பால் வெர்ஹோவன் இயக்கத்தில் 1992-ல் வெளியான க்ரைம் த்ரில்லர் ஹாலிவுட் திரைப்படம் `Basic Instinct’. இதில் கேத்தரின் டிராமெல் எனும் கதாப்பாத்திரத்தில் நடித்த ஹாலிவுட் நடிகையான ஷரோன் ஸ்டோன் இத்திரைப்படத்தின் ஒரு காட்சியில் நிர்வாணமாக நடித்திருப்பார்.
அப்போது ஷரோன் ஸ்டோனின் கதாபாத்திரம் மிகவும் தைரியமான, திறமை வாய்ந்த கதாப்பாத்திரம் என்று அவரது நடிப்பைப் பலரும் பாராட்டியிருந்தனர். இப்படத்திற்கு பிறகு ஷரோன் ஸ்டோனுக்கு நிறையப் படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

இந்நிலையில் தற்போது நேர்காணல் ஒன்றில் பேசியுள்ள ஷரோன் ஸ்டோன்(65), ‘Basic Instinct’ படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்த பிறகு தன் மகனிடம் விலகி இருந்ததாகவும், இதன் மூலம் தன் மகனை இழக்க நேர்ந்ததாகவும் உணர்ச்சி வசத்துடன் பேசியிருக்கிறார்.
இதுபற்றி பேசியுள்ள அவர், “ `Basic Instinct’ படத்தில் சில நொடிகள் மட்டுமே நான் நிர்வாணமாக இருக்கும் காட்சிகள் தோன்றும். இப்போதெல்லாம் மக்கள் சாதாரணமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில்கூட அரை நிர்வாணமாக அல்லது முழு நிர்வாணமாக நடிக்கிறார்கள். அப்படத்தில் வெறும் 16 நொடிகள் மட்டுமே நான் நிர்வணமாக இருக்கும் காட்சி தோன்றும். அதனால் என் வாழ்நாள் முழுவதும் நான் என் மகனிடமிருந்து பிரிந்து வாழும் நிலைக்கு ஆளானேன். என் கணவர் என்னிடம் விவாகரத்துக் கேட்டு நீதி மன்றத்தில் வழக்கு நடந்தது, அப்போது நீதிபதி என் மகனிடம் ‘உன் அம்மா நிர்வாணமாக நடிப்பது உனக்குத் தெரியுமா?, என்று கேட்டார். அத்தருணத்தில் என் மனம் சுக்கு நூறாக உடைந்து போய்விட்டது. அதன்பின் நான் என் மகனை பிரிந்துவிட்டேன். என் மகனை என்னால் வளர்க்க முடியாமல் போனது. இப்போது அவனுக்கு 22 வயதாகிவிட்டது” என்று உணர்ச்சி வசத்துடன் பேசினார்.
Author: மு.பூபாலன்