புவி வெப்பமாதல் – நெருங்கும் முடிவு? – பூவுலகின் நண்பர்கள் அறிக்கை

7

ஐ.பி.சி.சி, 2030ஆம் ஆண்டுக்குள் இதுவரை மேற்கொண்ட முயற்சிகளாலும்,திட்டங்களாலும் புவிவெப்பநிலை சராசரியாக 1.5°C அளவுக்கு உயர்வதைத் தடுக்க முடியாது என்கிற அபாய எச்சரிக்கையை வழங்கியுள்ளது.

2015 ஆம் ஆண்டு தொடங்கி இதுவரை ஆறு அறிக்கைகளை ஐ.பி.சி.சி. வெளியிட்டிருந்தது. இந்த ஆறு அறிக்கைகளிலும் கூறப்பட்டுள்ள முக்கியமான அம்சங்களை 93 அறிவியலாளர்கள் தொகுத்து இறுதி அறிக்கையாக இப்போது வெளியிட்டுள்ளனர்.

காலநிலை மாற்றங்களுக்கான பன்னாட்டு அரசாங்கங்களின் குழு (ஐ.பி.சி.சி) என்பது பல்வேறு அறிவியலாளர்களை கொண்ட ஒரு குழுவாகும். இந்த ஐ.பி.சி.சி. அமைப்பானது 1988ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அவையின் சுற்றுச்சூழல் திட்டம் மற்றும் உலக வானிலை அமைப்பால் இணைந்து உருவாக்கப்பட்டது. இதன் நோக்கம் என்பது உலக நாடுகளுக்கு காலநிலை மாற்றம் குறித்த கொள்கையை உருவாக்குவதற்கான அறிவியல் பூர்வ தகவல்களை அளிப்பதாகும்.

ஐ.பி.சி.சி

பன்னாட்டு அளவில் காலநிலை மாற்றம் குறித்த உரையாடல்களுக்கு முக்கியமான கருவியாக ஐ பி சி சி தயாரித்து வெளியிடும் அறிக்கைகள் விளங்குகின்றன. இந்த அமைப்பில் தற்போது 195 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த அமைப்பானது தன்னிச்சையாக ஆய்வுகள் எதையும் மேற்கொள்ளாது. பல்வேறு நாடுகளில் உள்ள அறிவியலாளர்கள் மேற்கொள்ளும் ஆய்வுகளை குழு அமைத்து ஆராய்ந்து அதன் மூலம் காலநிலை மாற்றத்திற்கான காரணங்கள், தாக்கங்கள், எதிர்கால ஆபத்துகள், தடுப்பு மற்றும் மட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து அறிக்கைகளாக வெளியிடுகிறது.

வெப்பநிலை உயர்வு

இதன் முதல் பணிக்குழு அறிக்கையின் படி வெளிமண்டலத்தில் நிரம்பி இருக்கும் பசுமை இல்ல வாயுக்களின் செறிவுக்கு மனித நடவடிக்கைகள் மட்டுமே காரணம் என்றும். அனைத்து நாடுகளும் இதன் உற்பத்தியை கட்டுப்படுத்தினாலும் இந்த நூற்றாண்டின் இறுதியில் புவியின் சராசரி வெப்பநிலை 3°C தொட்டுவிடும் என்றும் எச்சரித்திருந்தது. இந்த வெப்பநிலை உயர்வால் வெள்ளம், கனமழை, வறட்சி, புயல், காட்டுத்தீ போன்ற இயற்கை பேரிடர்கள் அதிகரிக்கும் என்று தெரிவித்திருந்தது.

இருப்பினும் ஐ.பி.சி.சி, இந்த மீளமுடியாத பாதிப்பின் வேகத்தையும் தாக்கத்தையும் சில நடவடிக்கைகளால் தடுக்க முடியும் என சிறு நம்பிக்கையையும் அளித்துள்ளது. புவியின் நிலம், கடல், நன்னீர் ஆகியவற்றில் 30-50% பகுதிகளை பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவித்தால் மட்டுமே புவியை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும் என்று கூறியுள்ளது.

வெப்பநிலை உயர்வு

மேலும் உணவு, மின்னுற்பத்தி, போக்குவரத்து, கட்டுமானம், நிலப் பயன்பாடு ஆகியவற்றில் மாற்றங்களைக் கொண்டு வருவதன் மூலம் உமிழ்வைக் குறைக்கலாம் எனத் தெரிவித்துள்ளது

இந்த தொகுப்பு அறிக்கையின் கூறப்பட்டுள்ள முக்கியமான கருத்துகள் பின்வருமாறு:

• வளிமண்டலம், பனிமண்டலம், உயிர்மண்டலம் ஆகியவற்றில் புவி வெப்பமாதலால் வேகமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

• மனிதர்களால் உந்தப்பட்ட காலநிலை மாற்றம் ஏற்கெனவே நம் புவியின் எல்லா பகுதிகளிலும் நிலவும் வானிலையைப் பாதித்துவிட்டது.

வெப்பநிலை உயர்வு

• காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் புவி வெப்பமடைதலுக்கு மிகவும் குறைவான பங்களிப்பை வழங்கிய நாடுகளைச் சேர்ந்த மக்கள் அதிகம் பாதிப்படைந்துள்ளனர்.

• புவி வெப்பமாதலைத் தடுக்கும் பணிகளுக்கான நிதி ஆதாரங்கள் போதுமானதாக இல்லை.

• உமிழ்வைக் குறைப்பதற்கான உலக நாடுகள் சமர்ப்பித்த திட்டங்களால் புவியின் சராசரி வெப்பநிலை 1.5° C அளவுக்கு உயருவதைத் தடுக்க முடியாது.

காலநிலை மாற்றம் இப்புவியில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் பெரும் சவாலாக மாறியுள்ளதை ஐ.பி.சி.சி.யின் தொகுப்பு அறிக்கை நமக்கு உணர்த்துகிறது. மீளமுடியாத பாதிப்பிலிருந்து புவியைக் காப்பதற்காக நமக்கிருக்கும் வாய்ப்புகளை மிகக் குறுகலாக்கி வருகிறது.

வெப்பநிலை உயர்வு

அவசரகால நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே பாதிப்புகளைக் குறைக்க முடியும் என்கிற நிலையில், இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து முயற்சிகளுக்கும் எதிர் பாதையில் இந்திய அரசு பயணித்து வருவதுதான் மிகவும் வேதனையளிக்கக் கூடிய விஷயமாகும்.

இந்திய அரசின் காலநிலை மாற்றம் தொடர்பான திட்டங்கள் எதுவுமே பெருமளவில் நமக்குப் பலனளிக்கக் கூடியவையாக இல்லை. தொடர்ந்து புதைப்படிம ஆற்றல் பயன்பாட்டை விரிவுபடுத்துவதை இந்திய அரசு நிறுத்த வேண்டும். தமிழ்நாடு அரசும் இனிமேல் மேற்கொள்ளவுள்ள திட்டங்கள் அனைத்தையும் காலநிலை மாற்ற கண்ணோட்டத்தில் அணுக வேண்டும். இதனைக் கருத்தில்கொண்டு தமிழ்நாட்டுக்கென காலநிலை மாற்றக் கண்ணோட்டத்தில் நிலப் பயன்பாட்டுக் கொள்கை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என பூவுலகின் நண்பர்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

 

Author: ஷாஜன் கவிதா

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.