மகிழ்ச்சியில் மகளிர்

7

தி முக ஆட்சிக்கு வந்த பின் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் மட்டுமின்றி, மகளிர் நலன் காக்கும் திட்டங்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். முதல்வராக பொறுப்பேற்றதும் போட்ட முக்கிய கையெழுத்துகளில், பெண்களுக்கு அரசு நகரப் பேருந்துகளில் இலவச பயணத் திட்டம் அனைவராலும் பாராட்டை பெற்றது. இதன்மூலம் பள்ளி, கல்லூரி மாணவிகள், சுயதொழிலில் ஈடுபடுபவர்கள், கல்வி மற்றும் பிற தொழில்களுக்கான பயிற்சிக்கு செல்பவர்கள், பெண் கூலித்தொழிலாளர்கள் பயனடைந்து வருகின்றனர். நாளொன்றுக்கு சுமார் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் தமிழ்நாடு முழுவதும் நகரப் பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்கின்றனர். இதுவரை சுமார் 100 கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் இலவச பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.தொடர்ந்து மகளிர் ேபாலீசாருக்கு சாலையோர பாதுகாப்பு பணியில் இருந்து விலக்கு, பேறுகால விடுப்பு 9 மாதங்களில் இருந்து ஓராண்டு, அரசு பணியிடங்களில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு 40 சதவீதமாக உயர்த்தப்பட்டது போன்றவை வரவேற்பை பெற்றன. அரசுப்பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்த மாணவிகளுக்கு உயர்கல்வியை உறுதி செய்யும் வகையில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதன்மூலம் மாணவிகள் உயர்கல்வி இடைநிற்றல் தடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் கல்லூரியில் படிக்கும் காலம் வரை அவர்களின் வங்கிக்கணக்கில் மாதம் ரூ.1,000 செலுத்தப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் இதன்மூலம் பயனடைந்து வருகின்றனர். அடுத்ததாக, பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை திட்டம் எப்போது அறிவிக்கப்படுமென தமிழ்நாட்டு பெண்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். கடந்த சில மாதங்களாகவே இதற்கான பணிகள் நடந்து வந்தன. தகுதியுடைய பயனாளிக்கு இத்திட்டம் போய் சேர வேண்டுமென அரசு  தீவிரமாக செயல்பட்டது. 20ம் தேதி தமிழக நிதிநிலை அறிக்கை தாக்கலில் இதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளது. தமிழக பட்ஜெட்டில் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை திட்டம் குறித்து அறிவிப்பு வெளியிட உள்ளதாக மகளிர் தினத்துக்கான வாழ்த்துச் செய்தியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதனால் பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் நேற்று நடந்த சர்வதேச மகளிர் தின விழாவில் பங்கேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘‘திமுக அரசு பெண்களுக்கு சொத்தில் சம உரிமை சட்டத்தை கொண்டு வந்தது. உள்ளாட்சி தேர்தலில் 33 சதவீத இட ஒதுக்கீட்டை கலைஞர் கொண்டு வந்தார். அது தற்போது 50 சதவீமாக உயர்ந்துள்ளது. ஏழை பெண்களுக்கு இலவச எரிவாயு அடுப்புகள் வழங்கியது, 1 முதல் 5ம் வகுப்பு வரை அரசு பள்ளி ஆசிரியர்களாக மகளிரை நியமித்தது, டாக்டர் தர்மாம்பாள் கைம்பெண் மறுமண திட்டம், அஞ்சுகம் அம்மையார் கலப்பு திருமண உதவி திட்டம் என எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்து மகளிர் முன்னேற்றத்திற்கு வழிவகை செய்தது திமுக அரசு. பெண்களை அனைத்து வழிகளிலும் முன்னேற்றம் அடைய செய்து வருகிறது நம்முடைய திராவிட மாடல் அரசு. பெண்கள் பாதுகாப்பு உணர்வுடன், அச்சமின்றி வாழ்வதற்கான மாநிலமாக தமிழ்நாடு விளங்கிக் கொண்டிருக்கிறது’’ என கூறியுள்ளார். பெண்கள் முன்னேற்றம் பெறும் மாநிலமாக மட்டுமின்றி, பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாகவும் தமிழ்நாடு விளங்குவதற்கு, மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசே முக்கிய காரணமென்பது மிகையல்ல.

Author : Dinakaran

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.