கார்குழல் விரித்து கண்ணீரோடு பாண்டிய மன்னனிடம் கண்ணகி நீதி கேட்ட சங்கத்தமிழ் நகரம் மதுரை. இந்த மாநகரில் அநீதி இழைத்தவர்களுக்கு கண்ணகி வழங்கிய தண்டனையே இன்றைய தீர்ப்புகளுக்கான ஆதார விதை. அரசர்கள் தவறான தீர்ப்பை வழங்கக்கூடாது என்பதை நீதியரசர்களுக்கு தொடர்ந்து உணர்த்திக் கொண்டிருக்கும் நீதியின் தத்துவம். இத்தகைய வரலாற்று பெருமை பொதிந்த மாநகரில் ரூ.166 கோடியில் கட்டப்படும் கூடுதல் நீதிமன்ற கட்டிடங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஓய்.சந்திரசூட் தலைமை வகித்து பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இந்தவிழாவில் முதல்வர் ஆற்றிய உரையானது நீதியரசர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் ரூ.315 கோடியில் பல்லடுக்கு மாடிகள் கொண்ட ஒருங்கிணைந்த கட்டிடம், அம்பேத்கர் சட்டக்கல்லூரி கட்டிடத்தை பாரம்பரியம் மாறாமல் புதுப்பிக்க ரூ.23 கோடி, வழக்குரைஞர் நலநிதிக்கு அரசு சார்பில் ரூ.8 கோடி மானியம், சேமநலநிதி ரூ.7 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சமாக உயர்வு, புதிதாக பதிவு செய்யப்பட்ட ஆயிரம் இளம் வழக்குரைஞர்களுக்கு ஊக்கத்தொகையாக மாதம் ரூ.3 ஆயிரம் என்று முதல்வர் பட்டியலிட்டது நீதியரசர்களின் கவனத்தை ஈர்த்தது. அதேபோல் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழில் வெளியாகி இருப்பது ‘மிகுந்த சிறப்பு-மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று நன்றி பாராட்டியவர், மதுரையில் உயர்நீதிமன்ற கிளை அமைவதற்கு கலைஞரின் முயற்சியே காரணம் என்பதையும் கம்பீரமாக வெளிப்படுத்தினார். நீதித்துறையின் மேம்பாட்டுக்கு தமது அரசு செய்துள்ள பணிகள், தாய் தமிழுக்கு உச்ச நீதிமன்றத்தில் கிடைத்துள்ள அங்கீகாரம் என்று கோடிட்டு காட்டிய முதல்வர், முத்தான மூன்று கோரிக்கைகளையும் நீதியரசர்கள் முன்பு வைத்தார். ‘சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழை அங்கீகரிக்க வேண்டும். சென்னை, மும்பை கொல்கத்தாவில் உச்சநீதி மன்ற கிளையை நிறுவ வேண்டும். எங்களது கோரிக்கைகளை ஒன்றிய அரசும், நீதித்துறையும், உச்சநீதிமன்றமும் நிறைவேற்றித் தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்,’’ என்பதே முதல்வர் முன்வைத்த கோரிக்கைகள். இவை அனைத்திற்கும் முத்தாய்ப்பாக அமைந்தது முதல்வர் நிறைவாக பேசிய வரிகள். ‘உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியை உறுதி செய்ய வேண்டும். நீதித்துறையானது சுதந்திரமாகவும், தன்னிச்சையாகவும் இயங்கி ஒவ்வொரு சாமானியனின் இறுதி நம்பிக்கையையும் காப்பாற்றட்டும். நீதித்துறையின் செயல்பாடுகள் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும். சட்டநீதியோடு, சமூகநீதியும் இணைந்து கிடைக்க நீதித்துறை அமைப்புகள் வழிவகை செய்ய வேண்டும்,’’ என்று நீதியோடு, சமூகநீதியை இணைத்தது தான் திராவிட மாடலின் தீவிர வெளிப்பாடு.சமூகநீதியை மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் நிலைநாட்டி நாட்டிற்கே வழிகாட்டும் வரலாற்று கடமையை தமிழ்நாடு தொடர்ந்து செய்திடும். திராவிட மாடல் ஆட்சி அதற்காக அயராது உழைத்திடும் என்ற நிலையில் இருந்து எள்ளளவும் மாறாதவர் முதல்வர். இனம், மொழி, மதம் கடந்து தமிழ்நாட்டில் நிறைவேற்றப்படும் சமூகநீதிக்கான திட்டங்கள் அனைத்தும் உலக அரங்கிலும் கவனம் ஈர்த்து வருகிறது. இந்தநிலையில் இந்திய தேசத்தின் தலைமை நீதிபதி முன்னிலையில் முதல்வர் வைத்துள்ள சமூகநீதிக்கான கோரிக்கை, ஒரு புதிய விடியலுக்கான கோட்பாடு என்றால் அது மிகையல்ல. இந்திய தலைமை நீதிபதியின் பாராட்டு, இதற்கொரு பாதை அமைக்கும் என்பது சமூக மேம்பாட்டு ஆர்வலர்களின் நம்பிக்கை.
Author : Dinakaran