மக்களவை தேர்தல்களில் 2014ல் 282, 2019ல் 303 தொகுதிகள் பிடித்து அபார வெற்றி பெற்றது பா.ஜ. இன்னும் 12 மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் வர இருக்கும் நிலையில் தொடர்ந்து 3ம் முறை வெற்றி பெறும் நடவடிக்கைகளை இப்போதே தொடங்கி இருக்கிறது. காரணம் பயம். 2019ல் இருந்த கூட்டணி இப்போது இல்லை என்பதுதான் அதில் முக்கியமான ஒன்று. அதனால் தான் எதிர்க்கட்சிகளை குறிவைத்து சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட ஒன்றிய விசாரணை அமைப்புகள் ஏவிவிடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளன. டெல்லி துணை முதல்வராக இருந்த சிசோடியா, அமைச்சராக இருந்த சத்யேந்தர் ஜெயின், சிவசேனா எம்பி சஞ்சய் ராவத், தெலங்கானா எம்எல்சி கவிதா, தேசிய மாநாட்டு கட்சி தலைவர்கள் பரூக் அப்துல்லா, மேற்குவங்க முதல்வர் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானர்ஜி வரிசையில் எதிர்க்கட்சிகள் ஆளும் ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு முக்கிய தலைவர்கள் குறிவைக்கப்படுகிறார்கள். கேரள முதல்வர் பினராயி விஜயன், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், ஏன் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலும் கூட ஏதாவது ஒருவகையில் சிக்குவார்களா என்று விசாரணை அமைப்புகள் மூலம் குடைச்சல் கொடுக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதற்கெல்லாம் முக்கிய காரணம், எதிர்க்கட்சிகள் ஒன்றாக வலுப்பெற்றுவிடக்கூடாது என்பதுதான். ஏனெனில் தமிழ்நாடு சொல்லிக்கொடுத்த பாடம் அப்படி. 2019 மக்களவை தேர்தலில் தமிழ்நாடு, புதுவையில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 39 தொகுதிகளை திமுக தலைமையிலான கூட்டணி கைப்பற்றி சாதனை படைத்தது. அதை தொடர்ந்து 2021ல் நடந்த சட்டப்பேரவை தேர்தல், அதன்பின் வந்த உள்ளாட்சி தேர்தல், ஏன் ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தலில் கூட முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அதிமுக பலம் வாய்ந்த கொங்கு மண்டலம், பாஜ கூட்டணி, இரட்டை இலை கிடைத்தும் கூட ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் படுதோல்வி அடைந்ததற்கு காரணம் திமுக தலைமையிலான பலம் வாய்ந்த கூட்டணி. சிந்தாமல் சிதறாமல் அத்தனை வாக்குகளையும் திமுக கூட்டணிக்கே பெற்றுத்தந்த முதல்வர் மு.க.ஸ்டாலினின் சாதுர்யம் இதில் அடங்கியிருக்கிறது. இதே சாதுர்யத்தை, இதே கூட்டணியை ஒவ்வொரு மாநிலத்திலும் அமைக்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்து இருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அப்படி ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜவுக்கு எதிராக வலுவாக கூட்டணி அமைத்தால் 2024ல் மீண்டும் ஆட்சி என்கிற பாஜ கனவை தகர்த்து விடலாம் என்று ஒவ்வொரு கட்சிகளுக்கும் யோசனை வழங்கியிருக்கிறார். திரிணாமுல் ஒருபுறம், சமாஜ்வாதி மறுபுறம், ஆம்ஆத்மி ஒருபுறம் என்று இழுத்துக்கொண்டு நிற்காமல் பாஜ ஒருபுறமும், மற்ற அனைத்து கட்சிகளும் மறுபுறமும் நின்றால் வரும் தேர்தலில் எளிதாக வெற்றி பெற முடியும் என்பது தமிழ்நாடு வழங்கியிருக்கும் பாடம். அந்த பாடம் தான் இப்போது பாஜவுக்கு பயத்தை உருவாக்கி இருக்கிறது. இன்னும் ஒரு ஆண்டிற்குள் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து வலுவான கூட்டணி அமைத்து விட்டால், தொடர்ந்து 3வது முறையாக ஒன்றியத்தில் ஆட்சி அமைக்கும் ஆசை கனவாகி போய்விடும் என்ற பயம் பாஜவை பிடித்து ஆட்டுகிறது. அதனால் தான் ஒவ்வொரு எதிர்க்கட்சிகளையும், ஒவ்வொரு மாநிலத்திலும் ரெய்டு என்ற பெயரில் பிரித்துப்போடும் வேலையை தொடங்கியிருக்கிறது. பாஜ கனவு பலிக்குமா என்பது போகப்போகத் தெரியும்.
Author : Dinakaran