புதுடெல்லி: கறுப்பு நிற ஆடைகள் அணிந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்று (திங்கள்கிழமை) டெல்லியில் பேரணி மேற்கொண்டனர். நாடாளுமன்ற வளாகம் தொடங்கி விஜய் சவுக் பகுதி வரை இந்தப் பேரணி நடந்தது. அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற நிலைக்குழு விசாரணை நடத்த வேண்டும், ராகுல் காந்தி தகுதி நீக்கத்திற்கு கண்டனம் உள்ளிட்டவற்றை முன்வைத்து இந்தப் பேரணி நடத்தப்பட்டது. காங்கிரஸ் எம்.பி. சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் தலைமையில் பேரணி நடந்தது. முன்னதாக, இவர்களுடன் காங்கிரஸ், தோழமைக் கட்சிகள் எம்.பி.க்கள் இணைந்து நாடாளுமன்ற வளாக காந்தி சிலை முன்னால் திரண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
வாய்மையே வெல்லும், ஜனநாயகத்தைப் பாதுகாப்போம் என்ற வாசகங்கள் அடங்கிய பிரம்மாண்ட பேனர்களை ஏந்தியிருந்தனர். பின்னர் அனைவரும் ஒன்றிணைந்து விஜய் சவுக் நோக்கி பேரணியாகச் சென்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, "கடந்த சில ஆண்டுகளில் மட்டும் கெளதம் அதானியின் சொத்து எப்படி இவ்வளவு அதிகரித்தது. வெளிநாடுகளுக்குச் செல்லும்போது எத்தனை முறை பிரதமர் மோடி தன்னுடன் அதானியை அழைத்துச் சென்றிருக்கிறார். இது போன்ற கேள்விகளுக்கு எல்லாம் பிரதமரிடம் பதிலே இல்லை. எங்களுக்குத் தேவை அதானி விவகாரத்தை விசாரிக்க நாடாளுமன்ற நிலைக்குழு அமைக்க வேண்டும் என்பதே. ஆனால், இதற்கு அரசு ஏன் ஒப்புக்கொள்ள மறுக்கிறது. அவர்கள் மறுக்கிறார்கள் என்றால் எங்கோ ஏதோ தவறு இருக்கிறது என்றுதானே அர்த்தம்.
கறுப்பு நிற ஆடைகள் அணிந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்று (மார்ச் 27) டெல்லியில் பேரணி மேற்கொண்டனர். நாடாளுமன்ற வளாகம் தொடங்கி விஜய் சவுக் பகுதி வரை இந்தப் பேரணி நடந்தது.
Author: செய்திப்பிரிவு