மகளிர் நலன்

40

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு மகளிர் நலன் காக்கும் அரசாக உள்ளது. பெண்களுக்கு அரசு பஸ்சில் இலவசமாக இருக்கட்டும், உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்குவதாக இருக்கட்டும் அல்லது குடும்பத்தலைவிகளுக்கு அறிவிக்கப்பட்ட உரிமைத் தொகையாக இருக்கட்டும் அது சமூகப்புரட்சிக்கு வித்திடக்கூடிய ஒன்றாக மாறி உள்ளது என்றால் அது மிகையல்ல. பெண்கள் வளம்பெறும் போதுதான் நாடு வளம்பெறும் என்பதில் உறுதியாக உள்ளவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். அதனால் மகளிர் நலன் சார்ந்த திட்டங்களுக்கு அவர் அதிக முன்னுரிமை கொடுத்து வருகிறார். மகளிர் பாதுகாப்பில் நம்பர் 1 மாநிலம் தமிழ்நாடு என்ற இடத்தை அடையக்காரணம் அவர் தான். ஒரு ஆண் வேலைக்கு சென்றால் குடும்பம் முன்னேறும். ஆனால் பெண் வேலைக்கு சென்றால் சமூகமே வளர்ச்சி அடையும் என்பதில் மாறாத கருத்து கொண்டவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். அந்தவகையில் குடும்ப தலைவிகளுக்கு அளிக்க இருக்கும் மாதம் ரூ.1000 உரிமைத்தொகை நிச்சயம் சமூகத்தில் பொருளாதார மாற்றங்களை உருவாக்கும். அதுவும் பெண்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக பணம் சென்று சேர்வது இன்னும் கூடுதல் பலன் அளிக்கும். திட்டமிட்டு அந்த பணத்தை அவர்கள் செலவிட வழிவகுக்கும். அரசு பஸ்களில் இலவசம் திட்டத்தால் வேலைக்கு செல்லும் ஒவ்வொரு மகளிருக்கும் எவ்வளவு பணம் மிச்சமோ, அது போன்ற பயனை நிச்சயம் இந்த உரிமைத்தொகை வழங்கும் திட்டம் குடும்பத்தலைவிகளுக்கு வழங்கும். இந்த நிதியாண்டில் இதற்காக பட்ஜெட்டில் ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஏறத்தாழ 1 கோடி குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்பட உள்ளது. ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் வழங்கப்பட இருக்கிறது. இந்த நிதி நிச்சயம் பெண்களின் வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக இருக்கும். சமூகத்தில் சுயமரியாதை உணர்வுடன் அவர்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த இந்த திட்டம் பயன் அளிக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. குறிப்பாக உழைக்கும் பெண்கள் அனைவருக்கும் இந்த உரிமைத்தொகை அவர்களின் உழைப்புக்கும், திறனுக்கும் மதிப்பளிக்கும் ஒன்றாக மாறிவிடுவதோடு, குடும்பத்தை நிதிபற்றாக்குறை இல்லாமல் கட்டமைக்கவும், வழி நடத்தவும் உதவி செய்யும். இந்த திட்டம் நிறைவேற்றப்படுமா, அப்படியானால் எப்படி நிறைவேற்றப்படும்? நிதி எங்கே என்றெல்லாம் கேள்வி எழுப்பினார்கள். திட்டம் தொடங்கப்படும் முன்பே பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி சாதனை படைத்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இன்னும் சொல்லப்போனால் தமிழ்நாடு அரசு வழங்கும் இந்த ரூ.1000 உரிமைத்தொகை தங்கள் வாழ்வில் சிறிதேனும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்பும் எந்த குடும்பத்தலைவியையும் திமுக தலைமையிலான அரசு கைவிட்டு விடாது என்று சட்டப்பேரவையில் உறுதியையும் அளித்து இருக்கிறார். அவர் சொன்னதை செய்வார். செய்ய முடிந்ததைத்தான் சொல்வார். கலைஞரின் வாரிசு. தான் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற அவர் எந்த எல்லைக்கும் செல்வார். அதுவும் மக்கள் நலத்திட்டங்கள் என்றால் அதை நிறைவேற்றுவதில் அவர் எடுக்கும் முன்முயற்சிகளுக்கு அவருக்கு நிகர் அவர்தான். அதனால் தான் ஆட்சி அமைத்த 2 வருடங்களுக்குள் அளித்த வாக்குறுதிகள் 80 சதவீதம் நிறைவேற்றி இருக்கிறார். எதிர்ப்பாளர்களின் கனவுகளையும் தவிடு பொடியாக்கி என்றும் மக்கள் மனதில் நிரந்தரமாக குடிபுகுந்து இருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

Author : Dinakaran

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.