பெண் ஆர்டர் செய்த செக்ஸ் டாய்ஸ், நோட்டீஸ் அனுப்பிய கஸ்டம்ஸ்; விளக்கமளித்து மீட்ட பெண் வழக்கறிஞர்!

12

சென்னை, மீனம்பாக்கம் விமான நிலையத்தில், பொதுச்சமூகத்திற்கு குந்தகம் (public morality) விளைவிப்பதாகக் கூறி, ஆன்லைனில் பெண் ஒருவர் ஆர்டர் செய்த செக்ஸ் டாய்ஸை கஸ்டம்ஸ் அதிகாரிகள் கைப்பற்றினர். பின்னர் அதற்கான விளக்கத்தை ஏற்று அதை டெலிவரி செய்தனர்.

சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது தனிப்பட்ட தேவைக்காக செக்ஸ் டாய்ஸை, ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளார். வெளிநாட்டில் இருந்து டெலிவரிக்காக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வந்திருந்த அந்த பொருள்களை, கஸ்டம்ஸ் அதிகாரிகள், பொதுச் சமூகத்திற்கு குந்தகம் (public morality) விளைவிக்கக் கூடிய பொருள் இது எனக்கூறி கைப்பற்றியிருந்தனர்.

வழக்கறிஞர் திலகவதி

மேலும், இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு நோட்டீஸ் அனுப்பினர். அதில், `நீங்கள் நேரில் ஆஜராகி இதுகுறித்து விளக்கம் அளிக்கவில்லை எனில், இந்திய தண்டனைச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று எச்சரித்திருந்தனர்.

இதுகுறித்து, சென்னையைச் சேர்ந்த அந்த பெண், மற்றும் அவர் தரப்பு வழக்கறிஞர் திலகவதி விளக்கம் அளித்தனர். அதை ஏற்ற கஸ்டம்ஸ் அதிகாரிகள், பின்னர் அந்தப் பொருள்களை சம்பந்தப்பட்ட பெண்ணிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து வழக்கறிஞர் திலகவதியிடம் பேசினோம். அவர், “எனக்கு முகநூலில் அறிமுகமான நண்பர் ஒருவர்தான், கஸ்டம்ஸின் இந்த நடவடிக்கை குறித்துத் தெரிவித்திருந்தார். அவரின் தோழியின் பிரச்னையாக இதனை தெரிவித்தபோது, இது குறித்து ஸ்டடி செய்ய ஆரம்பித்தோம்.

இந்திய தண்டனைச் சட்டம் 292-ன்படி ஆபாசமான, பாலியல் சம்பந்தப்பட்ட எழுத்துகள், ஓவியம், பொருள்கள், வீடியோ, போட்டோ போன்றவற்றை பயன்படுத்துவது, வணிக நோக்கில் பாலியல் சிந்தனையைத் தூண்டுவது போன்றவை தண்டனைக்குரிய குற்றம். அதேபோல கஸ்டம்ஸ் சட்டத்தின் படியும் பொதுச்சமூகத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய பொருள்களை கைப்பற்றலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையம்

ஆனால், இந்தச் சட்டங்களில் செக்ஸ் டாய்ஸ் பற்றியோ, அதைப் பயன்படுத்துவது தவறானது என்றோ எங்குமே குறிப்பிடப்படவில்லை. இந்தியாவைப் பொறுத்தவரை செக்ஸ் டாய்ஸ் வாங்குவதும், விற்பனை செய்வதும் தடை செய்யப்பட்டிருந்தாலும், இது வேறு நாட்டை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் நிறுவனத்திடம் இருந்து ஆர்டர் செய்யப்பட்டது. இவற்றையெல்லாம் எடுத்துக் கூறி விளக்கினோம். அதன் அடிப்படையில் சட்டங்களை மேற்கோள்காட்டி, கஸ்டம்ஸ் அதிகாரிகளிடம் விளக்கக் கடிதம் கொடுத்தோம்.

மேலும், செக்ஸ் டாய்ஸ் பயன்படுத்துவது என்பது தனிப்பட்ட மனிதர்களின் உரிமை, இது Right to privacy-ன் படி அடிப்படை உரிமைகளின் கீழ் கூட கொண்டு வர இயலும். அதனால் இதனை தடுப்பது என்பது அடிப்படை உரிமைகளை தடுப்பது போன்றதாகும்.

அடிப்படை உரிமைகள் தொடர்பான புட்டசுவாமி வழக்கு, KAVITA PHUMBHRA Versus COMMISSIONER OF CUSTOMS Calcutta வழக்கு என இந்த இரண்டு வழக்குகளையும் மேற்கோள்காட்டி, எங்களிடம் நேரில் கேட்கப்பட்ட விளக்கத்திற்கு பதில் அளித்தோம். எங்களின் விளக்கத்தை ஏற்றுக் கொண்டதுடன் அந்தப் பொருள்களையும் கஸ்டம்ஸ் அதிகாரிகள் விடுவித்து சம்பந்தப்பட்டவரிடம் சேர்த்தனர்” என்றார்.

sex toys

தொடர்ந்து திலகவதி கூறுகையில், “Public morality என்பது காலத்திற்கேற்ப மாறக்கூடியது. முன்பு ஒருகாலத்தில் சதி, குழந்தைத் திருமணம் போன்றவை சமூகத்தில் பரவியும், பின்பற்றப்பட்டும் இருந்தன. தற்போது அப்படி இல்லை. அதுபோல தேவைகளுக்கும், காலத்திற்கும் ஏற்ப அந்த morality மாறும்.

செக்ஸ் டாய்ஸ் பயன்படுத்த நிறைய காரணங்கள் இருக்கலாம். மருத்துவரீதியாக, தேவை ரீதியாக, இன்னும் சொல்லப்போனால் கணவன் – மனைவி இடையே பரிசளிக்கக்கூடியதாக எனப் பல விதங்களில் பயன்படுத்த முடியும். இதன் மூலம் சமூகத்தில் பிரச்னைகளோ, சீர்கேடோ ஏற்பட வாய்ப்பில்லை’’ என்றார்.

 

Author: வெ.கௌசல்யா

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.