நாடு முழுவதும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்து வரும் நிலையில் குற்றங்களும் அதிகரித்து வருகிறது. ஐ.நா.,வின் கண்காணிப்பு பிரிவான சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கட்டுப்பாடு வாரியம் நடப்பாண்டு வெளியிட்டுள்ள வருடாந்திர அறிக்கை இதை உறுதி செய்துள்ளது. அதில் ‘இந்தியாவை பொறுத்தவரை போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் ஆன்லைன் மூலமாகவே அதிகளவில் நடக்கிறது. அதேபோல் கடல் மார்க்கமாகவும் அதிகளவில் கடத்தல் நடக்கிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் கடந்த 5 ஆண்டுகளில் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களும், அதனை பறிமுதல் செய்யும் நிகழ்வுகளும் வழக்கத்தை விட அதிகளவில் நடந்துள்ளது என்பதையும் கோடிட்டு காட்டியுள்ளது. போதைப்பொருட்களில் பிரதானமாக பறிமுதல் செய்யப்பட்டிருப்பது ஹெராயின். கடந்த 2017ம் ஆண்டு 2,146 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது அடுத்தடுத்த ஆண்டுகளில் அதிகரித்து, அதன் தொடர்ச்சியாக 2022ம் ஆண்டில் 7,282 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது 2017ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 70 சதவீதம் அதிகமாகும். கடந்த 2021 செப்டம்பர் மாதம், குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் கன்டெய்னரில் இருந்து 3 டன் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது அதிர்வுகளை ஏற்படுத்தியது. அப்போது அரபிக்கடல் மார்க்கத்தில் போதைப்பொருட்கள் கடத்தல் சரளமாக நடப்பது உறுதி செய்யப்பட்டது. இங்கே ஹெராயின் என்பது ஒரு ஒப்பீடு மட்டுமே. இதேபோல் அபின், கோகைன், மெத்தாம்பேட்டமைன், கேட்டமைன் போதை மாத்திரைகளும் அதிகளவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் கடத்தல் மட்டுமன்றி உற்பத்தியும் இந்தியாவில் நடப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் ஏராளமான கெமிக்கல் மற்றும் மருந்து நிறுவனங்கள் உள்ளன. இவற்றின் மூலம் போதைப்பொருட்களும், போதை மாத்திரைகளும் உற்பத்தி செய்யப்படுவதும் ஐ.நா.,வின் அறிக்கையில் அம்பலமாகியுள்ளது. இது ஒருபுறமிருக்க, சமீபத்தில் போதைப்பொருள் பயன்பாடுகள் குறித்த ஆய்வு ஒன்றை தன்னார்வ அமைப்புகள் நடத்தியுள்ளது. இந்த ஆய்வில், இந்தியாவில் போதை வஸ்துகளுக்கு அடிமையானவர்களில் 45 சதவீதம் பேர், 18 முதல் 25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் என்றும், 33 சதவீதம் பேர் 25 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதும் தெளிவாகியுள்ளது. இந்த பட்டியலில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், கட்டுமான வல்லுநர்கள், கலையுலக பிரபலங்கள், தொழிலதிபர்கள் மட்டுமன்றி சில விஐபிக்களும் இடம்பெற்றிருப்பது உண்மையில் வேதனைக்குரியது. இவர்கள் அனைவரிடமும் ஏதாவது ஒரு நிலையில் நாளைய இந்தியாவை வழிநடத்திச் செல்ல வேண்டிய திறமை உள்ளது. ஆனால் அவர்களின் திறமைகளுக்கு போதைப்பொருட்கள் திரைபோட்டு வருவது காலத்தின் கொடுமை. தமிழகம் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் கஞ்சா, பான்பராக் போன்ற போதைப்பொருட்களை விற்கும் சமூகவிரோதிகளின் கொட்டத்தை போலீசார் நடத்தும் அதிரடி ஆபரேஷன்கள் அடக்கி வைத்துள்ளது. மாநில எல்லையில் நடக்கும் கண்காணிப்புகளும் அவர்களை கலங்கடித்துள்ளது. இந்த வகையில் இந்திய எல்லையின் அனைத்து மார்க்கங்களிலும் அபாயம் பரப்பும் விஷமிகளை விரட்டியடிக்க ஒன்றிய அரசு, வீரியத்துடன் சாட்டையை சுழற்ற வேண்டும். அதேநேரத்தில் விஞ்ஞானத்தை விஷமாக மாற்றும் மருந்து கம்பெனிகளையும் பாரபட்சமின்றி தடை செய்ய வேண்டியது காலத்தின் அவசியம். இது போதையால் பாதை மாறும் நவீன இந்தியாவின் நவயுகச்சிற்பிகளை நல்வழிக்கு திருப்பும் என்பது சமூக மேம்பாட்டு அமைப்புகளின் நம்பிக்கை.
Author : Dinakaran