண்டுக்கு ரூ.1.50 லட்சம் வரையிலான முதலீட்டுக்கு வருமான வரிச் சலுகை கிடைக்கும். இந்தச் சலுகை பெறுவதற்கு முதலீடுகளை நிதியாண்டு முடிவடைவதற்குள் செய்ய வேண்டும். ஆயுள் காப்பீடு பாலிசிகள், வங்கி ஃபிக்ஸட் டெபாசிட், இ.எல்.எஸ்.எஸ் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு போன்ற பல்வேறு திட்டங்களில் தமக்கு தோதான திட்டத்தைத் தேர்ந்தெடுத்து முதலீட்டை மேற்கொள்ளலாம். மருத்துவ காப்பீடு மூலம் வரிச் சலுகை பெறுவதற்கும் இந்த நிதி ஆண்டு முடிவடைவதற்குள் பிரீமியம் கட்ட வேண்டும். மேலும், மாத ஊதியம் பெறும் அரசு மற்றும் தனியார் துறை சார்ந்த ஊழியர்கள் தமது முதலீட்டு விவரங்களை படிவம் 12BB மூலம் தெரியப்படுத்துவதற்கு கடைசி தேதி மார்ச் 31 ஆகும்.
5. மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் நாமினி சேர்ப்பு
மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் மூலம் முதலீட்டை மேற்கொள்பவர்கள் தமது நாமினி விவரங்களை மார்ச் 31-க்குள் தெரியப்படுத்த வேண்டும். அவ்வாறு தெரியப்படுத்த தவறினால் அந்தக் கணக்கு முடக்கப்பட்டுவிடும். நாமினி விவரங்களை மியூச்சுவல் ஃபண்ட் அலுவலகங்களைத் தொடர்பு கொண்டோ, அல்லது மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் அதிகாரபூர்வ இணையதளத்திலோ தெரியப்படுத்தலாம். அதனால் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்துள்ளவர்கள் உடனடியாக தமது நாமினி விவரங்களைத் தெரியப்படுத்துங்கள்.

அவசியம்
6. பிஎம் வய வந்தன யோஜனா திட்டம் (PM Vaya Vandhana Yojana Scheme)
இந்தத் திட்டத்தில் அதிகபட்சமாக 15 லட்சம் ரூபாய் வரை முதலீட்டை மேற்கொள்ளலாம். இந்த முதலீட்டுக்கு 7.4% வட்டி வழங்கப்படும். இந்த முதலீடு மூலம் மாதம்தோறும் நிரந்தர வருமானம் பெற முடியும். சீனியர் சிட்டிசன்களுக்கு மிகவும் பயனுள்ள இந்தத் திட்டத்தில் மார்ச் 31-க்குள் முதலீட்டை மேற்கொள்ள வேண்டும்.
Author: ஷியாம் ராம்பாபு