வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
“இரக்கத்தால் தட்டு நிறையாது, நான் என் தோழர்களுக்கு கூறுவது இதுவே: நம் மக்களின் பட்டினி போக்க, பத்து நாட்களுக்கு ஒரு வேலை உணவை, ஒரு மாதத்திற்கு மூன்று வேலை உணவை தியாகம் செய்து வழங்குங்கள்; பட்டினியில் வாடும் மக்களின் பசி போக்குவோம்!” – இந்த வார்த்தை வியட்நாம் விடுதலைக்கு போராடிய, விடுதலை பெற்றுத்தந்த ஹோசிமின் (Ho Chi Minh) கூறியதாகும்.
வியட்நாம் நாடு ஏகாதிபத்திய சக்திகள் இடம் இருந்து விடுதலை பெற்ற போது சந்தித்த முதல் பிரச்சனை பசி, பட்டினி தான். நாடு முழுவதும் வறுமை, பஞ்சம், பட்டினி கடுமையாக நிலவியது. இதனாலையே மக்கள் பலரும் உயிரிழக்கும் சூழல் ஏற்பட்டது.

அந்த நேரத்தில் ஹோசிமின் போராளிகளுக்கு இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டார். உண்மையில் இந்த அறிவிப்பு அங்கு பாரியதொரு மாற்றத்தை ஏற்படுத்தியது என்று தான் சொல்ல வேண்டும்.
இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடுகளிலும், கண்ணுக்குத் தெரியாமல் மக்கள் தினம் தினம் வருமையினால் ஒருவேளை உணவுக்கு கூட கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறார்கள்.
நாம் சாலையை கடக்கும் போதும் அன்றைய உணவுக்காக கையேந்தும் ஏராளமான மக்களை நாம் காண்கிறோம். சில நேரங்களில் பசியின் கொடுமையால் குப்பைகளில் இருந்து கூட உணவுகளை எடுத்து சாப்பிடும் ஒரு அவலமான காட்சியை கூட காண நேர்கிறது. ஆனால் அதையெல்லாம் சர்வசாதாரணமாக தான் நாம் கடந்து செல்கிறோம்.

எங்கோ இருக்கும் சோமாலியாவை பற்றி பேசுகிறோம், சமூகவலைதளங்களில் செய்திகளை பகிர்கிறோம். தப்பில்லை. ஆனால் அதே சோமாலியா மக்களை போல் நம்மை சுற்றியும் இருக்கிறார்கள் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும் என்பதே என் கருத்து. ஒரு நாட்டின் பிரச்சனையை அரசு தான் தீர்மானிக்கும் என்றால், அது சாத்தியப்படாத ஒன்றாகும். பல நேரங்களில் மக்களின் சிறிய முயற்சிகள் பல நாட்டின் தலையெழுத்தையே மாற்றி இருக்கின்றன.
ஒவ்வொரு தனி மனிதனும் ஒரு குடும்பமும் தீர்மானித்தால் பல ஊர்களில் உள்ள மக்களின் பசியையும், பட்டினியையும் போக்க முடியும். அதை பல வரலாற்று நிகழ்வுகள் உணர்த்தியுள்ளன.
இன்றைக்கு நாடு சந்திக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்று பசி தான். உலகளாவிய பசி குறியீட்டில், இந்தியா 107 வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. நம்மை விட சின்ன நாடுகள் எல்லாம் முன்னேற்றத்தை கண்டு வரும் நிலையில் நம்ம நாடு சரிவை நோக்கி சென்றுக் கொண்டிருக்கின்றது.

இதுக்குறித்து கேட்டால் அரசுகள் தட்டிக் கழிக்கும் பதிலையே சொல்லும். ஆனால் மக்களாகிய நாம் தான் தீர்வை நோக்கி செல்ல வேண்டும். நாம் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் ஏழைகளின் பசி இல்லா வாழ்வை சாத்தியப்படுத்த திட்டம் தீட்ட வேண்டும். ஹோசிமினின் திட்டத்தை கூட நாம் பின்பற்றலாம்.
பத்து நாட்களுக்கு ஒரு வேலை வீதம் ஒரு மாதத்திற்கு மூன்று வேளை உணவை தியாகம் செய்து சாப்பாட்டுக்கு வழியில்லாத மக்களுக்கு வழங்கலாம். இதை நாம் ஒரு குடும்பமாக செய்யும் பொழுது கூடுதலான மக்களின் பசியை போக்க முடியும்.
பசி ருசி அறியாது என்ற. சொல்லுவார்கள். சுவைக்காக உண்போர், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை கூட உண்பர். ஆனால் பசிக்காக உண்போர் ருசிக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள்.
எந்த உணவாய் இருந்தாலும் பரவாயில்லை, முடிந்த அளவு நாம் சார்ந்த இருக்கக்கூடிய பகுதிகளில் உள்ளவர்களுக்கு, ஒருவேளை உணவு வழங்கி பசியை போக்க, ஒரு அடி எடுத்து வைப்போம். நம்மை பின் தொடர்ந்து இந்த சமூகம் எடுத்து வைக்கும் அடி, கடைசி மனிதனின் பசியை போக்கும் என்பது நிச்சயம்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
Author: நெல்லை சலிம்