இந்தியாவின் பெரிய ஐ.டி நிறுவனமான டி.சி.எஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ராஜேஷ் கோபிநாதன் ராஜினாமா செய்திருக்கிறார். நிறுவனத்தின் அடுத்த தலைமைச் செயல் அதிகாரியாக கே.கிருத்திவாசன் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

திருச்சியில் பிறந்துவளர்ந்த ராஜேஷ் கோபிநாதன், 1996-ம் ஆண்டு முதல் டாடா குழுமத்தில் பல நிறுவனங்களில் பணியாற்றினார். 2001-ம் ஆண்டு டாடா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் இருந்து டி.சி.எஸ் நிறுவனத்தில் இணைந்தார். 2013-ம் ஆண்டு நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாகப் பதவி உயர்த்தப்பட்டார்.
சைரஸ் மிஸ்திரிக்கும் டாடா சன்ஸுக்கும் இடையே பிரச்னை உருவானபோது, டாடா சன்ஸ் தலைவர் பொறுப்பில் இருந்து சைரஸ் மிஸ்திரி நீக்கப்பட்டார். அந்தப் பொறுப்புக்கு அப்போது டி.சி.எஸ் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்த என்.சந்திரசேகரன் நியமனம் செய்யப்பட்டார். டி.சி.எஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக ராஜேஷ் கோபிநாதன் நியமிக்கப்பட்டார்.

கடந்த ஆண்டு பிப்ரவரியில் இவரது பதவிக்காலம் அடுத்த ஐந்தாண்டு காலத்துக்கு நீட்டிக்கப்பட்டது. இவரே 2027-ம் ஆண்டு பிப்ரவரி வரையில் தலைமை செயல் அதிகாரியாகத் தொடரலாம் எனும் சூழல் இருந்தது. ஆனால், அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் விதமான ராஜேஷ் கோபிநாதன் தனது பதவியை நேற்று (வியாழக்கிழமை) ராஜினாமா செய்தார். இந்தச் செய்தியைக் கேட்டு டி.சி.எஸ் நிறுவன ஊழியர்கள் பதறிப் போனார்கள்.
இவருடைய பதவிக் காலத்தில் டி.சி.எஸ் நிறுவனப் பங்கு 156% விலை உயர்ந்திருக்கிறது. டி.சி.எஸ் நிறுவனத்தின் வருமானம் 73% வளர்ச்சி அடைந்திருக்கிறது.
டி.சி.எஸ் நிறுவனத்தில் இருந்து ராஜேஷ் கோபிநாதன் ராஜினாமா செய்தாலும், அடுத்த ஆறு மாதங்களுக்கு இவர் நிறுவனத்தில் நீடிப்பார். அடுத்து பொறுப்புக்கு வருபவரிடம் எல்லாப் பணியையும் ஒப்படைத்து, வழிகாட்ட வேண்டும் என்பதால், வரும் செப்டம்பர் மாதம் வரை அவர் இந்தப் பொறுப்பில் இருப்பார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தனது ராஜினாமாவைப் பற்றி பேசிய ராஜேஷ் கோபிநாதன், “இந்த மாற்றம் டி.சி.எஸ் நிறுவனத்துக்குப் பெரிய சிக்கலாக இருக்காது. இப்போதைக்கு எனக்கு எந்தத் திட்டமும் இல்லை. குடும்பத்துடன் சில காலம் இருக்கப்போகிறேன். வேலையை விட்டு வெளியேறுவதற்கு சரியான நேரம் என எதுவும் கிடையாது. எனது ராஜினாமா முடிவு குறித்து டி.சி.எஸ் தலைமையிடம் ஏற்கெனவே பேசி இருக்கிறேன். இப்போது நான் வெளியேறினால்தான் அடுத்த தலைமை செயல் அதிகாரிக்கு முழு நிதி ஆண்டு கிடைக்கும்.
இதுவரை என் வாழ்க்கையில் ஒரு முறை மட்டுமே ரெஸ்யூம் எழுதி இருக்கிறேன். அடுத்து என்ன என்பது குறித்து யோசிக்கவில்லை. நாம் சாலையில் நடந்து செல்லும்போது கார் ஓட்டிச் செல்கிறவர்களைப் பற்றி நினைப்பதும், நாமே கார் ஓட்டிச் செல்லும்போது சாலையில் நடந்து செல்கிறவர்களைப் பற்றி நினைப்பதும் வேறுவேறாக இருக்கும். நான் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும்போது ஆலோசகர்கள் எனக்குப் பிடிக்காது. ஆனால், இனி நானேகூட உலகின் சிறந்த ஆலோசகராக உருவாகலாம்’’ என்று சொல்லி இருக்கிறார்.

“டி.சி.எஸ் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு கோபிநாதனின் பங்கு முக்கியமானது. அவர் தலைமை நிதி அதிகாரியாக இருந்தது முதலே சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறார். நிறுவனத்தின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு அடித்தளத்தை வகுத்துக் கொடுத்திருக்கிறார்’’ என டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன் கூறியிருக்கிறார்.
டி.சி.எஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 11.74 லட்சம் கோடி ரூபாய். இவரது சம்பளம் ரூ.25.75 கோடி. கோபிநாதன் வசம் 2,760 டி.சி.எஸ் பங்குகள் உள்ளன. இவரது வெளியேற்றத்தால் பங்கு விலையில் பெரிய சரிவு இருக்காது என்றும், பங்கு விலை உயரும் என்றும் மோதிலால் ஆஸ்வால் நிறுவனம் கணித்திருக்கிறது.

டி.சி.எஸ் நிறுவனத்தில் தற்போது பிஎப்.எஸ்.ஐ. (BFSI) பிரிவின் சர்வதேச தலைவராக இருக்கும் கிருத்திவாசன், டி.சி.எஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ-வாக உடனடியாகப் பொறுப்பு ஏற்கிறார். திருச்சியில் பிறந்து, சென்னையில் படித்த இவர், 1989-ம் ஆண்டு டி.சி.எஸ் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார் 34 ஆண்டுகளாக பல முக்கிய பொறுப்புகளை அவர் டி.சி.எஸ் நிறுவனத்தில் வகித்திருக்கிறார்.
டி.சி.எஸ் நிறுவனத்தில் ஒரு திருச்சிகாரர் போய், இன்னொரு திருச்சிகாரர் வந்திருக்கிறார்.
Author: வாசு கார்த்தி