திருவனந்தபுரம்: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேவிகுளம் சட்டமன்ற தொகுதி தனித் தொகுதியாகும். கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் இடது முன்னணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ராஜா போட்டியிட்டு 7,848 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் தோல்வியடைந்த காங். கூட்டணி வேட்பாளர் குமார், தேர்தலை ரத்து செய்யக்கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருந்தது: தேவிகுளம் சட்டமன்ற தொகுதி ஒரு தனித் தொகுதி ஆகும். இந்து மதத்தை சேர்ந்த தாழ்த்தப்பட்டவர்கள் மட்டுமே இந்த தொகுதியில் போட்டியிட முடியும். மதம் மாறிய பிற மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு போட்டியிட தகுதி கிடையாது. ஆனால் கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற ராஜாவின் தந்தை அந்தோணியும், தாய் எஸ்தரும் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள். ராஜாவின் மனைவி ஷைனி பிரியாவும் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் ஆவார். அவர்களது திருமணம் கிறிஸ்தவ மத முறைப்படித் தான் நடந்தது. கிறிஸ்தவ மத முறையின்படித் தான் ராஜா குடும்பத்தினருடன் வாழ்கிறார். ஆனால் இவர் போலி ஆவணங்களை தாக்கல் செய்து கடந்த தேர்தலில் போட்டியிட்டுள்ளார். எனவே இந்த தேர்தலை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் கடந்த 2021ம் ஆண்டு நடந்த தேர்தலை ரத்து செய்து இன்று உத்தரவிட்டது. ஆனால் தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என்ற காங்கிரஸ் வேட்பாளர் குமாரின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் ஏற்கவில்லை. கேரள சட்டசபை கூட்டத்தொடர் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இந்த சமயத்தில் உயர்நீதிமன்றத்தின் உத்தரவு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவின் மூலம் கேரள சட்டசபையில் இடது முன்னணி எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 99லிருந்து 98ஆக குறைந்துள்ளது.
போலி ஆவணம் தாக்கல்: தனித்தொகுதியில் போட்டியிட்ட சிபிஎம் எம்எல்ஏ பதவி ரத்து.! கேரள உயர்நீதிமன்றம் அதிரடி
Advertisement
Advertisement