பணமாக்கப்பட்ட தங்க, வைர நகைகள்- ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் கைவரிசை காட்டிய பெண் சிக்கியது எப்படி?

15

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா, சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் தங்க நகைகள் திருட்டுப்போனது தொடர்பாக அண்மையில் புகாரளித்திருந்தார். அதில், “நான் சென்னை, போயஸ் கார்டன், ராகவேந்திரா அவென்யூவில் குடியிருந்துவருகிறேன். என்னுடைய லாக்கரில் விலையுயர்ந்த வைர, தங்க நகைகளை வைத்திருந்தேன். 2019-ல் என்னுடைய தங்கையின் திருமணத்தின்போது அந்த நகைகளை அணிந்திருந்தேன். திருமணத்துக்குப் பிறகு மீண்டும் அவற்றை வீட்டு லாக்கரில் வைத்துவிட்டேன். நான் என்னுடைய கணவர் வீட்டிலிருந்து அப்பா வீட்டுக்கு என மூன்று தடவை என்னுடைய பொருள்களையும் லாக்கரையும் இடம் மாற்றினேன். 2022-ம் ஆண்டு ஏப்ரல் 9-ம் தேதி போயஸ் கார்டன் வீட்டுக்கு நகைகளை வைத்திருந்த லாக்கரைக் கொண்டுவந்தோம்.

ஐஸ்வர்யா

லாக்கரின் சாவிகள் வைத்திருக்கும் இடம், என்னுடைய வீட்டில் வேலைபார்க்கும் ஈஸ்வரி, லட்சுமி, டிரைவர் வெங்கட் ஆகியோருக்குத் தெரியும். கடந்த 10.2.2023-ம் தேதி லாக்கரை ஓப்பன் செய்து பார்த்தபோது அதிலிருந்த விலையுயர்ந்த வைர, தங்க நகைகள் திருட்டுப்போயிருந்தன. அவற்றில், 60 சவரன் தங்க நகைகள், வைர நகைகள், நவரத்தினக் கற்கள் முதலியவை அடங்கும். எனவே, வீட்டில் வேலைசெய்யும் ஈஸ்வரி, லட்சுமி, டிரைவர் வெங்கட் ஆகியோர்மீது எனக்குச் சந்தேகம் இருக்கிறது. எனவே, திருடப்பட்ட நகைகளை மீட்டு, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார். அதன்பேரில் தேனாம்பேட்டை காவல் நிலைய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் இளங்கனி வழக்கு பதிவுசெய்து விசாரித்தார்.

ஈஸ்வரி

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அளித்த புகாரையடுத்து அவரின் வீட்டில் வேலைசெய்த, வேலையிலிருந்து விலகிய பணியாளர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலையிலிருந்து விலகிய ஈஸ்வரி என்பவர்மீது போலீஸாரின் சந்தேகப் பார்வை விழுந்தது. ஈஸ்வரி, அவர் கணவர் அங்கமுத்து என்பவரின் வங்கிப் பணப் பரிவர்த்தனைகளை போலீஸார் ரகசியமாகக் கண்காணித்தனர். அப்போது குறுகியகாலத்தில் அவர்களின் வங்கிக் கணக்கில் லட்சக்கணக்கான ரூபாய் வந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஈஸ்வரி, அங்கமுத்து ஆகியோரிடம் போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் வைர, தங்க நகைகளைத் திருடியது ஈஸ்வரி எனத் தெரியவந்தது. இதையடுத்து ஈஸ்வரியையும், அவரின் கணவர் அங்கமுத்துவையும் போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இது குறித்து நம்மிடம் பேசிய தேனாம்பேட்டை போலீஸார், “ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த மாதம் 27-ம் தேதி காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தார். அதனடிப்படையில் விசாரணையைத் தொடங்கினோம். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நீண்டகாலமாகப் பணியாற்றியவர் ஈஸ்வரி. அதனால் லாக்கர் சாவி வைக்கும் இடம் ஈஸ்வரிக்குத் தெரியும். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டிலிருந்து வேலைக்குச் செல்லும்போதெல்லாம் ஈஸ்வரி, கொஞ்சம் கொஞ்சமாக தங்க, வைர, நவரத்தின நகைகளைத் திருடிவந்திருக்கிறார். அதை யாரும் கண்டுகொள்ளவில்லை. அதனால் நகைத் திருட்டை ஈஸ்வரி தொடர்ந்திருக்கிறார். நகைகளை விற்று அதிக அளவில் பணம் வந்ததால் ஈஸ்வரி, அதைக்கொண்டு வீடு வாங்குவதற்குத் திட்டமிட்டிருக்கிறார்.

தேனாம்பேட்டை காவல் நிலையம்

இதையடுத்து சோழிங்நல்லூர் பகுதியில் 90 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீடு ஒன்றை வாங்கிய ஈஸ்வரி, அதற்கு வங்கிக் கடனையும் பெற்றியிருக்கிறார். அந்தக் கடன் தொகையை குறுகிய காலத்தில் செலுத்தியிருக்கிறார். இதுதான் ஈஸ்வரியின் மீது எங்களுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அது தொடர்பாக ஈஸ்வரி, அவரின் கணவர் அங்கமுத்துவிடம் விசாரித்தபோது இருவரும் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரிவித்தனர். மேலும், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ஈஸ்வரி, ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின் வீட்டில் வேலையிலிருந்து நிற்பதாகத் தெரிவித்திருக்கிறார். அப்போதுகூட ஈஸ்வரிமீது ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு எந்தவிதச் சந்தேகமும் வரவில்லை. தற்போது ஈஸ்வரியைக் கைதுசெய்திருக்கிறோம். திருடிய நகைகளை யார் மூலம் அவர் விற்றார் என்று விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. விரைவில் நகைகள் மீட்கப்படும்” என்றனர்.

போலீஸ் விசாரணையின்போது ஈஸ்வரி, “என்னை மேடம் நல்ல முறையில்தான் வைத்திருந்தார்கள். நான்தான் தவறு செய்துவிட்டேன்” என்று கண்ணீர்மல்கக் கூறியதாக போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 

Author: எஸ்.மகேஷ்

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.