`பூ’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மலையாள நடிகை பார்வதி. தனது 17 வருட சினிமா வாழ்வில் தமிழில், விரல் விட்டு எண்ணக்கூடிய படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் மலையாளத்தில் நல்ல கதைகளைத் தேர்வு செய்து சிறப்பாக நடித்து வருகிறார். சினிமா மட்டுமல்லாது சினிமாவில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள், சமூக பிரச்னைகள் என அனைத்துக்கும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

News Minute செய்தி சார்பில் நடத்தப்பட்ட `Women of Power’ நிகழ்ச்சியில் சினிமாத் துறையில் பெண்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பது பற்றி பேசியுள்ளார் நடிகை பார்வதி. அதில் பேசிய அவர், “எனக்கு 17-18 வயது இருக்கும்போது நான் நடித்த படத்துக்கு சம்பளம் பேச வந்தவர்கள், பணத்தை பற்றி நான் யாரிடம் பேசவேண்டும்? என கேட்டனர்.
‘என்னிடம் தான் பேசவேண்டும்… நான் தான் நடிக்கிறேன், நான் தான் வேலை செய்கிறேன்’ என கூறினேன். ஆனால் அவர்கள், ‘உங்கள் தந்தையிடம் பேசலாமா?’ என கேட்டனர். ‘நான் தான் வேலை செய்கிறேன்… பணத்தை பற்றி நானே பேசுகிறேன், என்னிடமே பேசுங்கள்’ என மீண்டும் கூறினேன். நான் பணத்தைக் கையாள்வதில் அவ்வளவு திறமையானவள் இல்லை, தற்போதுதான் அதை கற்றுக்கொண்டு வருகிறேன். இருந்தும் என் வேலைக்கான சம்பளத்தை பற்றி நான் தான் பேச வேண்டும்.

இன்னும் சிலர், தங்களுக்கென சில நெறிமுறைகளை வைத்துக்கொண்டு அவற்றின்படியே நான் நடந்து கொள்ள வேண்டும் என சொல்வார்கள். எதுவும் தெரியாமல் கண்ணை மூடிக்கொண்டு அவர்கள் பின் என்னால் செல்ல முடியாது. நான் அவர்களுடன் இணைந்து படம் நடிப்பதற்காக மட்டுமே வந்தேன். நான் என்னையும் என் வேலையையும் மிகவும் மதிக்கிறேன். என் எண்ணங்கள் அவர்களுடன் ஒத்துப்போனால் நாம் இணைந்து வேலை செய்யலாம்… இல்லையெனில் அவர்கள் வேறு ஒருவரைப் பார்க்கலாம்’ என பேசியுள்ளார்.
Author: சத்யா கோபாலன்