சண்டிகர்: போலீசுக்கு டிமிக்கி கொடுத்து தப்பிய காலிஸ்தான் ஆதரவாளரான சீக்கிய மதபோதகர் அம்ரித்பால் சிங் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். இதனால் பஞ்சாப்பில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது. சீக்கியர்களுக்கு தனி நாடு கோரி போராடும் தடை செய்யப்பட்ட காலிஸ்தான் அமைப்பின் ஆதரவாளர் அம்ரித்பால் சிங். சீக்கிய மதபோதகர் என கூறிக் கொள்ளும் இவர், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புடனும் தொடர்புடையவர். இவரது கூட்டாளி லவ்பிரீத் சிங் சமீபத்தில் பஞ்சாப் போலீசாரால் கைது செய்யப்பட்ட போது, அம்ரித்பால் சிங் ஆதரவாளர்கள் வாள், துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அஜ்னாலா காவல்நிலையத்தை சூறையாடியதால் பதற்றம் ஏற்பட்டது.இந்த சம்பவத்தை தொடர்ந்து அம்ரித்பால் சிங்கை கைது செய்ய பஞ்சாப் போலீசார் நேற்று முன்தினம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். அம்ரித்பால் ஆதரவாளர்கள் 78 பேர் கைது செய்யப்பட்டனர். அம்ரித்பாலையும் வாகனத்தில் போலீசார் விரட்டிச் சென்றனர். ஆனால், ஜலந்தர் மாவட்டத்தில் போலீஸ் வலையிலிருந்து தப்பிய அம்ரித்பால் சிங் வேறொரு வாகனம் மூலம் தப்பினார். அவரை பிடிக்க பஞ்சாப் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அமிர்தசரஸ், ஜலந்தர், லூதியானாவில் போலீசார் நேற்று கொடி அணிவகுப்பு நடத்தினர். இன்று பிற்பகல் வரை மாநிலம் முழுவதும் மொபைல் இன்டர்நெட், எஸ்எம்எஸ் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. அம்ரித்பாலின் சொந்த கிராமமான ஜல்லுபூர் கேராவிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு அம்ரித்பால் சிங்கின் தந்தை தர்செம் சிங் காவல்துறை கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளார். எப்படியும் அம்ரித்பால் சிங்கை விரைவில் கைது செய்வோம் என போலீஸ் கமிஷனர் குல்தீப் சிங் சாஹல் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, அம்ரித்பால் தப்பிய வாகனத்தை போலீசார் நேற்று கைப்பற்றினர். அதிலிருந்து துப்பாக்கி, தோட்டாக்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அம்ரித் பால் தொடர்ந்து தலைமறைவாக இருப்பதால் பஞ்சாப்பில் பதற்றம் நீடிக்கிறது.
போலீசுக்கு டிமிக்கி கொடுத்து தப்பிய காலிஸ்தான் ஆதரவாளர் தொடர்ந்து தலைமறைவு: பஞ்சாப்பில் பதற்றம் நீடிப்பு
Advertisement
Advertisement