நிலம் கொடுத்த திரைப்பட நடிகை; ரூ.10 கோடி செலவு; சென்னையில் திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய கோயில்!

14

சென்னையில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்குட்பட்ட வேங்கடேசபெருமாள் கோயில் ஒன்று தி.நகர், வெங்கட்நாராயணா சாலையில் பல ஆண்டுகளாக இருந்துவருகிறது.

திருப்பதியில் பத்மாவதி தாயாருக்குத் தனிக் கோயில் இருப்பதைப் போன்று சென்னையிலும் ஒரு கோயில் கட்ட வேண்டும் என்று பக்தர்கள் பலரும் பல ஆண்டுகளாகக் கோரிக்கை வைத்திருந்த நிலையில் அதற்கான பணிகளை 2019 ம் ஆண்டு தேவஸ்தானம் தொடங்கியது. அந்த ஆலயப் பணிகள் தற்போது முடிவுபெற்று புதிய பத்மாவதி தாயார் திருக்கோயில் சென்னையில் கும்பாபிஷேகம் காண உள்ளது. மார்ச் மாதம் 17-ம் தேதி நடைபெற இருக்கும் இந்த வைபவத்துக்கான யாகசாலைப் பணிகள் தற்போது கோயில் வளாகத்தில் நடைபெற்று வருகின்றன.

சென்னை பத்மாவதி தாயார் திருக்கோயில்

சென்னை தி.நகரின் பரபரப்பான சாலைகளில் ஒன்று ஜி.என்.செட்டி சாலை. இந்த சாலையில்தான் புதிய பத்மாவதி தாயார் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த இடம் திரைப்பட நடிகை காஞ்சனாவுக்கு சொந்தமானது. அவர் திருப்பதி பெருமாள் மீது கொண்ட ஈடுபாடு காரணமாக இந்த இடத்தைக் கோயில் கட்டுவதற்காகக் கொடுத்தார்.

இந்த ஆலயம் கட்டி முடிக்க 10 கோடி ரூபாய் செலவாகியுள்ளது. நிலத்தின் மொத்த அளவு ஆறு கிரவுண்டு. மூன்று கிரவுண்டு நிலத்தில் தாயார் திருக்கோயிலும் மீதமுள்ள இடங்களில் வாகங்கள் நிறுத்துமிடம், மண்டபம், மடப்பள்ளி ஆகியன கட்டப்பட்டுள்ளன.

ஆலயத்தின் கருவறையில் திருச்சானூரில் அருள்பாலிப்பதைப்போன்ற பத்மாவதி தாயாரின் விக்ரகம் பிரதிஷ்டை செய்யப்பட இருக்கிறது. எனவே பக்தர்கள் திருப்பதி சென்று தாயாரை தரிசனம் செய்யும் அனுபவத்தை இங்கே பெறலாம் என்கிறார்கள்.

கும்பாபிஷேகப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்துவருகின்றன. கடந்த 12- ம் தேதி முதல் யாக சாலை பூஜைகள் நடந்துவருகின்றன.

திருமலை திருப்பதி வேங்கடாசலபதி மற்றும் பத்மாவதி தாயார்

காலை, மாலை இரண்டு வேளைகளிலும் ஹோமங்கள் நடைபெறுகின்றன. மார்ச் 17- ம் தேதி காலை 7.30 மணி முதல் 7.44 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதன்பிறகு காலை 10 மணி முதல் 11 மணி வரை சீனிவாச திருக்கல்யாணம் நடைபெறும். அதைத் தொடர்ந்து, பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். கும்பாபிஷேகத்தை ஒட்டி வரும் பக்தர்களுக்கு அன்னதானமும் பாதுகாப்பு வசதிகளும் முறையாகச் செய்யப்பட்டுள்ளன. கும்பாபிஷேக நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கலந்துகொள்கிறார்.

 

Author: சைலபதி

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.