நாட்டில் அனைத்து இடங்களிலும் பெண்கள் இப்போது ஆட்டோ ஓட்ட ஆரம்பித்துள்ளனர். ஆண்கள் மட்டுமே காணப்பட்ட ஆட்டோ ஓட்டும் தொழிலில், இப்போது படிப்படியாக பெண்கள் கால் பதிக்க ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில், ஜம்மு கேஷ்மீரின் முதல் பெண் ஆட்டோ டிரைவர் என்ற சாதனையைச் செய்துள்ளார் ரஞ்சீத் கவுர். தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுலா மற்றும் விவசாயம் தான் மக்களின் பிரதான வருமானமாக இருக்கிறது. அதுவும் சில நேரங்களில் கைக்கொடுக்காமல் போய்விடுகிறது.

இத்தகைய சூழலில், ஜம்முவில் முதன்முறையாக ஒரு பெண் ஆட்டோ ஓட்டும் பணியை ஆரம்பித்திருக்கிறார். ஜம்மு மாவட்டத்தில் உள்ள குஞ்ச்வானி என்ற கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சீத் கவுர் என்ற பெண், ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ஆட்டோ வாங்கி ஓட்ட ஆரம்பித்திருக்கிறார். ஆரம்பத்தில் கவுர் ஆட்டோ ஓட்டுவதை பார்த்த பலரும் கிண்டல் செய்தனர். ஆனால் இப்போது எங்கு சென்றாலும் தனக்கு மக்கள் நல்ல மரியாதை கொடுப்பதாக கவுர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ரஞ்சீத் கவுர் கூறுகையில், “ஆரம்பத்தில் நான் ஆட்டோ ஓட்டுவதை பார்த்து விமர்சனம் செய்தவர்கள் இப்போது என்னைப் பார்த்து பாராட்டுகின்றனர். எனது தைரியத்தை பயணிகள் ரசிக்கின்றனர்.
தினமும் 1500 முதல் 2000 ரூபாய் வரை சம்பாதிக்கிறேன். பெண்கள் பணத்திற்காக கணவன், தந்தையை சார்ந்திருக்ககூடாது. ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தால் நான் இப்போது யாரையும் சார்ந்திருக்கவில்லை. எனது குடும்பத்திற்கு எதுவும் செய்யாமல் என்னால் இருக்க முடியவில்லை. எனவே என் கணவருக்குத் தோள் கொடுக்க முடிவு செய்தேன். அவரும் ஆட்டோதான் ஓட்டுகிறார்.
நான் ஓட்டோ ஓட்டுவது என்று முடிவு செய்து அதனை என் கணவரிடம் தெரிவித்தபோது, அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. போராடித்தான் சம்மதிக்க வைத்தேன். அவர் சம்மதித்தவுடன் ஊரக வேலைவாய்ப்புக்காக அமைக்கப்பட்ட குழுவில் சேர்ந்து எலக்ட்ரிக் ஆட்டோ வாங்கி ஓட்டுகிறேன்.

எந்த வேலையையும் தேர்ந்தெடுக்க வெட்கப்படக்கூடாது. நான் செய்யும் இந்த வேலையால் நான் திருப்தியடைவதோடு எனது குடும்பத்திற்கும் உதவ முடிகிறது. அடுத்தவர்களின் விமர்சனத்தை நாம் ஏன் கண்டுகொள்ள வேண்டும்? கடவுளை விட எந்த வேலையும் குறைந்தது இல்லை என்று நம்புகிறேன். உங்கள் வேலையை நீங்கள் வழிபட ஆரம்பித்துவிட்டால் என்னை நம்புவீர்கள்.
கனவுகளை நனவாக்க கடுமையாக உழையுங்கள். எத்தனையோ படித்த பெண்கள் வேலை இல்லை என்று கூறி வீட்டில் இருக்கின்றனர். அரசு பெண்களுக்காக பல வேலை வாய்ப்பு திட்டங்களைத் தொடங்கி இருக்கிறது. அதனை பெண்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’’ என்று தெரிவித்தார்.
Author: மு.ஐயம்பெருமாள்