தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற நாளில் இருந்தே மக்களின் நல்வாழ்வுக்கு தேவையான திட்டங்களை தீட்டி அதை செயல்படுத்தியும் வருகிறார். கோட்டையில் அவர் அமர்ந்தவுடன் தேர்தல் வாக்குறுதியில் சொன்னது போலவே 5 முக்கிய திட்டங்களுக்கு கையெழுத்திட்டு, அவற்றை நிறைவேற்றியும் காண்பித்தார். மகளிருக்கு இலவச பேருந்து பயண திட்டம், இன்று நாட்டிற்கே முன்மாதிரியாக திகழ்கிறது. இத்திட்டத்தால் பெண்கள் பெரும் தொகையை மிச்சப்படுத்தி குடும்ப செலவுக்கு பயன்படுத்தி வருகின்றனர். நாட்டில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி திட்டமும் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு, அனைத்து தரப்பினரின் வரவேற்பையும் பெற்று வருகிறது. பள்ளிக்கு படிக்க வரும் குழந்தைகள் காலை உணவு இன்றி கஷ்டப்படக்கூடாதே என்ற முதல்வரின் நல்லெண்ணத்தில் உதித்ததே இத்திட்டமாகும். தமிழ்நாடு முதல்வராக அவர் வருவதற்கு முன்பு, தொகுதிகள் தோறும் சென்று மக்கள் மத்தியில் மனுக்கள் பெற்றபோது, இப்போதைய எதிர்க்கட்சி தலைவர்கள் எள்ளி நகையாடினர். ஆனால் முதல்வராக பதவியேற்றவுடன், அதற்கென தனிப்பிரிவு தொடங்கி, பொதுமக்களின் குறைகளை எல்லாம் அவர் தீர்த்து வைத்தபோது, அதிமுகவினரே அசந்து போயினர். மக்களைத் தேடி மருத்துவம், நான் முதல்வன் திட்டம், இலக்கிய மாமணி விருது, கலைஞர் எழுதுகோல் விருது, கல்லூரி மாணவர்களுக்கு தேகப்பயிற்சி திட்டம், கோயில்களில் அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம், பத்திரிகையாளர்களுக்கான நல வாரியம், இல்லம் தேடிக் கல்வி என தமிழ்நாடு அரசின் இப்போதைய திட்டங்கள் மற்ற மாநிலங்களுக்கு மாடலாக திகழ்கின்றன. பெரியார் பிறந்த நாளில் சமூக நீதி நாள் உறுதிமொழி, அம்பேத்கர் பிறந்த நாளில் சமத்துவ உறுதிமொழி, வள்ளலார் பிறந்த நாளில் தனிப்பெரும் கருணை நாள் என மகத்துவ தலைவர்களை மதிப்பதிலும் மு.க.ஸ்டாலின் அரசு முன்நின்றது. இளைய சமுதாயத்தை வார்த்தெடுப்பதிலும் இப்போதைய அரசு தீட்டி வரும் திட்டங்கள் ஏராளம். மாவட்டங்கள் தோறும் புத்தகக் கண்காட்சி, 20 புதிய கலை அறிவியல் கல்லூரிகள், உயர்கல்வி வேலை வழிகாட்டி முகாம்கள், கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு மாதம் ₹1000 என புதிய திட்டங்கள் மூலம் அடுத்த தலைமுறையை அரவணைக்கவும் தவறவில்லை. சமூகத்தில் புரையோடி கிடக்கும் சீர்கேடுகளை ஒழித்திடும் வகையில் போதைப்பொருள் ஒழிப்பு திட்டம், ஆன்லைன் ரம்மி ஒழிப்பு சட்டம் என மக்கள் நலன் நாடும் அரசாக இந்த அரசு வெற்றி நடைபோட்டு வருகிறது. பெண்களுக்கு மாதாந்திர உரிமை தொகை ₹1000 வழங்கும் திட்டமும் விரைவில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு செயலாக்கம் பெற உள்ளது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் இந்த அறிவிப்பால் பெண்கள் மத்தியில் உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது. முந்தைய அதிமுக அரசு போல தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு, நம்பிய மக்களை நட்டாற்றில் விடும் பழக்கம் திமுக அரசிடம் எப்போதும் இருந்ததில்லை. இலவச செல்போன் கொடுப்போம், ஒரு லிட்டர் ஆவின் பால் ₹25க்கு தருவோம், மாணவர்களின் கல்விக் கடன்களை அடைப்போம் என வாக்குறுதி அளித்துவிட்டு, இறுதி வரை மக்களை ஏமாற்றிய அதிமுக அரசின் அவலங்களை மக்கள் இன்னமும் மறக்கவில்லை. திமுக அரசு தேர்தலுக்கு முன்பு அறிவித்த வாக்குறுதிகளில் 85 சதவீதம் இப்போது நிறைவேற்றப்பட்டு விட்டன. சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்து வரும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த ஆட்சி ‘பொற்கால ஆட்சி’ என்பதில் துளியளவும் சந்தேகமில்லை.
Author : Dinakaran